கல்வி
மயிர்தான் பிரச்சினையா? கல்விசார் கட்டுரைகள் பெருமாள் முருகன்
காலச்சுவடு பதிப்பகம்
166 பக்கங்கள்
காலச்சுவடு இதழ்களிலும், அருஞ்சொல் இணைய இதழ்களிலும் பெருமாள் முருகன் கடந்த சில ஆண்டுகளாக எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
கல்லூரி ஆசிரியராகவும், தேர்ந்த எழுத்தாளராகவும் நிலைபெற்றிருக்கும் பெருமாள் முருகன், கல்வியாளர் நிலையில் தனது ஆதங்கங்களையும், சிந்தனைகளையும் வியக்கவைக்கும் நடுநிலையுடன் எழுதியுள்ளார்.
கல்வி வியாபாரம் குறித்த கட்டுரைகள் முகத்திலடிக்கும் உண்மைகளை தெளிவாகப் பேசுகின்றன. நஷ்டமில்லா பெருவியாபாரமாகிவிட்ட தனியார் பள்ளிகள் குறித்த தகவல்கள் கல்விப்புலத்தில் பணியாற்றுபவர்கள் அறியாதவை அல்ல.
கலகக் குரல் என்றுமே உரிய தாக்கங்களை ஏற்படுத்துவதுடன், உகந்த சந்தர்ப்பங்களில் கருணையின்றி நடத்தப்படும் அவதூறுகளுக்கும் ஏதுவாகி விடுகிறது.
வெறும் பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் இவ் வணிகர்களிடம் அறத்தை எதிர்பார்ப்பது பேதமையன்றி வேறென்ன?
ஆசிரியர் சமூகம் குறித்த பெருமாள் முருகனின் கட்டுரைகள் பெரும் எதிர்ப்புகளை அவருக்கு அளித்தும், பணியிட மாற்றம் உள்ளிட்ட தொந்தரவுகளுக்கும் ஆளாக்கியிருக்கின்றன.
கலகக்குரல் சிந்தனையாளன் ஒருவனுக்கு தனித்துவம் மட்டும் அளிப்பதில்லை அவனைத் தனியனாகவும் ஆக்கிவிடுகிறது.
'மாதொருபாகன்' சர்ச்சையின்போது பல தரப்பினர் பெருமாள் முருகன் மீது பொங்கியதற்கான காரணம் இப்புத்தகத்தை வாசிக்கையில் தெளிவாக விளங்குகிறது.
கல்லூரியில் பணியாற்றும் தமிழாசிரியர்கள் பெரும்பாலும் மாணவர்களை ஈர்ப்பவர்களாகவே இருப்பர். மாணவர் நோக்கிலேயே சிந்திப்பர். பரஸ்பர அன்பும், புரிதலும் இரு தரப்பிலும் நிறைந்திருக்கும்.
ஆனால் பள்ளியளவில் மாணவர்களின் சிகை அலங்காரம் உள்ளிட்டவைகளை கவனிக்கும், நெறிப்படுத்தும் கடமை பள்ளி ஆசிரியர்களுக்கு உண்டு கிரிக்கெட்டர்களைப் பார்த்து முடிவெட்டிக் கொள்ளும் மாணவர்கள்தான் சினிமாக்காரர்களைப் பார்த்து புகை பிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.
அது சார்ந்த கட்டுரைகளில் மட்டுமே பெருமாள் முருகனின் கருத்துக்களுடன் முரண்படுகிறேன்.
Comments
Post a Comment