கல்வி
தமிழ்மொழிக் கல்வி
பதிப்பாசிரியர் சு ராஜாராம்
காலச்சுவடு பதிப்பகம்
215 பக்கங்கள்
முந்தைய 20 ஆண்டுகளில் (1994 -2014) காலச்சுவடு இலக்கிய இதழ்களில் வெளியான கல்வி சார்ந்த 19 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
உலகத் தொடர்பு மொழியாக ஆங்கிலம் நீடிக்கும்போதும் அம்மொழியை காலணிய மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட நமது மொழிகளை தாய்நில மொழிகள் என்றும் மிகவும் நயமாக வர்ணிக்கிறது இந்நூல்.
தாய்மொழிவழிக் கற்றலின் மூலமே சுயசிந்தனையும், படைப்பாற்றலும் இயல்பாக மேம்படும் என்று உலக அளவில் சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும் உறுதியாக, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் ஆங்கில வழிக் கல்வியையே பெற்றோர் பெரிதும் விரும்பி குழந்தைகளிடம் திணித்தல் ஏமாற்றமளிப்பதாகும்.
நமது தமிழகம் போன்றே கேரளமும் ஆங்கில வழிக் கல்வியை நாடுவது வியப்பளிக்கிறது.
அரசு பள்ளிகளையும், ஆசிரியர்களையும் ஒரு கட்டுரை கடுமையாக சாடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
பள்ளிக்கல்வி முழுமையும் தனியார் ஆங்கிலவழிக் கல்வியை நாடும் பெற்றோர், உயர்கல்விக்கும், வேலை வாய்ப்பிற்கும் அரசு நிறுவனங்களை நாடுதல் அறமற்றது.
இரு மொழிகளிலும் புலமையற்ற நிலையை மாணாக்கரிடம் ஏற்படுத்துவது மட்டுமே இதனால் விளைந்த பயன்.
1 முதல் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி வாயிலாகவே பயிலும் குழந்தை அதற்குப் பிறகான கற்றலில் ஆங்கிலம் உள்ளிட்ட எந்தவொரு மொழியையும் தெளிவாகக் கற்று புலமை பெறுவது எளிது என்பதை ஒரு கட்டுரை விளக்குகிறது.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளின் வன்மமான வணிகநோக்கு அறமற்ற சமனற்ற சமூகத்தைத்தான் தோற்றுவிக்கிறது.
பணித்திறனற்ற, பணியாற்றும் மனமற்ற குறிப்பிட்ட சதவீத ஊழியர்களால்தான் அரசுத் துறைகளுக்கு பெரும் அவப் பெயர் ஏற்படுகிறது.
இத்தகையவர்களை எந்த நிர்வாகத்தினாலும் நல்வழிப்படுத்திட இயலாது. நியாயமாக உழைப்பவர்களுக்கே கடும் சவால்களை அளிப்பதாக அரசுப் பணி அமைந்துவிடுகிறது.
மெத்தனமாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், எளிய மக்களின் குழந்தைகளுக்கு பெரும் துரோகம் இழைப்பவர்கள்.
'ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் படித்து உயர்கல்வியை ஆங்கிலத்தில் படிப்பவர்கள் கல்வியின் முழுப் பலன்களையும் பெறுகிறார்கள்' என்ற வெளி ரெங்கராஜனின் கூற்று சிந்திக்கத்தக்கது.
தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய நூல் இது. அது மட்டும் அன்று, ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூலும்கூட.
Comments
Post a Comment