கட்டுரைத்தொகுப்பு

 ஏகே செட்டியார் படைப்புகள் முதல் தொகுதி

பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

சந்தியா பதிப்பகம் 

ஆயிரம் பக்கங்கள்



'ஒரு பிறவியில் பல பிறவிகளுக்குரிய அனுபவங்களைத் தருவது வாசிப்பின் பயன்' என்று நண்பர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்.


தினமணி நாளிதழில் நடுப்பக்க கட்டுரையில் இன்று அதே வரியை கிருங்கை சேதுபதி அவர்கள் கூறியிருக்கிறார். வாசிப்புப் பழக்கம் உடையவர் ஊர் சுற்றும் இயல்பினராகவும் இருக்கையில் அனுபவங்களின் அளவு பன்மடங்கு அதிகரித்து விடுகிறது.


ஏகே செட்டியார் மிகமிக அரிய மனிதர் அவரது மேம்பட்ட சிந்தனையும், ஊர்சுற்றும் குணமும், காந்தி மீதான காதலும், தன்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாத இயல்பும் நம்பவே முடியாதவை.


 இரு தொகுதிகளாக 2000 பக்கங்களுக்கு நீளும் இத்தொகுப்பு பணியில் ஈடுபட்ட கடற்கரய் அவர்களின் மெனக்கெடலை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியம் ஏற்படவில்லை.


ஏனெனில் காந்தியின் மீதான ஏகே செட்டியாரின் காதலைப் போன்றதுதான் செட்டியார் மீதான கடற்கரயின் ஈர்ப்புணர்வு என்றவாறு தெளிந்து கொள்ளலாம். அவரது நீண்ட முன்னுரையே அதற்கு சாட்சி.


ஏகே செட்டியார் தயாரித்த மகாத்மாவின் ஆவணப்படம் குறித்த கல்கியின் நீண்ட விமர்சனக் கட்டுரை, காந்தி மீதான அவரது அன்பையும், செட்டியார் மீதான அவரது புரிதலையும் காட்டுகிறது.


யுவான் சுவாங், வாஸ்கோடகாமா, கொலம்பஸ், மெகல்லன் பற்றியெல்லாம் வரலாற்றுப் பாடநூல்களில் படித்திருக்கிறோம்.


ராகுல் சாங்கிருத்தியாயன் குறித்தும் வாசிப்பு பழக்கம் உடையவர்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள்.


தனது வாழ்வின் பெரும்பகுதியை ஊர் சுற்றல், காந்தியின் ஆவணப்படம் தயாரித்தல், பயண இலக்கியம் படைத்தல் என்றவாறு மிகவும் சவால்களாகவே அமைத்துக் கொண்டுவிட்ட கருப்பண்ணன் செட்டியார் குறித்து பரவலாக அறியப்படாத நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. 


செட்டியார் விவரிக்கும் பயணக்கட்டுரைகள் தட்டையான சொற்கள் ஏதுமற்ற எளிய முறையில் அமைந்தவை. இந்த இடத்திற்கு, இந்த நாளில், இந்த நேரத்திற்கு சென்றோம், கண்டு களித்தோம், மெய்மறந்து நின்றோம் போன்ற ஜோடனை மிகுந்த சொற்கள் ஏதுமில்லை இவற்றில்.


ஹவாய்த் தீவுகள் குறித்து எழுதுகிறார் எனில், அத் தீவுகளின் வரலாறு, விஸ்தீரணம், மக்கள் தொகை, பேசும் மொழிகள், மனிதர்களின் குணாதிசயங்கள் என்றவாறு நீள்கின்றன தகவல்கள். புள்ளி விபரங்கள் வாசிப்பிற்கு உறுத்தலாக இல்லாத வகையில் அமைந்துள்ளன.


100 ஆண்டுகளுக்கு முந்தைய தென் ஆப்பிரிக்காவில், லண்டனில் காட்டப்பட்ட நிறப்பாகுபாடு வேதனையளிக்கிறது.


பாரிஸ் நகரின் சமத்துவம், ரயில், விமானப் பயணங்கள், ஹோட்டல் அறைகள் குறித்த தகவல்கள் ஊர் சுற்றிவிட்ட அனுபவத்தையே அளித்து விடுகின்றன.


 ஸ்காண்டிநேவிய நாடுகளான டென்மார்க், நார்வே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்தில் தங்கிய, சுற்றிப் பார்த்த அனுபவங்களை அழகான கட்டுரைகளாக படைத்திருக்கிறார் தகவல் களஞ்சியமாகவே மாறிவிட்ட ஏகே செட்டியார்.


 அமெரிக்க பள்ளியொன்றில் புகைப்படக் கலையை பெரும் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார். 'விரைவாக கற்றுமறத்தல்' என்ற நிலை வாசகனுக்கு புதுமையாக அமைகிறது.


 பல வயதினரும் மாணவர்களாகத் திகழ்ந்த புகைப்பட பயிற்சி பள்ளி அலாதியான அனுபவங்களை செட்டியாருக்கு அளித்திருக்கிறது.


 மிதக்கும் அரண்மனை என்றவாறு வர்ணிக்கப்படும் கப்பலும், கப்பல் பிரயாணம் பற்றிய கட்டுரைகளும் கடலில் மிதப்பது போன்ற உணர்வை அளிப்பவை.


 காபி பிரியராக, புத்தகப் பிரியராக விளங்கிய செட்டியார் நாணய மாற்றலில் சில நேரங்களில், சில நாடுகளில் தாம்  ஏமாற்றப்பட்டதையும் பதிவு செய்துள்ளார்.


ஒவ்வொரு பைசாவையும் கணக்குப் பார்த்து செலவு செய்துள்ளமையும், பணத்தை மிச்சப்படுத்த பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிய அதே காலகட்டத்தில், காலதாமதத்திற்கு அஞ்சி, ரயில் பயணத்தை தவிர்த்து பல மடங்கு செலவழித்து விமானத்தில் பயணித்தமை போன்ற தகவல்கள் மூலம் பணத்தைப் போன்று நேரத்தையும் ஏகே செட்டியார் மிக கவனமாக கையாண்டுள்ளதை அறிய முடிகிறது.


 பகட்டின்றி கூறப்படும் நேதாஜி மற்றும் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் உடனான சந்திப்புகள் போன்றே ராஜாஜியிடம்  அவமானப்பட நேர்ந்த தகவலும் தன்னிரக்கம் இன்றியே  கட்டுரையாளரிடம் வெளிப்படுகின்றன.


 மழலைக் கல்வி முறையின் மேதையான மரியா மாண்டிசோரி அம்மையாராலும் பெரும் அன்பாக நடத்தப்பட்டிருக்கிறார் அவர்.


 பின்லாந்தில் 63,000 ஏரிகள் இருப்பதாக கூறும் ஒரு கட்டுரை, அதே கணக்கினால் தானோ என்னவோ 63,000 மக்கள் அமர்ந்து காணுமாறு ஒலிம்பிக் ஸ்டேடியம் கட்டப்பட்டதாக கூறுகிறது.


 பின்லாந்தில் கோடை காலத்தில் காலை ஒரு மணிக்கு உதயமாகிவிடும் சூரியன், இரவு 11 மணிக்கு அஸ்தமிக்கிறது. இரவு 12 மணிக்கு கூட போதுமான வெளிச்சம் இருப்பதாக அறியப்படுகையில் இயற்கையின் முடிவில்லா ஆச்சரியங்களை உணரலாம்.


ஹிட்லரின் ஜெர்மனிக்கும், முசோலினியின் இத்தாலிக்கும் கூட கம்பீரமாக சென்று பயணித்து திரும்பி இருக்கிறார் செட்டியார்.


முசோலினியின் அரசாங்கம் தேகப்பயிற்சி கூடங்களை யுத்த பயிற்சி முகாம்கள் போன்று நடத்தியதை ஒரு கட்டுரையில் கூறுகிறார்.


 லண்டனில் ஹோட்டல் கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கிறார். பணக்காரர்கள், பிரபுக்கள் மட்டுமல்ல ஏழைகளும் லண்டனில் வசிப்பதாக கூறுகிறார். அம்மக்கள் வசிக்கும் பகுதி பெரும் சுகாதாரக் குறைவான கிழக்கு லண்டன் பகுதி என்று வாசிக்கையில் ஏற்றத்தாழ்வு எல்லா இடங்களிலும் விரவி இருப்பதை அறிய முடிகிறது.


 பாரீஸ் மெட்ரோ ரயில்களைப் பற்றி கூறுகையில், அவை லண்டன் ரயில்களைப் போன்று சுத்தமாகவோ, நியூயார்க் ரயில்களைப் போன்று அதிவேகமாகவோ, இல்லாவிட்டாலும் கூடிய வரையில் சௌகரியமாக இருந்ததாக ஒப்புமை செய்கிறார்.


பொதுவாக ஏகே செட்டியார் குறித்து அறிந்துள்ள தமிழ் வாசகர்கள் அவரை உலகம் சுற்றிய தமிழன் என்றவாறுதான் அறிந்திருப்பர். 


இத்தொகுப்பின் கட்டுரைகளை வாசிக்கும்போது, உலக நாடுகளை மட்டுமின்றி, பெரும்பாலான இந்திய நகரங்களுக்கும், தமிழ்நாட்டின் முக்கியமான இடங்களுக்கும் கூட அவர் பயணப்பட்டிருக்கிறார் என்பதும், அந்நகரங்கள் குறித்து மிக நுட்பமாக எழுதியிருக்கிறார் என்றும் அறியலாம்.


 இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கட்டுரைகளை முன்பே மின் நூல்களாகவும், சிறு நூல்களாகவும் வாசித்திருந்த போதும் அலுப்பு தோன்றாத மறு வாசிப்புக்குரிய கட்டுரைகள் இவை.


 பயணங்களைக் குறித்து திட்டமிடுபவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கக் கூடியவை இக்கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள பல குறிப்புகள்.


செல்லும் இடங்களில் எங்கு நல்ல உணவு கிடைக்கும், தங்கும் இடங்களில் எங்கெல்லாம் சிக்கல் ஏற்படும், பாதுகாப்பு குறைவான நகரங்கள் எவை, தவறவே விடக்கூடாத பகுதிகள் எவை போன்ற தகவல்களின் மூலம் ஊர் சுற்றுதலில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வழிகாட்டிகளாக திகழ்கின்றன  செட்டியாரின் இக்கட்டுரைகள்.


 சென்ற மாதம் புதுச்சேரிக்கு சென்றிருந்த போது ரோமெய்ன் ரோலண்ட் நூலகத்தை கண்டோம். உள்ளே சென்று பார்க்க விரும்பியபோதிலும் எங்களுடன் வந்திருந்த குழந்தைகள் தயங்கியபடியே மறுக்க ஏமாற்றத்துடன் திரும்பினேன்.


ரோமெய்ன் ரோலன்ட் உடனான ஏகே செட்டியாரின் சந்திப்பு குறித்து வாசிக்கையில் பெரும் வியப்பு ஏற்பட்டது.


 அவரது காலத்து தலைவர்களில் பெரும்பாலானவர்களுடன் பரிச்சயம் மிகுந்தவராகவே விளங்கி இருக்கிறார்.


 'அண்ணல் அடிச்சுவட்டில்' தலைப்பில் அமைந்துள்ள ஒவ்வொரு கட்டுரையும் 'வாழ்க நீ எம்மான்' என்ற சொற்களுடன் நிறைவடைகின்றன.


 பொதுவாகவே நேர்மை மிகுந்த, கண்ணிய நடத்தையுடைய ஏகே செட்டியார், காந்தி ஆவணப்படம் குறித்த தயாரிப்பில் மேலதிகமான நேர்மையை பின்பற்றியுள்ளார்.


 சில நூறு அடி பிலிம்களைக்கூட பல மைல் தூரம் பயணித்து பெரும் பணம் செலவழித்து பெற்றிருக்கிறார்.


 பல நேரங்களில் பலரால் ஏமாற்றப்பட்டும் இருக்கிறார். சில தருணங்களில் அவர் நெகிழ்ந்ததும் உண்டு.


 பல பிரிண்டுகள் போடப்பட்டு மிகவும் புத்திசாலித்தனமாக பாதுகாக்கப்பட்ட வரலாற்று ஆவணமான காந்தி படம் எங்கே மறைந்து போனது என்பதே அறியாமல் ஆனது நகை முரண்.



ஆவணப்படத்திற்கு பின்னணி பேசுவதற்காக சத்தியமூர்த்தி அவர்களை ஒப்பந்தம் பேசி ரத்தாகும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.


 ரயிலில் ஒன்றரை நாட்கள் உடன் பயணித்த போதும் ஒரு வார்த்தை கூட பேசாமல் சத்தியமூர்த்தி அவர்கள் தன்னை புறக்கணித்ததாக வருந்துகிறார்.


சில மாதங்கள் கூட பள்ளிக்குச் சென்று முறையான கல்வி பயிலாத பண்டிதமணி மு கதிரேசச் செட்டியார் திறன்மிகு ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.


 புத்தகங்களை வாங்கி வெறுமனே அடுக்கி வைக்காமல், தொடர்ச்சியாக அவற்றை வாசித்து, தேவைப்படுகையில் மட்டும் புதிய புத்தகங்கள் வாங்கும் கதிரேசச் செட்டியாரின் வழக்கம் குறிப்பிடத்தக்கது.


 தன்னையும் தனது பணிகளையும் முன்னிறுத்திக் கொள்ளாத கூச்ச உணர்வடையும் தமிழறிஞர்களை சந்தித்து உரையாடியதை பெருமிதம் பொங்க பதிவு செய்கிறார்.


 பிறந்த நாட்டில் தாழ்ச்சியாக கருதப்பட்ட வெள்ளையரின் ஒரு பிரிவினர், நமது நாட்டில் தோட்டக்காரத் துரைகளாக அறியப்பட்டமையும், 'கூலித்தமிழ்' என்ற நூலினை அறிமுகம் செய்து நம்மை சிறுமையடையச் செய்ததும் வருத்தமுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.


'பஸ் பிரயாணம்' குறித்த கட்டுரைகளை ஒரு ஊர்சுற்றிதான் இவ்வளவு சிறப்பாக எழுத முடியும்.


 போக்குவரத்து ஊழியர்களின் உடல்நலத்தில் அந்நாளைய நிர்வாகத்தினர் பெரும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். உடல்நலம் குறைகையில் கோபமும், எரிச்சலும் ஏற்படுகிறது.


 அதனால் வியாபாரம் பாதிப்படைகிறது என்ற அளவில் பணியாளர்களின் நலன் காக்கப்பட்டிருக்கிறது.


 பல நாடுகளின் பஸ் போக்குவரத்து முறைகளுடன் நமது சென்னை மாகாண போக்குவரத்துமுறை ஒப்பிடப்பட்டு, குறைகள் நயமாக சுட்டப்பட்டுள்ளன.


 தென்னாப்பிரிக்காவில் கறுப்பு நிற மனிதர்களைக் காட்டிலும் காட்டு மிருகங்கள் அதிகமான சுதந்திரத்துடன் வாழ்கின்றன என்று ஒரு கட்டுரை கூறுகிறது.


 காட்டுப் பிரதேசத்தையும், காட்டு மிருகங்களையும் கண்ணால் கண்டு அறிய வேண்டும் என்ற தென்னாப்பிரிக்க கல்வித்திட்டம் மாணவர்களுக்கு எத்தகைய அறிவுத் தேடலை அளிக்கும் என்று நினைக்கையிலேயே மகிழ்ச்சி ஏற்படுகிறது.


 ஒவ்வொரு நாட்டிலும் பஸ்களுக்காக காத்திருக்கும் நேரத்தை மிகத் துல்லியமாக பட்டியலிடுகிறார் செட்டியார்.


 'வேறு என்ன மிஞ்சி இருக்கிறது இவ்வாழ்க்கையில் சில நினைவுகளைத் தவிர' என்ற வண்ணதாசனின் கவிதை வரியை பலமுறை நினைவுபடுத்தியது இந்நூல்.


 ஏகே செட்டியார் என்ற அதிசய மனிதரைப் பற்றி அவரது எழுத்துக்கள் வாயிலாக ஓரளவு அறிந்து கொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.


தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பண்பின் காரணமாக அவரது படைப்புகளை பெரும் பிரயத்தனத்துடன் தேடி தொகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.


 கடற்கரய் மத்த விலாச அங்கதம் மிக உன்னதமான இலக்கியப் பணியை செய்திருக்கிறார். இது அசாத்தியமான பணியும்கூட.


 சந்தியா பதிப்பகம் இந்நூலை அழகுற வெளியிட்டுள்ளது. ஆங்காங்கே தென்படும் அச்சுப் பிழைகளை அடுத்த பதிப்பில் சரிசெய்தல் வேண்டும்.


 2016ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியாகி இருக்கிறது. ஏழு ஆண்டுகள் முடிந்த பின்னும் இத்தொகுப்பு மறுபதிப்பு காணவில்லை.


 தமிழ் இலக்கியச் சூழலில் வேறென்ன நம்மால் எதிர்பார்க்க இயலும்? இறுதியாக ஏ கே செட்டியார் குறித்து ஒரே ஒரு வரி,


 வாழ்க நீ எம்மான்!












Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்