ஒரு சிறு இசை
ஒரு சிறு இசை
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்
160 பக்கங்கள்
வண்ணதாசனின் 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். முதுமையின் தளர்வுகளை, நுண்ணிய அவதானிப்புகளை, பக்குவம் எய்திய வார்த்தைப் பிரயோகங்களை 'ஒரு தாமரைப் பூ ஒரு குளம்' கதை பேசுகிறது.
சோமுவின் மரணத்தை அறிய நேரிடும் ஜான்சி, துக்கம் மேலிட நினைவுகளுடன் நிகழ்காலத்தில் பயணிக்கிறாள். மனதிற்கு நெருங்கியவர்களின் மரணங்கள் அளித்திடும் அதிர்வுகளும், நினைவு மீட்டல்களுமாக நகர்கிறது 'எண்கள் தேவையற்ற உரையாடல்கள்' கதை.
ஆசிரியர்- மாணவர் உறவின் நெகிழ்ச்சியூட்டும் தருணங்களும், அக்கம்பக்கம் குடியிருப்பவர்களுடன் மனம் ஒன்றி அமைந்துவிட்ட நம்பவே முடியாத அபூர்வ பிணைப்புகளும் வண்ணதாசனின் கதைகளில் வாசிக்க நேர்கையில் பெருமிதமும், ஏக்கமும் தோன்றி கலங்க வைக்கின்றன.
சென்ற தலைமுறையில் கிராமங்களில் சற்று வசதியான வீடுகளில் மிக விசுவாசமான பணியாளர்களை அறிந்திருப்போம். தன்வீட்டு மக்களிடம் அவர்கள் காட்டும் அன்பும், உறுதியான ஆதரவும் இத்தலைமுறை மனிதர்கள் அறிந்திராதவை. 'சந்தனம்' இதுபோன்ற நினைவுகளை எல்லாம் சுலபமாக கிளறி விட்டு தன் போக்கில் சென்று கொண்டிருக்கிறார்.
எழுதித் தீர்க்கவே முடியாத மனித வாழ்வின் வினோதங்களை சலிப்பின்றி வண்ணதாசன் தனது கவித்துவ மொழியினால் படைத்துக் கொண்டே பயணிக்கிறார்.
சிறுவயதில் விடுமுறை நாட்களில் பிள்ளைகளை கவனிக்க இயலாதவர்கள் அக்கம்பக்கத்து பாட்டிகளிடம் தனி வகுப்பு என்ற பெயரில் சிறு தொகையொன்றை அளித்து மணிக்கணக்கில் நிம்மதியாக இருந்து விடுவர்.
அச்சிறு தொகையும் கிடைக்கிறதோ இல்லையோ அப்பாட்டிகள் காட்டிய அன்பும், ஆர்வமிகுதியில் அவர்கள் சொல்லித் தந்த வண்ணமயமான கதைகளும் ஒருபோதும் சாரம் குறைந்ததாக இருந்ததில்லை.
மூக்கம்மா ஆச்சி நினைவுபடுத்திவிட்ட விடயங்கள் மேற்கண்டவை.
கதைகளை கேட்டு மகிழ இயலாத இத்தலைமுறை குழந்தைகள் துர்பாக்கியம் நிறைந்தவர்கள்.
வண்ணதாசனின் 15 கதைகளும் இறுக்கம் அடைந்துவிட்ட மனித மனங்களை சற்று ஆசுவாசம் அடையும் வகையில் தளர்த்துகின்றன. கதைகள் அளித்துவிடும் உணர்வுபூர்வமான தேறுதல்கள் அக்கலைஞனின் மேதமையை பறைசாற்றுகின்றன.
Comments
Post a Comment