கட்டுரைகள்
இந்தியாவில் சாதிகள்
டாக்டர் அம்பேத்கர்
எதிர் வெளியீடு
143 பக்கங்கள்
1936 ஆம் ஆண்டு லாகூரின் ஜாத்-பட்-தோடக் மண்டல் அமைப்பின் வருடாந்திர மாநாட்டிற்காக டாக்டர் பி ஆர் அம்பேத்கர் தயாரித்த உரையின் எழுத்து வடிவம் இந்நூல்.
இந்த உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல என்று மாநாட்டின் வரவேற்புக் குழுவினர் கருதியதால் மாநாடு ரத்து செய்யப்பட்டதாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மண்டல் அமைப்பினரின் கடிதங்களும், அம்பேத்கரின் காட்டமான எதிர்வினைகளும் நூலில் இடம்பெறுகின்றன.
அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களைக் காட்டிலும் சமூக சீர்திருத்தமே முதன்மையானது என்று வலுவாக குறிப்பிடுபவர், சாதிய அரக்கனை கொன்றழித்தாலன்றி அரசியல், பொருளாதார சீர்த்திருத்தங்களை பெற முடியாது என்கிறார்.
'அந்நியக் கலப்பு இல்லாத சாதியோ, வகுப்போ இந்தியாவில் எதுவுமில்லை' என்ற கருத்து சிந்திக்கத் தக்கது.
'சாதி, பொருளாதார மேம்பாட்டிற்கு நன்மை தரக்கூடியதல்ல, இன மேம்பாட்டிற்கும் உதவவில்லை' மேற்கண்ட வரிகள் தேர்ந்த சிந்தனையாளரின் கருத்துக்கள்.
முகம்மதியரின் வருகைக்கு பிறகு முஸ்லிம் அல்லாதவரை குறிப்பிடவே 'இந்து' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாக நூலில் ஒரு குறிப்பு இடம்பெறுகிறது.
தனது கருத்துக்களுக்கான எதிர்வினைகள் குறித்த (ஆதரவு-எதிர்ப்பு) கவலையேதுமின்றி, நேர்மையாக, துணிச்சலாக தனது தரப்பை முன் வைக்கிறார் அம்பேத்கர்.
சதுர்வர்ண முறையை வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல், வலுவான காரணங்களுடன் எதிர்ப்பதாக குறிப்பிடுகிறார்.
ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை கொண்டவன் என்ற நிலையில், மனிதர்கள் அனைவரையும் ஒரு சில வகுப்புகளில் அடக்கி வகைப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று பிளேட்டோவின் சிந்தனையையும் மறுதலிக்கிறார்.
நம்பவே முடியாத கல்வி, வாசிப்பு பின்புலங்களைக் கொண்ட மேதையை சாதியத் தலைவராகவே குறுக்கிவிட்டமை பெரும் துயரளிக்கும் இந்திய பண்பாட்டுப் புரிதல் ஆகும்.
Comments
Post a Comment