கனவுச்சிறை

 கனவுச்சிறை

 தேவகாந்தன்

 999 பக்கங்கள் 

காலச்சுவடு பதிப்பகம் 



பள்ளி நாட்களில் இலங்கைத் தீவு குறித்து ஆசிரியர்கள் மூலம் அறிந்திருந்தோம். இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் இருந்த நாட்கள் அவை.


 'அமைதிப்படை' ஏன் சண்டை இடுகிறார்கள்? என்றெல்லாம் எண்ணிய வயது அப்போது.


 இயக்கங்கள் குறித்த தகவல்கள், தமிழகத்தில் பத்மநாபா உள்ளிட்ட போராளிகளின் படுகொலைகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தன. ராஜீவின் மரணம் ஆறாத வடு ஒன்றை உருவாக்கியிருந்தது. அத்துன்பியல் நிகழ்வுக்குப் பிறகான ஆண்டுகளில் ஈழத் தமிழர் வாழ்வு குறித்து அடிப்படை புரிதல்கள் ஏற்பட்டன.


 மலையகத்தமிழர் எனப்படும் இந்திய வம்சாவளியினர், பூர்வீக இலங்கைத் தமிழர், இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் என்றவாறு புரிதல் நீண்டது.


 இலங்கைத் தமிழை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்குமளவு அத்தனை இனிமையாக உணர்ந்திருந்தோம் நாங்கள்.


 இறுதிக் கட்டப்போர் நடைபெற்ற தருணங்களில் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக ஒவ்வொரு நாளும் தமிழர் கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு இடமாக வீழும்போது சொல்லொணா துயரமொன்று பரவியதை மறுக்க இயலாது. பெரும் உயிரிழப்புகளும், முள்வேலி முகாம்களும் துயர் ஏற்படுத்தின.


ஐந்து பாகங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் 'கனவுச்சிறை', போரினை மையப்படுத்தாது போரினால் சாமானிய குடும்பங்களில் நிலைபெற்றுவிடும் பாதிப்புகளை பேசுகிறது.


 நான்கு சதுர கிலோமீட்டர் விஸ்தீரணம் மட்டுமே கொண்ட சின்னஞ்சிறு நயினா தீவில் போரின் கருணையற்ற கரங்கள் நீள்கின்றன.


 1981 முதல் 2001 வரையான 21 ஆண்டுகளில் அத்தீவு மனிதர்களிடத்தில் போர் ஏற்படுத்தும் தாக்கங்கள் உறுதியாக முன்வைக்கப்படுகின்றன.


 யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்விலிருந்து, சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற காலமான 2001 வரை நாவலின் காலம் நீள்கிறது.


 கைம்பெண்ணான மகேஸ்வரி, தனது பிள்ளைகள் ராஜி, ராஜேந்திரன், விஜி ஆகியோரை கரையேற்றிட பெரும் பிரயத்தனம் செய்கிறார்.


 உடல் ஊனமுற்ற பெண் விஜி குறித்த கவலைகளே அதிகம் அவருக்கு. எதிர்பாராத நல்வினையாக விஜிக்கு நல்லதொரு வாழ்வு அமைந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து விடுகிறாள்.


 மற்ற இரு பிள்ளைகளிடம் பெரும் ஏமாற்றமடையும் மகேஸ்வரி, விஜியுடனே கனடாவில் தங்கி விடுகிறார்.


மகளின் நிச்சயிக்கப்பட்ட மணம் நின்று விடுகையில், அண்ணனிடம் கண்ணீரோடு வாதிடுகிறார். மகளை அகப்பையினால் அகப்பட்ட இடத்திலெல்லாம் அடித்து நொறுக்குகிறார்.


 மகளிடம் எந்தத் தவறும் இல்லையென்பதை கவனத்தில் கொள்ளவில்லை அவர்.


 பூர்வீகக் காணியை விற்று பெருந்தொகையொன்றை மகனிடம் தந்து அதிலும் ஏமாற்றம் அடைகிறார்.


 தொடர்ச்சியான நிகழ்வுகளால் கடினப்படும் மகேஸ்வரியின் மனது, ராஜேந்திரன் மனைவி அம்பாவை சூழ்ச்சியுடன் வீழ்த்தி நிராகரிக்கிறது. கனடாவிற்குச் செல்லும் ராஜேந்திரன், விபத்து ஒன்றில் மரணிக்க, அம்பாவிற்கு இழைத்த துரோகத்தை எண்ணி கலங்குகிறாள் மகேஸ்வரி.


 முன்பொரு முறை அங்கு சென்றபோது தனது பேரனை பார்ப்பதைக்கூட தவிர்த்தவள், தற்போது அம்பாவையும் அவள் பிள்ளையையும் தன்னுடனேயே வைத்துக் கொள்ள எண்ணும் அளவுக்கு மனம் இரங்கிப் போகிறார்.


 இலங்கைத் தமிழ்ப் பெண்களின் தொடர்ச்சியான நம்பிக்கையிழப்புகளின், சோகங்களின் குறியீடாகவே நாவலில் இடம்பெறுகிறாள் மகேஸ்வரி.


பெரும் சம்பவங்களை எளிதாக வர்ணித்து வாசிப்பிற்கு செயற்கை ருசியைக் கூட்டுவதை தவிர்த்து, நாவல் சாமானியர்களின் வாழ்வையே பின்தொடர்ந்து செல்கிறது. நாவலின் கலையழகு மேம்பட்டு விடும் தன்மையும் இங்கிருந்தே துவங்குகிறது.


 விகற்பமின்றி நண்பன் சுதனுடன் கொழும்பு செல்லும் ராஜி, முன்னதாக தோழி ஜாஸ்மினுடன் விவாதித்து சண்டையிடவும் தவறவில்லை.


 நிச்சயிக்கப்பட்ட திருமணம் முறிந்தபின் சுதனுடன் இணைய ஏற்பாடாகிறது. தகவல் ஏதும் தெரிவிக்காமல் இயக்கத்தில் அவன் இணைந்த போதும் அவன் மீது கோபப்படவில்லை ராஜி.


 வங்கிக் கொள்ளை நிகழ்வுக்குப் பின் இயக்கத்தில் இருந்து வெளியேறி சுகமான வாழ்வை நாடுபவனை வெறுத்து ஒதுக்குகிறாள் அவள்.


ஜெர்மனிக்கு வந்து விடுமாறு சுதன் விடுக்கும் அழைப்பை ஏற்க மறுக்கிறாள். அகதிகள் முகாமில செவிலியாக தொண்டாற்றுகிறாள். நீதவான் ராஜநாயகம் குடும்பத்துடன் நல்லுறவை பேணுகிறாள்.


 யோகேஷின் தியாகத்தை மதிக்கிறாள். அவனே கேட்காத போதும் அவளே விரும்பி தன்னுடலை அவனுக்கு சமர்ப்பணம் செய்கிறாள்.


நாவலின் இறுதியில் சுதனுடன் செல்ல அவள் சம்மதிக்கும் போதும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தொண்டாற்றவே செல்கிறாள் என்பது புரிகிறது.


 நேரிடும் அனைத்து இன்னல்களையும் உறுதியுடன் எதிர்கொள்கிறாள் ராஜி. கொழும்புக்கு உடன் வருவதாக சொல்லியபின் கடைசி நேரத்தில் விலகிவிடும் தோழி ஜாஸ்மினுடன் வாதிடுபவள், சுதனுடன் சென்றதை அறிந்து அடித்து நொறுக்கும் தாயிடம் தவறு செய்யாததைச் சொல்லி கலங்குகிறாள்.


 நயினாத் தீவு இளம் பெண்களின் ஒற்றைக் குறியீடு 'ராஜி'. சாகச மனதுடன் பம்பாய் செல்லும் ராஜேந்திரன் டிராவல் ஏஜென்சி நடத்தி தமிழர்களை கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பெரும் பணம் சம்பாதிக்கிறான். விசுவலிங்கம் அவனை வந்து சந்திக்கும் வரை குற்ற உணர்வு ஏதும் அவனிடத்தில் இல்லை.


 மனமாற்றம் நிகழ்ந்தபின் தாய், தமக்கையை நினைத்து கண்ணீர் விடுகிறான். நான்கு வருடங்கள் அவனோடு வாழ்ந்து பிள்ளை பெற்ற அம்பாவிற்கு துரோகம் செய்கிறான். வெளிநாட்டிற்குச் சென்ற சில நாட்களிலேயே விபத்தில் இறந்தும் போகிறான்.


நயினா தீவில் சங்குக் கடை நடத்தி வரும் திரவியம், தமிழுணர்வு நிரம்பப் பெற்றவனாக, அறம் மிகுந்தவனாகவே இருக்கிறான்.


 உதயகுமாரனின் ரகசிய மணம் குறித்து அறிபவன், கொழும்பு சூழ்நிலைமைகளை புரிந்துகொண்டு நண்பனை ஆறுதல்படுத்துகிறான்.


 சிங்களப் பெண் சுவர்ணா அனுபவிக்க நேரிடும் கொடுமைகளும் நிகரற்றவை. வஞ்சகமாக உதயனை கொல்கிறார் குணானந்த தேரர்.


 சுவர்ணாவை அநீதியுடன் நெருங்கும் அவரின் அணுகலில், திரவியம் குறி வைக்கப்பட்டு தப்பி விடுகிறான்.


 வீட்டின் முகப்புவரை நெருங்கிவிடும் ஆபத்தை உணர்ந்த சுவர்ணா, அவனிடம் தோல்வி அடையவில்லை.


 உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் உடலை கீழிறக்கி வெறியைத் தணித்துக் கொள்கிறான் குணா நந்த தேரர்.


 உதயனின் இறப்புக்குப் பின் ஆதரவாக இருக்கும் திரவியிடம் இயல்பாக மனைவியாக வாழ்ந்து வரும் சுவர்ணா, தனது பிள்ளைகளை வலியுடன் பிரிந்து மரணிக்கிறாள்.


 அணில், நிமல் பெரேரா இருவரும் சிங்கள இனத்தவராக இருந்தபோதும் தமிழர்களுடன் இணக்கமாக இருக்கவே எண்ணுகின்றனர்.


பௌத்த மதத்தின் அன்பின் குறியீடு சங்கரானந்த தேரர். விகாரையில் தமிழர் மீதான குறைகளை நயமாகக் கூறி வாதிடுபவர், சிங்களர் இழைக்கும் தவறுகளையும் கண்டிக்கத் தவறவில்லை.


 காந்திய விழுமியங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர் அமைதியாத்திரை சென்று உபதேசி பிக்குவாகவே அறியப்படுகிறார்.


கைமீறிச் செல்லும் கொடுமைகளை சகிக்க முடியாமல் தவிக்கிறார். காந்திய சிந்தனைகளின் நம்பிக்கை குறியீடாக திகழ்கிறார் சங்கரானந்தர்.


 தன் பயணத்தின்போது விகாரையை காக்குமாறு அவர் விடுக்கும் கோரிக்கையை அறிந்து கலங்குகிறார்கள் தீவு மக்கள்.


 குணநந்த தேரரால் கொல்லப்பட்ட சங்கரானந்தரின் அழுகிய உடல் சில நாட்களுக்குப்பின் மீட்கப்படுகிறது.


 சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான போராட்டம் சாத்வீகமாகவே நீடிக்கையில் இது போன்ற விளைவுகளே கிடைக்குமோவென்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது இங்கு.


தந்தை செல்வாவின் அறப்போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டு தீவு மக்களின் அன்பைப் பெற்ற தலைவராக விளங்கிய சுந்தரலிங்கத்தின் மரணம் அகதி முகாமில் நிகழ்கிறது.


 மகன் சுதனின் அறமற்ற செயல்களை கண்டிக்கவும் மகேஸ்வரியின்  கண்ணீருக்கு பதில் அளிக்க இயலாமலும் தவித்து மடிகிறார் அவர்.


 பிள்ளைகளால் புறக்கணிப்புகளுக்கு ஆளாகி நடைப்பிணமாக வாழும் விசுவலிங்கம், தனது உடல் இயலாமைகளை அனுசரித்து பம்பாய்க்கு மகேஸ்வரியுடனும், அஸ்ஸாமிற்கு தனித்தும் பயணித்து அறத்தின் பக்கம் நிற்கிறார்.


 மனைவி சரஸ்வதியும், மகள் ஷீலாவும் அவரை புறக்கணித்து ஒதுக்குகையில் நமக்கும் பெரும் வருத்தமே தோன்றுகிறது.


 'ஜெர்மனிக்கு நீ என்னுடன் வருகிறாயா?', என்ற கேள்விக்கு உடனடியாக தனது செயலில் சுதனுக்கு பதிலளிக்கும் ஷீலா, அங்கு ஏற்பட்டுவிடும் முரண்களுக்குப் பிறகு, சுதனிடமிருந்து பிரிந்து, ராஜியை நினைக்குமாறு செய்து விடுகிறாள்.


மகளின் செய்கையினால் மகேஸ்வரியின் முன்பு கூனிக் குறுகி நிற்கிறார் சரஸ்வதி.


'அவர்கள் வாழ எண்ணிய வாழ்க்கை இல்லை அது. அது  வாழ்க்கையே அல்ல'  என்ற வரிகள் ஈழத்தமிழரின் தொடர்ச்சியான பெரும் துயரில் தோய்ந்தவை.


 கண்ணியமிகு இளைஞனாக நாவலில் அறிமுகமாகும் சுதன், வழிதவறிச் செல்வதும், வருந்தி அழுவதும் நிகழ்கிறது.


 கடலின் மகனாக அலையின் வேகம், காற்றடிக்கும் திசை, பாறைப் பகுதிகள், மணல் திட்டுக்களை அறிந்த யோகேஷ் நாடு திரும்புகையில் சுடப்பட்டு வீழ்கிறான்.


 'பெரும் புதிர்களை உள்ளடக்கிய கடல், தனது மர்மங்களின் மீதான அவனது கூர்மதியை விரும்பவில்லை' என்ற வரி நாவலில் இடம் பெறுகிறது.


 சுதனின் தமக்கை அரசி, ராஜுக்கு இணையான பாத்திரமாக அறவுணர்வு மிகுந்தவளாக இருக்கிறாள். சுதனின் பணத்தை உறுதியுடன் மறுக்கிறாள்.


 கவிதையால் அறச்சீற்றத்தை வெளிக்காட்டும் ராகினி, தலையாட்டியால் காட்டிக் கொடுக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். தலையாட்டியின் மரணம் நாவலின் இறுதியில் நிகழ்கிறது.


 மனநிலை சரியில்லாத தியாகு, நம்ப முடியாத தூய்மையான அன்பினை காட்டுகிறான். கடலில் நீந்தியவாறு இந்திய மண்ணை அடைபவன், மனநிலை சற்றுத் தெளிவான நிலையில் மீண்டும் நயினா தீவை அடைகிறான்.


 நேசமலர் ரீச்சரின் பிள்ளை 'விதுர்' இப்போது அவனுக்குத் துணையாக இருக்கிறான்.


 பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதும் தீவின் ரத்தமும் சதையுமான மனிதர்களானதால், சில 100 பக்கங்களுக்கு ஒவ்வொருவரும் இடைவெளி விட்டு இடம்பெற்றாலும் வாசகனுக்கு குழப்பம்  ஏற்படுத்துவதில்லை எவரும்.


 தேவிபாரதியின் விரிவான, ஆழமான முன்னுரையை துவக்கத்திலும், நாவலை வாசித்த பின்னுமாக இருமுறை வாசித்தேன்.


 போரின் மறுபக்கமாக சாமானியர்களின் வாழ்வை நேர்த்தியாக பதிவு செய்த தேவகாந்தன், 5 பாகங்களாக வெளியான பெரும் நாவலினை தொகுத்து செம்பதிப்பாக வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம், தனது 'தமிழ் நாவல்' கட்டுரைத் தொகுப்பு நூலில் கனவுச்சிறைக்கு நேர்த்தியான மதிப்புரை எழுதியுள்ள கோவை ஞானி, 'முக்கியமான நாவல் இது!' 'அவசியம் அவசியங்கள்!' என அறிவுறுத்திய எனது ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி, காலச்சுவடு வெளியிட்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களில் எந்த நூல் குறித்து தகவல் கேட்டாலும் உடனடியாக சில குறிப்புகளுடன் அறிமுகம் செய்யும் அன்பு நண்பர் 'காலச்சுவடு' அய்யாசாமி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும்! அன்பும்!.





Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்