கட்டுரைகள்
கண்ணாடிச் சொற்கள்
ஜி குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம்
191 பக்கங்கள்
இந்த ஆண்டின் சென்னை புத்தகக் காட்சி என் வாழ்நாள் முழுவதும் நினைவின் அடுக்குகளில் நிலைத்திருக்கும்.
எனது மதிப்புமிகு ஆசிரியர் ஜி.குப்புசாமி அவர்களின் 'கண்ணாடிச் சொற்கள்' கட்டுரைத் தொகுப்பு நூலினை எழுத்தாளர் மருதன் வெளியிட, அதைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை அடியேனுக்கு அளித்தமை அவரது பெருந்தன்மை.
குறைந்தது இரண்டு மணி நேரமாவது அவருடன் புத்தகக் காட்சியில் செலவிட்ட நேரம் பெரும் உவகை அளித்தது.
'கண்ணாடிச் சொற்கள்' நூலில் இடம்பெற்றுள்ள பல கட்டுரைகளை முன்பே காலச்சுவடு இதழ்களிலும், முகநூல் பதிவுகளிலும் வாசித்திருந்த போதும் நூல் வடிவில் தற்போது வாசித்தமை சிறப்பானது.
பாப்லோ நெரூடா குறித்தும், சரமாகோ குறித்தும் அறிந்து கொண்ட போது வியப்பு மேலிட்டது.
தனது மண்ணின் மைந்தர் மருத்துவர் ஹரி சீனிவாசன் குறித்த பெருமிதம் முதல் கட்டுரையில் நிரம்பி வழிகிறது.
இலக்கிய ஆளுமை சார்வாகனாக அவர் அளித்திருக்கும் காத்திரமான கதைகளையும் இக்கட்டுரை விளக்கிச் செல்கிறது.
தேவிபாரதி நூல்களின் மீது பெரும் ஈர்ப்பு ஏற்படக் காரணம் ஜிகேயின் 'நடராஜ் மகராஜ்' நாவல் குறித்த விமர்சனம்தான்.
உண்மையில் அவரது விமர்சனத்தை வாசித்த பின்புதான் 'நிழலின் தனிமை' நாவலை வாசித்தேன். அதன் பின்பு அவரது பிற நூல்கள் மூலம் தேவிபாரதி என்ற அப்பெருங்கலைஞர் கருணையுடன் அரவணைத்துக் கொண்டார்.
'மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் கிடைத்தால்கூட போதும், இன்னும் கொஞ்ச காலம் உயிர்த்திருப்பேன்' என்று தனது கடைசி காலத்தில் வருந்திய கோபிகிருஷ்ணன் என்ற கலைஞனை எப்படி மறக்க முடியும்?
தமிழவனின் 'ஷம்பாலா' நாவலை இனிதான் வாங்கி வாசிக்க வேண்டும்.
'உன்னதங்களை பரிந்துரைத்துக் கொண்டிருந்த ஒற்றைக் குரல்' என்ற க நா சு குறித்த கட்டுரை, நூலின் சிறப்புகளில் ஒன்று.
ஜெயகாந்தன் குறித்த கட்டுரை, ஆ.இரா.வேங்கடாஜலபதி நூல் குறித்த நேர்மையான விமர்சனம், ஆசையின் கவிதைத் தொகுப்பு குறித்த பதிவு, தி.ஜாவின் புனைவு மொழி குறித்த வியப்பு உள்ளிட்டவை இந்நூலை page turner ஆக மாற்றின.
'Brave New World' தமிழ் மொழிபெயர்ப்பு எப்போது வெளிவரும் என்பதைத் தெரிவித்தால் எம்போன்ற வாசகருக்கு நல்லது.
உயிர்மையில் அ.முத்துலிங்கத்தின் கதைகளை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்த நாட்களை நினைவுப்படுத்திச் சென்றது ஒரு கட்டுரை.
ஒரு விளையாட்டு அல்லது நிகழ்த்துக் கலை குறித்து முழுமையாக, நுட்பமாக அறிந்திராதபோதும் அத்துறை சார்ந்த மேதைகள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திவிடவே செய்கிறார்கள். ரோஜர் ஃபெடரர் குறித்த கட்டுரையாளரின் அவதானிப்பு சிறப்பானது.
கசுவோ இஷிகுரோ, சினுவா ஆச்செபே இலக்கியப் பங்களிப்புகளை வியந்து வாசித்தேன். சீமமாண்டா அடீச்சி குறித்து கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் தீர்க்க தரிசனத்திற்கு சான்று.
நடீன் கோர்டிமர் அஞ்சலிக் கட்டுரை, வில்லியம் டால்ரிம்பிள் பதிவு செய்த டெல்லி குறித்த கட்டுரை முற்றிலும் புதிய தரவுகள் எனக்கு.
அமிதாவ் கோஷ் நூல்களை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பிற்கு 'கண்ணாடிச் சொற்கள்' என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானது.
நூலின் இறுதிக் கட்டுரை எஸ்பிபி என்ற மனதிற்கு இனிய கலைஞனை நினைவுபடுத்தி அழவைத்துவிட்டது.
நேசத்துடன் மிக்க நன்றியும், அன்பும் ஜி கே சாருக்கு.
Comments
Post a Comment