மொழிபெயர்ப்பு
இருட்டியபின் ஒரு கிராமம்
தமிழில் ஜி குப்புசாமி
வம்சி பதிப்பகம்
360 பக்கங்கள்
உலகின் குறிப்பிடத்தகுந்த 15 எழுத்தாளர்களின் 20 சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது.
தனது கலை வாழ்வின் உச்சத்தை அடைந்த படைப்பாளி,நம்ப முடியாத வீழ்ச்சியையும் அடைந்து, நிசப்தத்தை இசையின் மற்றுமொரு வடிவமாக எடுத்துக்காட்டி வாதிடும் கதை 'நிசப்தம்'. உண்மையை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வெளிப்படுத்தலாம் என்கிறான் அக்கலைஞன்.
சூதாட்டக்காரனாகவும், பெருந்தீனிக்காரனாகவும் அறியப்படும் தெலாகூ, நகராட்சி அறிமுகம் செய்யும் குளியலறை திட்டத்தின் 40 சந்தாதாரர்களில் ஒருவராகிறார். ஒவ்வொருவரும் மரணம் அடைகையில் அவருக்குரிய வட்டித்தொகை உயிருடன் நீடிக்கும் பிற சந்தாதாரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. தெலாகூ பிறர் மரணத்தை விரும்பி எதிர் நோக்குகிறார்.
இளமைப் பருவ தன்னம்பிக்கைக்காரர்கள், வாலிப வயதிலும், தொடர்ந்த முதிய வயதிலும் வாழ்வின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் தளர்ந்து விடுவதை நினைவுபடுத்துகிறார் 'இருட்டியபின் ஒரு கிராமம்' கதையில் வரும் பிளெட்சர்.
அசோகமித்திரன் கதை ஒன்றில் குழுவாக சிறுவயதில் விளையாடியவர்கள், பல வருடங்களுக்குப் பிறகு மருத்துவமனை ஒன்றில் சந்திக்க நேர்கையில் கண்டும் காணாதது போல் சென்று விடுவதை நினைவுபடுத்திய கதை இது.
வெவ்வேறு வகைமையிலான சுயமரணங்கள் பெரிதும் அச்சம் ஊட்டுகிறது 'தெற்கு நோக்கிய மரணங்கள்' கதையில். உண்மையில் சுய மரணங்கள் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரிடமும் பெரும் உளவியல் சிக்கலை அவர்தம் காலம் முழுக்க நீடிக்கச் செய்கிறது.
போர்ச் சூழலில் ஒன்றிணையும் பென்னி, பிரிம் ரோஸ் என்ற இரு சிறுமிகள் விளையாட்டில் கூட பிறரை தம்முடன் அனுமதிப்பதில்லை. காட்டிற்குள் துணிச்சலாக செல்பவர்கள், காண நேர்ந்த வினோதமான மிருகத்தை வாழ்வு நெடுகிலும் நினைவு கூர்ந்தவாறு இருக்கின்றனர்.
வேடன் மானைப் பார்த்த பின்புதான் அம்பை எய்கிறான். மீனவனோ தனது நம்பிக்கையின் அடிப்படையிலேயே வலையை வீசுகிறான் என்று குறிப்பிடும் 'கடவுளின் பறவைகள்' கதையில், மீனவன் மனைவி பிள்ளைகளைக்கூட உதறி பறவைகளின் மீது பெரும் ஈர்ப்பு கொள்கிறான்.
மனநிலை பிறழ்ந்த வைன்ஸ்டைனிடம் அன்பு காட்டும், நெருங்கத் தயங்கும் துறவி சிஸ்டர் ஐரின், மகனை முழுமையாக புரிந்து கொள்ள இயலாத பெற்றோர் என செல்கிறது 'வெண்பனி பிரதேசத்தில் கதை'.
காக்டெயில் ருசி பார்த்தலைப் போன்ற வாசிப்பு அனுபவத்தை அளித்திடும் நூல் இது. மூலக்கதையாசிரியர்களின் தனித்த அதிர்வுகளைக் கொண்டே அவர்தம் படைப்புகளை தமிழுக்கு கொண்டு வந்து விடுகிறார் மொழிபெயர்ப்பாளர்.
இறந்தவர்கள் அனைவரும் நகரம் ஒன்றில் தோன்றி விடுகின்றனர். அதே வேகத்தில் சிலர் மறைந்தும் போகின்றனர். உயிருடன் இருப்பவர்களின் நினைவுகளில் வாழ்பவர்கள் மட்டுமே அந்நகரில் நீடிக்கின்றனர்.
சினுவா ஆச்செபேயின் 'பித்தன்' கதை ஆப்பிரிக்க கிராமம் ஒன்றுக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.
மகன் வழிப் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடைமுறை உலகின் பிற பகுதிகளிலும் இருப்பதை அறிகையில் பெரும் வியப்பே ஏற்படுகிறது.
நாகரீகமற்ற கொடூரத்தனங்களை படம்பிடித்தலை ஒரு சில பக்கங்களிலேயே விவரித்தாலும் பதட்டம் ஏற்படுதலை தவிர்க்க முடியவில்லை.
பேருந்தில் வெகு இயல்பாக திருட நினைப்பவனை கோபத்துடன் தண்டிப்பதும், பரிதாபத்துடன் டாக்ஸி அமர்த்தி வீட்டில் கொண்டு சேர்ப்பதும், பர்சை இழப்பதும், ஆரம்பத்தில் எரிச்சல் அடையும் டிரைவரையும் இரக்கம் தொற்றிக் கொள்கிறது.
பிடிக்காத புத்தகம் நனைந்ததற்காக மகிழும் நபர், கண்டுகொள்ளாத பழைய நண்பன், கோபமுறும் அவனது காதலி, வாசித்த கட்டுரையின் தலைப்பாக கதை என ஹாருகி முரகாமியின் புனைவு ஆச்சரியமூட்டுகிறது.
பெருந்தொற்று காலங்களை நினைவுபடுத்தும் 'வெளியே', மாயயதார்த்த வாதங்களை சித்தரிக்கும் 'நிலத்தில் ஒரு சுருக்கம்', 'இயக்குனரின் முடிவு', 'கிறுக்குப்பசை' போன்ற கதைகளும் இத்தொகுப்பின் சிறப்புகள்.
சுயமரணங்கள் பிறரையும் படுமோசமாக தூண்டிவிடவே செய்கின்றன என்பதை 'ஈர்ப்பு விசை' சொல்லிச் செல்கிறது.
எவ்வளவு முயன்றும் மேலோட்டமான புரிதலைக் கொண்ட வாசிப்பு பதிவாகவே அமைந்துவிடுவது மொழி பெயர்ப்பாளரின் அசுரத்தனமான உழைப்புக்கு நியாயம் செய்வதாக அமையாது. வருங்காலங்களில் மேலும் முயல்கிறேன்.
Comments
Post a Comment