நாவல்
ஆகாயத்தாமரை
அசோகமித்திரன் நற்றிணை பதிப்பகம்
160 பக்கங்கள்
1970களின் சென்னை நகரத்தை நுட்பமாக காட்சிப்படுத்திவிடும் புனைவு இந்நூல்.
நகரத்துச் சூழல் ஆணின் வேலையின்மையை முற்றிலுமாக நிராகரித்து வேலையற்ற அவனது இருப்பினை கேள்விக்குள்ளாக்கி விடுகிறது.
ரகுநாதன் தற்காலிக பணி நீக்கத்தால் அதிர்ந்து மனம் போன போக்கில் செல்கிறான். மாலதியால் அவனது சிந்தனைகளுடன் உடன்பட இயலவில்லை.
மாலை நேரத்தில் குடிபோதையுடன் அவனிடம் அளவளாவும் ராஜப்பா, பிரிதொரு தருணத்தில் அலட்சியப்படுத்தி விரட்டுகிறார்.
மாலதியுடன் காரில் செல்பவன், ராஜப்பாவின் வீட்டிற்கே செல்ல நேர்வது அவனுக்கு வியப்பளிக்கிறது.
மகனது வேலை பறிபோவதை எளிதாக ஊகித்துவிடும் ரகுநாதனின் தாய் தொடர்ச்சியாக ஏற்படவிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களை எண்ணியும் வருந்துகிறாள்.
சிறுசிறு உதவிகளை அக்குடும்பத்திற்கு மெனக்கெட்டு செய்யும் பாலகிருஷ்ணன், ரகுநாதனால் உதாசீனப்படுத்தப்படுகிறார்.
தாயின் பேச்சிலுள்ள நியாயத்தை அவனது மனம் ஏற்கிறது.
ஜெமினி மேம்பாலம் கட்டப்படுதல், நேப்பியர் பாலம் விரிவாக்கப்படுதல் போன்ற அன்றைய செய்திகளை எளிய சொற்களில் எழுதிச் செல்கிறார் அசோகமித்திரன்.
நடுத்தர வயதிற்குரிய, வர்க்கத்திற்குரிய தயக்கம், வீம்பு, பின்வாங்கும் நடத்தை போன்ற குணங்களுடன் ரகுநாதனும், மேட்டிமை சமூகத்தின் அலட்சியம், உறுதியான செயல்களுடன் மாலதியும் அவரவர் பார்வையில் விவாதிக்கின்றனர்.
//வாழ்க்கையின் சிறப்பே இதுதானோ? ஏதோ ஒன்று நிகழ்வதற்காக சிலர் தட்டுப்படுகிறார்கள். அந்நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு அவர்கள் அப்படியே காற்றோடு கலைந்து மறைந்து போய்விடுகிறார்கள். தொடர்ந்த அல்லது நீடித்த உறவு என்றாலே ஒன்றும் நிகழ்வதற்கில்லை என்று அர்த்தம் போலிருக்கிறது//
அசோகமித்திரனின் வாழ்வு மீதான தீர்க்கமான பார்வையின் மேதமையையும், அவரது புனைவில் ஊடாடும் எளிமையின் வீச்சினையும் உணர்த்தி விடும் வரிகள் மேற்கண்டவை.
சென்னை நகர் மீளாச்சுழலில் சிக்கிக் கொண்டதாக கூறும் அவரது தீர்க்கதரிசனம் மற்றுமொரு வியப்பு, அவரது புனைவு எழுத்துக்களைப் போன்று.
Comments
Post a Comment