பயணம்
எனது பர்மா வழி நடைப்பயணம்
வெ.சாமிநாத சர்மா
மின்நூல்
232 பக்கங்கள்
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலங்களில் ஜப்பானிய குண்டு வீச்சுக்கு அஞ்சி அகதிகளாக பர்மாவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து அறிந்திருப்போம்.
எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா தனது புலம்பெயர்வு குறித்து இக்கட்டுரைகளில் விவரிக்கிறார். பர்மா முதல் சென்னை வரையிலான ஒன்றரை ஆண்டுகள் நீண்ட தனது பயணத்தை சாகசப் பயணமாக அவர் கருதிவிடவில்லை.
மன உறுதியுடன் எதிர்கொள்ள நேர்ந்த அசாதாரணமான சவால்களை, உடைந்த மனதுடனும், நுட்பமான அவதானிப்பு அளித்த எழுத்து வன்மை மிகுந்த பார்வையுடனும் பதிவு செய்திருக்கிறார்.
தெளிவான திட்டமிடலுடன் துவங்கப்பட்ட பயணங்களின்போது, இடையில் நேரிட்டுவிடும் தடங்கல்களே நம்மை பெரும் பதற்றத்துக்கு ஆளாக்கிவிடும்போது, நிச்சயமின்மைகளின் தொகுப்புகளாகவே மாறிவிட்ட சாமிநாத சர்மாவின் பயணம் மன தைரியங்களுக்கெல்லாம் சவால் விடக்கூடியது.
பெரும் உழைப்பினால் ஈட்டிய பொருட்களை கைவிட நேர்ந்ததையும், கதவுகளைக்கூட அடைக்காமல் கிளம்பியதையும் உறுதியாகக் கூறுகிறார் சர்மா.
பர்மியர்கள், மணிப்பூரிகள் குறித்த அவரது வியப்புகள் கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. செங்குத்தான மலைப் பாதைகளில் டோலிகளிலும், சமதளங்களில் பெரும் நெரிசலில் சிக்கிக் கொண்டு லாரிகளிலும் பயணம் செய்திருக்கிறார் அவர்.
'அந்நிய நாட்டு வாசம் ஆபத்தில் கை கொடுக்காது' என்ற சர்மாவின் கூற்று எல்லா காலங்களுக்கும் பொருந்துவிடுகிறது.
தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களின்போது மாநிலத்துக்கு உள்ளாகவே மக்கள் பெரும் ஆர்வத்துடன் தமது சொந்த ஊர்களுக்கு பயணிப்பதன் தாத்பரியம் இந்நூலை வாசிக்கையில் விளங்கி விடுகிறது.
வாழ்தலை நீட்டிப்பதற்கான போராட்டம் மனிதனை எதையும் துணிந்து செய்திடும் நிலைக்கு இட்டுச் சென்று விடுகிறது.
அந்த நாட்களிலேயே தாம் எழுதிய நூல்களின் பல பிரதிகளை வசதியான பல பிரமுகர்களுக்கே அன்பளிப்பாக அளிக்க நேர்ந்தமை பற்றியும் குறிப்பிடுகிறார்.
ஒன்றரை ஆண்டுகள் நீடித்த தனது பெரும் போராட்டமான பயணத்திற்குப் பின்பும், போர் அபாயம் நீங்கிவிடாத சென்னைக்கே வந்திருக்கிறார் சர்மா.
எனினும் உயிர் குறித்த பயம் அவருக்கு சென்னையில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
Comments
Post a Comment