கட்டுரைகள்
எங்கேயும் எப்போதும்
எஸ்பிபி நினைவலைகள் தொகுப்பு அரவிந்தன்
காலச்சுவடு பதிப்பகம்
143 பக்கங்கள்
14 எழுத்தாளுமைகளின் கட்டுரைகள், எஸ்பிபி சரணின் நேர்காணல் அடங்கிய நூல் இது.
ஒவ்வொருவரின் எழுத்திலும் எந்த ஒரு தரவும் 'கூறியதுகூறல்' வகையினதாக அமையவில்லை.
அப்பெருங்கலைஞன் மீதான பிரம்மிப்பும், வற்றாத அன்பும் மட்டுமே எல்லா கட்டுரைகளிலும் பொதுவாக அமைந்துவிட்ட அம்சங்கள்.
காலச்சுவடு இதழில் முன்பே இடம்பெற்றுவிட்ட சில கட்டுரைகளைத் திரும்ப வாசித்த போதும் அலுப்பு ஏதும் தோன்றவில்லை.
எழுத்தில் வடிக்கும் திறன் பெற்றிருப்பின் இதுபோன்ற லட்சக்கணக்கான கட்டுரைகள் எஸ்பிபி அபிமானிகளிடமிருந்து குவிந்திருக்கும்.
90களின் துவக்கத்தில் இனம் புரியாத சோகங்களுக்கு பதின் வயதிலேயே ஆட்பட்ட தருணங்களில் 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்....' பாடலின் மூலம் தேற்றி அரவணைத்த குரல் அது எனக்கு.
2000 களின் துவக்கத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சிக்கு ஒரேயொரு மதிப்பெண் குறைவாகப் பெற்று, அரசுப் பணியை இழந்த நிலையில், மனமுடைந்து போய் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் பெரும் சோகத்துடன் அமர்ந்தவாறு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், எங்கோ ஒலித்துக் கொண்டிருந்த 'கண்மணியே காதல் என்பது......' பாடல் காற்றில் தவழ்ந்து வந்து மனதை லேசாக்கி விட்டுச் சென்றது.
இதுபோன்ற பல லட்சக்கணக்கான ஏக்கமிகு நினைவு கூரல்கள் எஸ்பிபியை மையமிட்டு வந்து கொண்டேதான் இருக்கும்.
'ஆவாரம் பூ' படத்தில் இடம்பெறும் 'சாமிகிட்ட சொல்லி வச்சு....' பாடலை எஸ்பிபி பாடியதாகவே நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் அப்பாடலின் பல்லவியை பாடியது எஸ்பிபி சரண் என்பது பிறகுதான் அறிய முடிந்தது.
டிஎம்எஸ் மிகவும் உடல் நலிவடைந்திருந்த நிலையில் அவரை எஸ்.பி.பி ஓடோடி சென்று நலம் விசாரித்தது செய்தி ஊடகங்களில் வெளிவந்தது.
மனோவை தகப்பன் நிலையிலிருந்து அன்போடு கடிந்து கொண்டதையும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
போட்டியும், பூசலும் நிறைந்த வண்ணமிகு கலைத்துறையில் எப்படி ஒரு கலைஞன் தனது முந்தைய மற்றும் பிந்தைய தலைமுறைகளோடு இப்படியொரு நல்லுணர்வை தொடர்ச்சியாகப் பேண முடிந்தது என்பது, 74 வயது வரை பிசிறு தட்டாத அவரது குரலைப் போன்றே ஆச்சரியத்திற்குரியது.
நூலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் சற்றும் மிகையின்றி, உணர்வுப்பூர்வமாக அமைந்திருந்தன.
அதனாலேயே எந்த ஒரு கட்டுரை பற்றியும் தனியாக குறிப்பிடுவது நியாயமென்று தோன்றவில்லை.
Comments
Post a Comment