கட்டுரைகள்
இதுவே சனநாயகம்
தொ. பரமசிவன்
காலச்சுவடு பதிப்பகம்
127 பக்கங்கள்
சமூக பண்பாட்டு ஆய்வாளரான தொ.பரமசிவனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
அரிய தகவல்களை எளிய மொழியில் நேர்த்தியாக எழுதிச் செல்கிறார் தொ.ப
கடவுள் வழிபாட்டின் தொடக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளனர் என்ற தகவல் புதிதாகத்தான் இருக்கிறது.
மகாராணி, கோமகன் போன்ற வார்த்தைப் பிரயோகங்களும், மதுரை மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகத் திருவிழா பற்றிய குறிப்பும் முதல் கட்டுரையிலேயே இடம்பெறுகின்றன.
சிறுதெய்வ வழிபாடு தொடர்ச்சியாக, உறுதியாக அழிக்கப்பட்டமையை அறிகையில் பெரும் அதிர்ச்சியும், ஆசுவாசமும் ஏற்படுகின்றன.
சிறுவயதில் வீட்டு பெரியவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி 'கோளறு பதிகம்' படித்திருக்கிறேன்.
//கிபி ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் ஆயிரம் சமணர்களை கழுவில் ஏற்றி சம்பந்தர் 'புண்ணியம்' தேடிக்கொண்ட பிறகும் தமிழ்நாட்டின் தென்பகுதியில் சமணம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை உயிரோடு இருந்தது.//
மேற்கண்ட வரிகளை வாசித்து முடித்த போது சம்பந்தர் பற்றிய மென்மையான பிம்பம் விழுந்து நொறுங்கியது.
அழிந்துபோனவையென்று ஏதுமில்லை அவற்றின் எச்சங்கள் வாழ்வியலில் இருக்கத்தான் செய்கின்றன என்பதை உணர முடிகிறது.
தங்கச்சங்கிலியை பொன் தொடரி என்றும், புருஷோத்தமன் என்ற பெயர்ச்சொல்லை புருஷ-உத்தமன் என்றும் குறிப்பிடுகிறார் தொ.ப
தற்காலக் குழந்தைகள் பண்பாட்டுக் கூறுகள் அற்றுப் போயிருப்பதற்கு அவர்களுடன் தாத்தா பாட்டிகள் இல்லாமல் இருப்பதே காரணம் என்று வேறொரு கட்டுரையில் விளக்குகிறார்.
//குழந்தைகளின் கதையுலகமும், கற்பனையும் சுருங்கி போய்விட்டன என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்// என்றவாறு பதிவு செய்கிறார்.
தமிழ் பேராசிரியர்கள், க்ரியா அகராதி தயாரித்தவர்கள் உள்ளிட்ட எவரும் தொ.ப வின் கூர்மையான நேர்மைமிகுந்த விமர்சனத்திற்கு தப்பிவிடவில்லை.
காலச்சுவடு தொ.பவின் நூல்களை விலையடக்கப் பதிப்புகளாக வெளியிட்டிருக்கிறது.
தமிழ் வாசகர் ஒவ்வொருவரும் தவறாது வாசிக்க வேண்டிய பெறுமதியான நூல்கள் அவை அனைத்தும்.
Comments
Post a Comment