வேள்வித் தீ

 வேள்வித் தீ

எம் வி வெங்கட்ராம்

காலச்சுவடு பதிப்பகம்

175 பக்கங்கள்



கண்கள், கரங்கள், கால்கள் பெரும் ஒருங்கிணைப்போடு தொடர்ச்சியாக இயங்கியாக வேண்டிய பெரும் உடல் உழைப்பைக் கோரும் பணி நெசவாளர்களுடையது.


 பள்ளிக்கு சென்ற நாட்களில் தறிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே சென்றதுண்டு. மதிய உணவு அருந்த அருகாமை நெசவாளர்களின் இல்லங்களுக்கு குழுவாகச் செல்வோம்.


 அன்பான உபசரிப்புகளுக்கும், அக்கறை மிகுந்த அறிவுரைகளுக்கும் பஞ்சமே இல்லாத அன்பு இல்லங்கள் அவை.


காலம் முழுக்க மறக்கவே இயலாத என் ஆதர்ச நாயகன் 'சுப்புராயலு வாத்தியார்' நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். வகுப்பறைக் கற்பித்தல் நேரங்களில் ஒரு நிமிடத்தையும் வீணடித்திடாத அவரது உழைப்பு நெசவுத் தொழிலால் அவர் கைக் கொண்டிருந்ததாக இருக்கலாம்.


 பட்டு நெசவு தொழிலில் ஈடுபடும் கண்ணனின் போராட்டம் மிகுந்த வாழ்வினை பேசும் நாவல் இது. நன்றாகப் படித்த போதும் தமையனின் சுயநலத்தால் சிறுவயதிலேயே நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறான் அவன்.


 மழையில் தொடங்கும் நாவல் மழை பெய்து கொண்டிருக்கும் வேறொரு தருணத்திலேயே நிறைவு பெறுகிறது.


 அரசியல் நிகழ்வுகள், கூலி உயர்வு போராட்டங்கள், அந்நாளைய வரலாற்று குறிப்புகளாக நாவலில் பதிவாகின்றன.


 'ஒரு மின்னலோ, இடியோ இல்லை. இருக்கத் தேவை இல்லாதவற்றை இடித்துத் தள்ளுவதற்காக பூமியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைப் போல் மழை அடர்த்தியாகவும், கனமாகவும், மிக நிதானமாகவும் பெய்துகொண்டிருந்தது'.


 நாவலின் மேற்கண்ட ஆரம்ப வரிகளிலேயே எம் வி வெங்கட்ராமின் புனைவு மேதமை வெளிப்பட்டுவிடுகிறது.


 அடுக்கடுக்கான சவால்களும், துரோகங்களும் நிறைந்ததான வாழ்விலும் கண்ணன் ஒருபோதும் தன்னிரக்கம் கொள்வதில்லை.


 இளம் விதவை ஹேமாவின் நுழைவு, கண்ணனின் குடும்ப வாழ்வை முடிவுக்கு கொண்டுவந்து விடுகிறது.


'எவ்வளவு துன்புறுத்தியும் பொற்றாமரை புஷ்கரிணி இரவு முழுவதும் மௌனம் சாதித்தது. பொழுது விடிந்ததும் அது ரகசியத்தைக் கக்கி விட்டது'.


 நடைபெற்றுவிட்ட பெரும் துயர நிகழ்வை தேர்ந்த, எளிய சொற்களின் கலப்பில் வாசகனிடம் கடத்திவிடும் எம் வி வெங்கட்ராம் கொண்டாடப்படாத தமிழின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவராக இருப்பினும், அவரே குறிப்பிட்டுள்ளதுபோல் அவரது படைப்புகள் காலத்தினால் அழியாமல், தனக்குரிய வாசகனுக்காக கம்பீரமாக காத்து கொண்டேயிருக்கும்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்