சே குவேரா

 சே குவேரா

மருதன்

கிழக்கு பதிப்பகம்

180 பக்கங்கள்



90களில் சேவின் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுடன் சிலரைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் கருப்பு வண்ணப் பின்னணியில் இருக்கும் அவற்றை அணிந்திருப்பவர்கள் கம்யூனிஸ்டுகளாகவே இருப்பார்கள்.


 ஒரு சில வினாடிகள் நமது பார்வையில் விழுந்தாலும் விரைவாக காண்பவரை வசீகரித்து விடும் வகையில் சேவின் முகம் அப்படங்களில் அமைந்திருக்கும்.


 பகட்டான உடைகளை அணிய காதலியிடம் மறுத்துவிடும்போதும், அரசாங்க காரினை அவசரத்துக்கு பயன்படுத்திய மனைவியை கடிந்து கொள்ளும் போதும், கமாண்டர் நிலையில் இருந்தாலும் முன் களத்திலேயே பணியாற்றி காயங்களை அடைந்த போதும் சேவின் உண்மையும் மன உறுதியும் வெளிப்படுகின்றன.


 லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து மீட்க நினைத்த புரட்சிக்காரனை 40 வயதிலேயே உலகம் இழக்க நேரிட்டது பெரும் துயரம்.


 அர்ஜென்டினாவில் பிறந்து கியூபா விடுதலைக்கு உழைத்து, வெற்றியீட்டி, பொலிவியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சேவின் சாகச வரலாறை இந்நூல் பேசுகிறது.


 பிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கைக்குரிய சகாவாக இருந்தபோதும் கிடைத்த பதவியில் அமர்ந்து கொண்டு கியூபாவில் நிலை பெற்றுவிட சே எண்ணவில்லை.


 ஓயாத அவரது துடிப்பு பொலிவியாவுக்கு அவரை இட்டுச் செல்கிறது. புரட்சி தோல்வியடைய கைகளிலும் கால்களிலும் குண்டடிபட்டு பிடிபடுகிறார் சே.


 ஜுலியா என்ற ஆசிரியருக்கு உணவளிக்கும் பணி தரப்படுகிறது.


 தான் அடைக்கப்பட்டிருக்கும் இடம் பள்ளிக்கூடம் என்று அறிந்து கொள்ளும் சே,  அந்நிலையிலும் புரட்சி வெற்றி பெற்றால் தூய்மையான பள்ளிக் கூடங்கள் அமைக்கப்படும் என்று  புன்னகையுடன் கூறுகிறார்.


 சுட்டுக்கொள்ள வருபவரிடம் 'கொஞ்சம் பொறுங்கள் எழுந்து நிற்கிறேன்' என்றும், 'ஒரு மனிதனைத்தானே கொல்லப் போகிறீர்கள்' 'சுடு' போன்ற உரையாடல்களை சேவைப் போன்ற துணிச்சலான புரட்சிக்காரன்தான் நிகழ்த்த முடியும்.


 நீங்கள் மரணிக்கவில்லை சே!

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்!! செவ்வணக்கம் தோழர்!!!

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

நாவல்