நாவல்
கர்ணன்
காலத்தை வென்றவன்
சிவாஜி சாவந்த் தமிழில் நாகலட்சுமி சண்முகம்
1339 பக்கங்கள் மின்நூல்
மகாபாரதம் போன்ற வண்ணமயமான இதிகாசம் ஒன்று உலகின் வேறெந்த நாட்டிலும் இருக்குமா? தெரியவில்லை.
மகாபாரதத்தை மையப்படுத்தி பீமனின் பார்வையில் எம்டி வாசுதேவன் நாயரின் 'இரண்டாமிடம்', திரௌபதியின் பார்வையில் பிரதீபா ராயின் 'திரௌபதியின் கதை', பிரபஞ்சனின் 'மகாபாரதம்', எஸ் எல் பைரப்பாவின் 'பருவம்' நூல்களைத் தொடர்ந்து வாசிக்க கிடைத்த நூல் சிவாஜி சாவந்தின் 'கர்ணன்'.
மேற்கண்ட நூல்களைப் போன்று 'கர்ணன்' பெரிதாக ஒன்றும் ஈர்த்து விடவில்லை. மிகமிக சாதாரணமான மொழிநடை, தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை அமைத்தது போன்றுள்ளது.
கர்ணனின் தம்பி 'ஷோன்' கர்ணனது ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் போன்ற தகவல்களே புதியவையாக இருந்தன.
வியத்தகு ஆற்றல் கொண்டிருந்த போதிலும் 'சூதபுத்திரன்' என்றவாறு வாழ்வு முழுமையும் ஏளனப்படுத்தப்படுகிறான் கர்ணன்.
கர்ணனின் வளர்ப்பு தந்தை தேரோட்டி அதிரதன், அரச குலத்தை சேர்ந்தவராக தன்னை சொல்லிக் கொள்வது மற்றுமொரு புதிய தகவல்.
அணுகல்- விலகல் போராட்டமாகவே கர்ணன் போன்ற பெரும் வீரனின் வாழ்வு அமைந்துவிட்டமை பெரும் சோகம்.
பிறப்பின் அடிப்படையில் தரப்படும் அங்கீகாரமும், அவமதிப்பும் காலம் காலமாய் தொடர்ந்து வருதல் பெரும் கொடுமை.
பழகும் நபர்கள் எவராக இருப்பினும் அவரது சாதியை அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதைத் தொடர்ந்த வலுவான முன்முடிவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவை.
வாழ்நாள் முழுவதும் தனது திறன்கள் அங்கீகரிக்கப்படாமல், துரியோதனன் போன்ற தந்திரக்காரனிடம் சிக்கிவிடும் துர்பாக்கியமும் நேரிட்ட கர்ணன் தனது வியக்க வைத்திடும் மேலான குணங்களுக்காக என்றென்றும் நினைவில் கொள்ளப்படுகிறான்.
உண்மையில் மகாபாரதத்தின் பெரும் நாயகன் கர்ணனே. குந்தி, கங்கை, ராதை என்று மூன்று அன்னையரும், பாண்டு, சூரியன், அதிரதன் என்று மூன்று தந்தையரும் கிடைக்கப்பெற்ற அபூர்வ மனிதன் அவன்!
Comments
Post a Comment