குறுநாவல்கள்
கறுப்பு வெள்ளைக் கடவுள்
தேவிபாரதி
காலச்சுவடு பதிப்பகம்
191 பக்கங்கள்
தேவிபாரதியின் நான்கு குறு நாவல்களின் தொகுப்பு இந்நூல். துயரார்ந்த புனைவுகளுக்காகவே அறியப்படும் தேவிபாரதி சமகால எழுத்தாளுமைகளை புனைவில் நுழைத்து பகடியாக வடித்திருக்கும் கதை 'அ.ராமசாமியின் விலகல் தத்துவம்'.
'பலி' என்ற சிறுகதையின் நாடக வடிவம் மேடையேற்றப்படுவதற்கான முன்னெடுப்புகளாகவே நகரும் இக்கதை இறுதிவரை மேடையேற்றப்படவில்லை.
தான் வாழ்ந்த காலங்களில் மட்டுமின்றி, மரணத்திற்குப் பின் கடந்த 50 ஆண்டுகளாகவே கடவுளாக நீடிக்கும் பெருந்தலைவர் இரண்டாம் கதையில் குறியீடாகவே வருகிறார்.
27 வயது பெண் ஆசிரியை அனுபவிக்க நேரிடும் துன்பங்கள், இன்ஸ்பெக்டரின் வக்கிர எண்ணங்கள், பரதேசி, மாஸ்டரின் துயர்மிகு தருணங்கள், ஜேசிபி இயந்திரத்தைக் கையாளும் சிறுவன்வரை மிகையற்ற புனைவாகவே எண்ண முடிகிறது.
இத்தொகுப்பில் பெரிதும் பாதித்துவிட்ட கதை 'பரமனின் பட்டுப்பாவாடை உடுத்திய நான்காவது மகள்' தான். செல்வச்செழிப்பு இல்லாவிட்டாலும், அளவற்ற துறுதுறுப்புடன் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் சாதக அம்சங்களுடன், பிள்ளைப் பிராயத்தைக் கடக்கும் மஞ்சு, மூத்த சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாகிறாள்.
சவரம் செய்து கொண்டிருக்கையில் 'தன் மகள் மருத்துவராக வேண்டும்' என்ற பரமனின் வார்த்தைகளை கேட்டு அதிரும் பண்ணையக்காரர், பேச்சைக் குறைத்து விரைவாக வேலையை முடிக்க அறிவுறுத்துகிறார்.
ஒடுக்கப்பட்டவர்கள் தலைநிமிர்வதை ஆதிக்க சாதியினர் ஒருபோதும் விரும்பவில்லை என்ற நிதர்சனத்தை மிகக்குறைவான சொற்களைக் கொண்டே உணர்த்திச் செல்கிறார் தேவிபாரதி.
'அக்னி நதி' நாவலின் பாதிப்பில் கௌதம நீலாம்பரனாக பெயர் சூட்டிக் கொள்ளும் முருகேசன், பல பிரசித்தி பெற்ற நாவல்களின் திரைக்கதைகளை வெற்றிகரமாக படைத்தபோதும், வாய்ப்பின்றி தோற்று நகரை விட்டு நீங்குகிறான்.
200க்கும் குறைவான பக்கங்களை கொண்டிருந்த போதும் இந்நூலை வாசித்து முடிக்க 15 நாட்களுக்கும் மேலாகிவிட்டது.
மெதுவாக, உறுதியாக வாசகனை ஆக்கிரமித்துவிடும் தேவிபாரதியின் எழுத்துக்கள் வலிமிகுந்த எளிய மனிதர்களை மனதில் நிறுத்திச் செல்கின்றன.
Comments
Post a Comment