நேர்காணல்கள்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
காலச்சுவடு பதிப்பகம்
159 பக்கங்கள்
கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தபோதும், தனது கள ஆய்வுகளையும், பண்பாட்டு ஆராய்ச்சிகளையும் தமிழகக் கோயில்களைச் சார்ந்து அமைத்துக் கொண்ட தொ.பவின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.
சென்ற ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் தொ.பவின் நூல்களை மக்கள் பதிப்புகளாக மிகமிகக் குறைவான விலையில் வெளியிட்டது. அவற்றுள் கடைசியாக வாசித்து முடித்த நூல் இது.
காஞ்சி காமாட்சியம்மன் கோயில், பௌத்தர்களின் சாரதா தேவி கோயிலாக இருந்தமை போன்ற தகவல்கள் முற்றிலும் புதியதாகவும், வியப்பளிப்பதாகவும் இருப்பவை.
திராவிட இயக்கங்கள் எழுச்சி பெற்ற 60களில் மாணவராக இருந்த தொ.ப, பகுத்தறிவு நிரம்பிய, முற்போக்கு சிந்தனை கொண்ட ஆராய்ச்சியாளராக பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார்.
'பொதுநலம் பேசுகிறவர்கள் தன்னுடைய கோப உணர்ச்சி கைவிட்டு விடக்கூடாது. அது போல மான அவமானம் பார்க்கக் கூடாது'.
'அப்படி எந்த எதிர்ப்பையும் மீறி செயல்பட்டவர் பெரியார்' என்று குறிப்பிடுகிறார்.
எளிய மனிதர்கள் வணங்கி மகிழும் நாட்டார் தெய்வங்களை குறித்து பெரும் ஈடுபாட்டுடன் ஆராய்ந்து, வியக்க வைக்கும் தகவல்களை அளித்திடும் களஞ்சியமாகத் திகழ்ந்திருக்கிறார் அவர்.
பல்கலைக்கழகமே வெளியிட்ட தொ.பவின் ஆய்வுநூல் 'அழகர் கோயில்' முதல் இரண்டு பதிப்புகளும் முழுமையாக விற்று தீர்ந்திருக்கிறது.
அமெரிக்கா உட்பட உலகின் முக்கியமான நாடுகளில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அந்த நூல் உள்ளதாக குறிப்பிடுகிறார்.
பெரியார் என்ற சிந்தனையாளர் தனது பேச்சுக்களால் எழுத்துக்களால் தமிழ் மண்ணில் நிகழ்த்திச் சென்றிருக்கும் மாற்றங்களை ஆவலுடன் விரிவாக தொ.ப குறிப்பிட்டு மகிழ்வதை ஆங்காங்கே வாசிக்க முடிகிறது.
வரலாறு பாடத்தை அலட்சியமாக காணும் அமெரிக்கர்களுக்கு நீண்டதொரு வரலாறு இல்லாததே அதற்கான காரணம் என்று குறிப்பிடும் தொ.ப, தனது வாழ்நாள் முழுவதையும் சமூக, பண்பாட்டு ஆய்வாளராக பயனுள்ள வகையில் வாழ்ந்து சென்றிருக்கிறார். மிகச் சிறப்பான பயனுள்ள நூல் இது.
Comments
Post a Comment