கதைகள்

 எம் வி வெங்கட்ராம் சிறுகதைகள் முழுத்தொகுப்பு

 காலச்சுவடு பதிப்பகம் 

1175 பக்கங்கள் 



தனது படைப்புகள் குறித்த அளவற்ற பெருமிதமும், தனது வாசகர்கள் குறித்த தீர்க்க தரிசனமும் நிரம்பிய பெருங்கலைஞன் எம்.வி வெங்கட்ராம்.


 வைக்கம் முகம்மது பஷீர் போன்றே வண்ணமயமான வாழ்வியல் அனுபவங்களால் நிறையப் பெற்றவர் எம்விவி.


 106 கதைகளைக் கொண்ட இம்முழுத் தொகுப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு குறைவான எண்ணிக்கையில் புராணக் கதைகள் இடம் பெற்றுள்ளன.


 புராணக் குறிப்புகளாலும், கற்பனைகளாலும் நிரம்பப் பெற்றவையாக அக்கதைகள் உள்ளன.


 'குந்தி' அனைவரும் அறிந்த இதிகாசக் குறிப்பு எனினும் படைப்பாளியின் முத்திரையை இக்கதையில் அறிய இயலும்.


'இதயங்களுக்கு பேசும் சக்தி ஏன் கொடுக்கப்படவில்லை?' என்ற கர்ணனின் கேள்விக்கு, 'பின்பு வேதனையை எப்படி உண்டாக்குவது?' என்று எதிர் கேள்வியை பதிலாக அளிக்கிறார் குந்தி.


 மிகவும் இளைய வயதிலேயே புனைவு தளத்தில் நுழைந்துள்ள எம்விவி, முதிர்ந்த சிந்தனையுடன் வயது மூத்த தம்பதியரின் மன ஓட்டங்களை சித்தரித்துள்ள கதை 160.


 85 வயதான கணவரையும், 75 வயதான மனைவியையும் குறித்த கதை இது.


 வழமையான கதைக் கருவாக இருப்பினும், விருப்பமில்லா மணம், மறக்கவியலா நினைவுகள், அணுக முடியாத உறவுகளுடன் செல்கிறது 'எங்கே தேடுவது' கதை.


 சௌராஷ்டிர நெசவாளர் குடும்பங்கள் 10க்கும் மேற்பட்ட கதைகளில் உணர்வுபூர்வமாக நிரம்பி இருக்கிறார்கள்.


 'பைத்தியக்காரப் பிள்ளை', 'நானும் உன்னோடு' போன்ற கதைகள் ஒளிவுமறைவின்றி அம்மாந்தரின் குணாதிசயங்களை முன்வைப்பவை.


 தவறு செய்து வெளியேறிய தாய், மற்றொரு பிள்ளைக்காக மூத்த மகனிடம் உதவி கோருகிறாள் 'சித்தக்கடல்' கதையில்.


 கண்களால் நடைபெறும் உரையாடல்கள் நிரம்பிய கதை 'ஜன்னல்'. மனநிலை பிறழ்ந்தவன், செய்யாததை செய்து விட்டதாக எண்ணிக் கொள்கிறான் 'சிதறின சித்தம்' கதையில்.


சிறுவயது திருமணங்களும், தொடர்ச்சியாக நடைபெறும் செயல்களும் எவ்வளவு காலம் கழிந்தும், என்ன விலை கொடுத்தும் சரி செய்ய இயலாதவையாக போய்விடுகின்றன. 'அழகும் குழந்தையும்' கதை நினைவு படுத்திய சிந்தனை மேற்கண்டவை.


 இரு குழந்தைகளை பறிகொடுத்தவள் தாய்ப்பால் தன் பிள்ளைக்கு ஆகாதென எண்ணி எடுத்திடும் முடிவு மூன்றாவது பிள்ளையையும் பலி வாங்குகிறது 'சோனிக் குழந்தை' கதையில்.


 தனது எழுத்துத் திறன், படைப்புகள் மீதான உயர்வான சுய மதிப்பீடுகளுடன் சோர்வின்றி இயங்கியிருக்கிறார் எம்விவி.


 'கலையின் உச்சம் தொடாதவை இக்கதைகள்' என்றார் மூத்த வாசகர் ஒருவர். ஆனால் இப்பெரும் தொகுப்பை வாசித்து முடிக்கையில் அவ்வாறு எனக்கு தோன்றவில்லை.


 வாழ்வாதாரம் கருதி வெகுஜன இதழ்களில் அக்கலைஞன் எழுதிக் குவித்திருக்கலாம். எனினும் அவரது கலை மேதமையும், நேர்மறையான எழுத்துத் திறனையும் குறைத்து மதிப்பிட இயலாது.


 ஷேக்ஸ்பியரின் 'வெனிஸ் வணிகன்' புனைவு ஏற்படுத்திய பாதிப்பில் 'காலேஜ் மாணவன்' கதையும், நோயுற்ற மனைவியை புறக்கணித்து மறுவிவாகம் செய்திடும் 'பாரதி' கதையும், பக்கத்து அறை பெண்ணின் பரஸ்பர தேவைகளின் பரிமாற்றங்களுடன், குறித்த நேரத்தில் பிரிந்துவிடும் 'தோழி' கதையும் எம்விவி யின் புனைவுலகை  வேறுவேறு கோணங்களில் செலுத்துகின்றன.



 அறிந்தே செய்த பாவம் இறுதிக் கணத்தில் விரட்ட முடியாத நினைவாக கொல்கிறது 'மூக்குத்தியில்'.


 பேரழகில் கர்வம் அடைந்தவள் உருவமில்லா நிலை வேண்டி அடைகிறாள் 'திலோத்தமை'


விசித்திரமான சத்தியத்தால் திடுக்கிட்டு கற்பையும், கர்ப்பத்தையும் காக்க விரைகிறாள் 'புலோமை'.


 சீரான இடைவெளிகளில் புராணக் கதைகளில் நாட்டம் செலுத்தியிருக்கிறார் எம்விவி.


 ஆயுளின் பாதியை அளித்து மனைவியை மீட்கும் 'ருரு' குறித்து 'பிரமத்வரை', அலங்காரங்களை துறக்க செய்யப்பட்ட முத்திரை, முனிவரை அதே நிலைக்கு இட்டுச்செல்லும் 'லோபா முத்திரை', சிடுக்கற்ற மொழியில் எளிய வாசகனை அணுகியிருப்பவை.


 மனதைக் கட்டுப்படுத்த இயலாதவன் இரு பெண்களை இன்னலுக்கு ஆளாக்குகிறான் 'மழை இடி மின்னல்' கதையில்.


 காலச்சுவடு இதழில் 'பொருநை பக்கங்கள்' பகுதியில், 'வேலைக்காரி தூங்குகிறாள், நாயும் காக்கிறது' கதையை வாசித்ததாக நினைவு.


 இத்தொகுப்பின் மற்றொரு மனம் கவர்ந்த கதை இது. பழைய காதலியைக் காண வருபவன், அவளது கணவன் வீட்டில் இல்லாத இரவு நேரத்தை தேர்வு செய்கிறான்.


 அமரக்கூட மறுத்து, நின்று கொண்டே பேசுகிறாள் அப்பெண். எத்தனையோ பிரயத்தனம் செய்து அவனை வெற்றிகரமாக வெளியேற்றி விடுகிறாள்.


 பிறகுதான் வாசகனுக்கு தெரிய வருகிறது அந்த வீட்டில் வேலைக்காரியும் நாயும் இல்லை என்று.


 வீட்டினின்று வெளியேறி சென்றவன் சில நிமிடங்களில் திரும்பி வந்து தனது விரும்பத்தகாத செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறான்.


 போரில் தனது ஒரு கை, காலை இழந்துவிட்ட வீரன், ரயிலில் பயணிப்பதை விவரிக்கும் 'அரை மனிதன்' கதை, அலுவலக பணத்தில் சீட்டாட்டம் நடத்தி பணத்தை இழந்து திரும்பிச் செல்ல மனம் இன்றி வேறொரு ஊருக்கு பயணம் செய்பவனை விவரிக்கும் 'இனி புதிதாய்' கதை, இரண்டும் எழுதப்பட்ட நாட்களில், சில வருடங்களுக்கு முற்பட்டதாகவே அறியப்பட்டிருக்கும்.


 படிப்பை முடித்து இல்லம் வந்து பிரம்மச்சாரியம்,தொண்டு பற்றி பேசுபவன் மணக்கவிருந்த பெண்ணுடனான உரையாடலுக்குப்பின், ஒரேயடியாக மாறிவிடுவதை பகடியாக பேசுகிறது 'ஒருநாள் புரட்சி'.


 1950 இல் வெளியாகியுள்ள 'மருந்து', அந்நாளிலேயே மருத்துவ உலகை வணிக அரக்கன் கைப்பற்றி விட்டதை உணர்த்துகிறது.


 சமூகச் சிக்கல்கள், புராணக் கதைகள், தான் சார்ந்த சௌராஷ்ட்ர நெசவாளர் குறித்த புனைவுகள் என தனது கதை உலகை பன்முகப்படுத்துகிறார் எம்விவி.


 பொதுப்புத்தியில் உறைந்துள்ள தாய் என்ற பிம்பத்தை கேள்விக்குள்ளாக்கி வேறொரு கோணத்தில் அணுகவும் தவறவில்லை அவர்.


 தொகுப்பின் இறுதிக் கதையான 'பணக்கட்டு' கதை, பணஉதவி செய்ய தயங்குபவர்களை விமர்சிப்பதும் அல்லாமல், உதவி செய்தபின் திருப்பி கேட்பவரையும், இரண்டாம் முறை உதவ மறுப்பவரையும் காட்டமாக பகடியுடன் பேசுகிறது.


 தொகுப்பின் நீண்ட கதை 'குற்றமும் தண்டனையும்' மற்ற கதைகளுடன் ஒப்பிடுகையில் பெரிதும் வேறுபட்டு நிற்கிறது.


 சொத்துக்காக தனது சகோதரனை தந்திரமாக கொன்றுவிடுபவன், நடந்தவைகளை மறந்து புதிய வாழ்வுக்குச் செல்கிறான்.


 அங்கு மற்றொரு திருமணம் நிகழ்ந்து அப்பெண்ணையும் உணர்ச்சிவசத்தால் கொன்றுவிட்டு பழைய மனநிலையை அடைந்து தடுமாறுவதை குழப்பம் இன்றி வாசிக்க முடிகிறது.


 தனது புதல்வர்கள் இறந்த நிலையிலும், மருமகள்கள் தனது செல்வத்தை பாவிப்பதை ஏற்க இயலாமல், புதிய மணத்திற்கு தயாராகிறார் செல்வந்தர் ஒருவர் 'விவகாரமும் விவாகமும்' கதையில்.


 அடைய எண்ணியதை அடைந்து விடுகையில், அச்சமடைவதுதான் மனித இயல்பு என்று விரிகிறது 'இங்கும் அங்கும்'.


'வெயில்' அறத்தைப் பேசுகிறது. இறந்து போன மனைவி உள்ளிட்ட அனைவரது விருப்பையும் நிராகரித்து நீதியின் பக்கமே நிற்கிறார் அம்மனிதர். தி ஜானகிராமனின் கதையை வாசித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்ட புனைவு இது.


 கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இத்தொகுப்பை வாசிக்கையில் எம்விவி என்ற பெருங்கலைஞனை அவரது படைப்புகளின் வழியே மிக எளிதாக அணுக முடிந்தது.

Comments

  1. 'கலையின் உச்சம் தொடாதவை இக்கதைகள்' என்றார் மூத்த வாசகர் ஒருவர். ஆனால் இப்பெரும் தொகுப்பை வாசித்து முடிக்கையில் அவ்வாறு எனக்கு தோன்றவில்லை. -

    மிக சரியான வாசிப்பு. எம் வி வி, தஞ்சை பிரகாஷ், மா அரங்கநாதன், நகுலன், கோபி கிருஷ்ணன், கோணங்கி, வண்ணநிலவன் இமயம் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள் கடுமையான சிறுகதை பயிற்சி எடுத்து தான் நாவல் பக்கம் வந்தவங்க. நகுலன் மிக சிறந்த கதைகள் எழுதியவர், ஆனால் அவரின் எந்த தொகுப்பையும் படிக்காதவர்கள் அவரை எழுத்தாளர் லிஸ்ட்ல கூட வைக்கவில்லை. சுசிலா கதையாசிரியர் தான என்று சொல்வார்கள். நான் இந்த தொகுப்பை வரும் புத்தக காட்சியில் வாங்க இருக்குறேன்.

    மூன்றில் ஒரு பங்கு புராதன கதைகள் என்று வேறு எழுதி விட்டிர்கள். கண்டிப்பாக வாங்கணும். சவுராஷ்டிரா காரங்க கதைகளை கண்டிப்பாக படிக்கணும்.

    உங்கள் பதிவுக்கு நன்றி சரவணன்.

    ReplyDelete
  2. மிக்க நன்றியும் அன்பும் பிறைசூடி. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவசியம் எம்விவியை வாசியுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்