கதைகள்
பிறகொரு இரவு
தேவிபாரதி
காலச்சுவடு பதிப்பகம்
144 பக்கங்கள்
நுட்பமான வாசிப்பைக் கோரும் நான்கு கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்நூல்.
சம்பாபதி தெருக்களில் மரவுரி தரித்து இளந்துறவியாக தோழி சுதமதியுடன் அலைந்து திரியும் மேகலை, பெண்மையின் தீராத் துயரம் மற்றும் அடையாளச் சிக்கல்களுக்கான கடந்த காலத்தின் பெரும் அடையாளக் குறியீடு.
காம வேட்கையுடன் அவளை அணுகும் உதயகுமாரன், அவளது துறவு அடையாளத்தையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. கனிகையர் ஒழுக்கத்தை அவளிடம் வலியுறுத்துகிறான்.
முதிர்க்கனிகை சித்ராபதி, அலங்காரங்களில் அவலத்தை மறைத்து இந்திரனை வீழ்த்துகிறாள்.
நட்பு, திருமண உறவின் தார்மீக அறங்களைத் தாண்டி நிகழும் பாலியல் அத்துமீறல்களை உளவியல் நோக்குடன் அணுகும் இரு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
காலவோட்டத்தின் ஏதோ ஒரு புள்ளியில் தவறவிடப்படும் மணவாழ்வு பிரதிக்னை, தீராத துயரங்களையும், அலைக்கழித்துவிடும் பெரும் போராட்டங்களையும் தருவித்து விடுகிறது.
சிலிர்ப்பூட்டும் துவக்கத் தருணங்கள், நாளடைவில் எளிதில் விலக்கிவிட இயலாத பாரமாக எஞ்சிவிடுகிறது.
பெயரிடப்படாத அந்நபர் சாருவிடமும், தாஸிடமும் நிகழ்த்தும் உரையாடல்கள் சஞ்சலமடைந்துவிட்ட, குற்ற உணர்வு நிரம்பிய மனதின் ஒப்புதல் வாக்குமூலங்கள்.
விஸ்வத்தின் மரணத்துடன் அதிர்ந்து நின்று போகும் கடிகாரம், பின்புறமாக சுழன்று இயங்கத் துவங்குகிறது.
கைமீறி நடந்து விட்ட பெருந்துயர்மிகு நிகழ்வு சசியை பெரும் உளவியல் சிக்கலுக்கு ஆளாக்குகிறது. விரைவில் வருவதாக கூறிச் செல்லும் அருணை நேர்மை என்ற பதத்தில் அடைத்து விட முடியுமா என்ன?
சுதந்திரம் அடைந்து விட்ட இந்தியாவுக்கு பெரும் பாரமாக மாறிவிட்ட காந்தி, தனது மரணம் எல்லா தரப்பினராலும் விரும்பி எதிர் நோக்கப்படுவதைக் கண்டு கலங்கித் தவிக்கிறார்.
பிர்லா மாளிகையில் இருந்து வெளியேறும் அவர், தனது ஞானகுரு டால்ஸ்டாய்க்கு கிட்டியது போன்ற மரணம் வேண்டி ரயில் நிலையங்களில் அலைந்துவிட்டு சில மணி நேரங்கள் கழித்து உடைந்த இதயத்துடன் பின்வாசல் வழியாக மாளிகையினுள் நுழைகிறார்.
'பிரார்த்தனைக்கு நேரமாகிறது. அவர் காத்துக் கொண்டிருக்கிறார்' என்ற தனிக்லாலின் குரலுக்கு, 'இதோ வந்துவிட்டேன். அவரைக் காத்திருக்க சொல்லுங்கள்' என்றவாறு பதிலளிக்கிறார் மகாத்மா.
தேவிபாரதியின் புனைவுகளை மிக எளிதாக வாசித்துவிட முடிவதில்லை. நொறுங்கிய மனதின் வலிதரும் எழுத்துக்கள் அவை.
Comments
Post a Comment