நாவல்

 கோவேறு கழுதைகள் இமையம்

மின்நூல்

376 பக்கங்கள்



உடல் உழைப்பையே வாழ்வாதாரத்திற்கான வழியாகக் கொண்ட விளிம்புநிலை மக்களை அவர்தம் உன்னதப் பணிகளை புதினமாக படைத்திருக்கிறார் இமையம்.


 கொத்தடிமைகள் போன்று பணியாற்ற நிர்பந்திக்கப்படும் மனிதர்கள், தமது வாழ்விற்கான மிகமிகக் குறைந்த தேவைகளுக்காக இரப்பவர்கள் போன்று சிறுமைப்படுத்தப்படுவதை சமூகம் கள்ள மௌனத்துடன் அவதானித்துக் கொண்டேதான் இருக்கிறது.


 நாவலின் துவக்கத்தில் இழவு வீட்டில் ஓடியாடி பணிகளைக் கவனிக்கும் சவுரி, தொடர்ச்சியாக வீட்டுக்காரனின் வார்த்தைகளால் அவமதிக்கப்படுகிறான். முடிவில் அவனது கூலியும் பேரத்திற்கு உள்ளாகிவிடுகிறது.


 பிரசவம் பார்க்கச் செல்லும் 'ஆரோக்கியம்', அப்பெண்ணின் சுடு சொற்களையும், அத்துமீறல்களையும், கனிவுடன், மெல்லிய புன்னகையுடன் பொருட்படுத்தாமல் பணியை நிறைவு செய்கிறாள்.


 வட்டார மொழிநடை நாவலுக்கு பெரும்பலமாக அமைந்துவிடுகிறது. எளிய மனிதர்களின் துன்பமிகு வாழ்வியலை இமையம் கலையாக வாசகனிடம் முன் வைக்கிறார்.


'உங்க வண்ணாத்தி சாமி'


'உங்களை அண்டி பிழைப்பவ அய்யா'


போன்ற வரிகள் பெரும் வலியை ஏற்படுத்துபவை.


 துணிகளை வீடு வீடாகச் சென்று சேகரிப்பதுவும், தொரப்பாட்டில் துவைத்து சலவை செய்து பட்டுவாடா செய்வதுவும், கூலியாக மாலை நேரங்களில் ஒவ்வொரு வீடாகச் சென்று சோறு பெற்று வருவதும் ஆரோக்கியத்திற்கு சலிப்பை ஏற்படுத்துவதில்லை.


'உன் பாடு நிம்மதிதாண்டி ஆரக்கியம்' என்றவாறு வீட்டுப் பெண்களின் நையாண்டி வேறு நாவலில் இடம்பெறுகிறது.


 கறாராக தமது வேலைகளை முடித்துக் கொள்பவர்கள் உணவு, கூலி அளித்தலின் போது மனிதநேயமின்றி நடந்து கொள்கின்றனர்.


 மருமகள் சகாயத்தின் மீது அன்பு கொண்டிருந்த போதும், ஆரோக்கியத்திற்கு அவளுடன் முரண்கள் வரவே செய்கிறது.


 மகள் மேரியை இதற்கு மாறாக மிகவும் பரிவுடன் நடத்துகிறாள். வாழ்விழந்த மகளுக்காக அழுவதும், மகனை சகாயம் பறித்துச் சென்றபோது கலங்காமலும், ஆரோக்கியம் தன்னிரக்கம் சிறிதளவு இருந்த போதும், உறுதியான பெண்ணாகவே திகழ்கிறாள்.


 புகுந்த வீட்டில் அத்தனை பேருடனும் ஒன்றி வாழ்ந்து விடும் அவளுக்கு அவளைப் போன்ற குணங்களுடன் மருமகள் கிடைக்கப் பெறாதது மற்றுமொரு முரண்.


 அழுக்குத் துணி எடுக்கச் சென்ற மேரி வாசலில் தயங்கி நிற்க, கபடமாக அவளை வீட்டிற்குள் அழைக்கும் அந்நபர், அவளது கண்ணீரையும், புலம்பல்களையும் புறமொதுக்கி சீரழிக்கிறான்.


 'நான் நான்டுக்கிடுவன் சாமி' என்ற வார்த்தைகளும் அவனை சலனப்படுத்தவில்லை.


 மாமன் மகளை பெரிதும் விரும்பி மணமுடித்துக் கொள்ளும் திரவியராஜ், ஆற்றில் பாம்பு கடித்து மரணிப்பது பெரும் சோகம்.


 இளைய மகன் பீட்டரை சாமியாராக்க உடன்பட இயலாமல் கலங்கும் ஆரோக்கியத்திற்கு மேலும் அதிர்ச்சி அளிப்பது போன்று வீட்டை விட்டு செல்கிறான் அவன்.


குதிர் நிறைந்திருந்த காலங்கள், கணவருடனான கேலி கிண்டல் சம்பாஷனைகள் என்றவாறு மெல்லிய, குறுகிய, மகிழ்வான தருணங்களும் நிரம்பியிருக்கிறது ஆரோக்கியத்தின் வாழ்வில்.


இஸ்த்திரிக்காரனையும், தையல்காரனையும் மனம் நொந்து சபிக்கிறாள் அவள். சுலபமான வேலைகளை தாமே செய்து கொள்ளும் குடியானவர்கள், மிக மிகக் கடினமான பணிகளை ஏமாளிகளான ஆரோக்கியம் குடும்பத்தினரிடம் தள்ளிவிடுகின்றனர்.


 பெற்ற மகன்கள் இருவராலும் கைவிடப்பட்ட முதிய தம்பதியர், கைம்பெண்ணான தமது மகளுடன் தொரப்பாட்டிற்கு பயணிப்பதாக நிறைவடைகிறது நாவல்.


 'சவுரி துணிமூட்டையை சுமந்து கொண்டு, கண்களைத் தாழ்த்தியவாறு தரையை தொடுவது போல் நடந்து சென்றான்'


'ஆரோக்கியம் மேரியின் குழந்தையை இடுப்பில் அமர்த்தி கண்ணீரைக் காட்டாமல் செல்கிறாள்'


 தளர்ந்தவளாக மேரி அவர்களைப் பின்தொடர்கிறாள்.


 நால்வரும் பாதையில் செல்லும் காட்சியை கவிதையாக எழுதிச் செல்கிறார் இமையம். மனதை கனக்கச் செய்யும் புனைவு.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

நாவல்

நாவல்