கவிதைகள்
மண்டோவின் காதலி
லாவண்யா சுந்தரராஜன்
தமிழ்வெளி
104 பக்கங்கள்
லாவண்யா சுந்தரராஜனின் 68 கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இந்நூல்.
பெண்மைக்கு நிர்ணயிக்கப்பட்டுவிட்ட வரம்புகளை, தன்னிரக்கமின்றி கலை உணர்வுடன் கேள்விக்கு உட்படுத்தும் புனைவுகள் இக்கவிதைகள்.
'இறுதி உணவின் மேசை' தனது இருப்பு, இயலாமை குறித்து பெரிதும் வருந்தி கேவுகிறது.
குழந்தைமை நிரம்பிய கவிதை 'கூட்ஸ் வண்டி'. சிறுவயதில் ரயிலை வேடிக்கை பார்க்க அலைந்த தருணங்களில், எதிர்ப்படும் வண்டி கூட்ஸாக அமைகையில் ஏற்படும் கசப்பு அழகாக வெளிப்படுகிறது.
உடலில் அசாதாரண நிலை கொண்டவள் குறித்த கவிதையில், 'எத்தனை கலவி நடந்தாலும் அவள் ரத்தத்தில் இன்னொரு ரத்தம் கலக்காது' என்று கூறி அவளை நித்திய கற்புக்கரசி என அழைக்கிறார்.
பெண்ணின் உடலும் மனமும் அடர்வனம்தான். ஆளுமை மிகுந்தவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயலும் ஒவ்வொரு ஆணும் அவளிடத்தில் அறிய முடிந்தது சிறுதுளி மட்டுமே.
மிதமிஞ்சிய பாதுகாப்பு குறித்த உணர்வு பெண்ணிற்கு இக்காலத்திலும் தேவையாய் இருப்பதென்பது நமது நாகரிகம் குறித்த மதிப்பீடுதான்.
மகிழ்வையும், ஆசுவாசத்தையும் ஒருங்கே ஏற்படுத்திவிடும் கவிதைத் தொகுப்பு இந்நூல்.
Comments
Post a Comment