சொன்னால் நம்ப மாட்டீர்கள்
சொன்னால் நம்பமாட்டீர்கள் சின்ன அண்ணாமலை
மின் நூல்
சிறியதும், பெரிதுமான 60 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்!' என்ற சொற்கள் இடம் பெற்று விடுகின்றன.
விடுதலைப் போராட்ட வீரராகவும், காங்கிரஸ் பேரியக்க தொண்டராகவும், தமிழ்ப் பண்ணை பதிப்பாளராகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும் வாழ்ந்து மறைந்திருக்கிறார் சின்ன அண்ணாமலை.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பெரும்பாலான தமிழ்நாட்டு ஆளுமைகளுடன் நல்லதொரு தொடர்பு வாய்க்கப் பெற்றிருக்கிறது இவருக்கு.
திருவாடானை சிறையிலிருந்து மக்களால் விடுவிக்கப்பட்டதிலிருந்து, தலைமறைவு வாழ்வு, பதிப்பாளராக செயல்பட்டமை என்றவாறு அவரது அனுபவங்கள் வண்ணமயமானவை.
தத்துப் பிள்ளையாக தன்னை வழங்க தந்தையார் முடிவெடுத்ததையும், அம்முடிவை உறுதியாக எதிர்க்கும் அவரது அப்பத்தா, தமது வம்சமே ஆண்வாரிசு அற்றுப்போகும் என்று புலம்பியதையும் குறிப்பிடுபவர், தனது அப்பத்தா அஞ்சியது போன்றே நடந்து விட்டதை எண்ணி வருந்துகிறார்.
பெரியாரை விமர்சித்து அவரது மேடையிலேயே பேசி பத்து ரூபாய் சன்மானமாக வாங்கியிருக்கிறார். அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது அவருடன் உரையாடியவாறு ரயிலில் பயணித்திருக்கிறார்.
சிவாஜி ரசிகர் மன்றம் துவக்கி, காங்கிரஸ் இயக்கத்திற்கு புத்துயிரூட்ட முயற்சி செய்திருக்கிறார்.
ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்களுடன் சின்ன அண்ணாமலை மிக நெருக்கத்துடன் இருந்ததை அறிய முடிகிறது.
சரித்திர படங்களிலிலேயே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆரை சமூகப் படங்களின் பக்கம் திருப்பியதில் இவரது பங்கும் இருக்கிறது.
லட்சிய வாதத்துடன் விடாப்பிடியாக தமிழ்ப்பண்ணை நடத்தி நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
ரசிகமணி டி கே சியின் இல்லத்தில் அவரது 'இதய ஒலி' நூலினை கவர்ந்து வந்தமை மற்றும் ஒரு சுவாரஸ்யம்.
பெரும் சிறப்புடன் சமூக இயக்கமாக அந்நாட்களில் மக்களின் திரளான ஆதரவுடன் செயல்பட்ட திராவிடர் கழகத்தை உறுதியுடன் எதிர்த்திருக்கிறார்.
காமராஜருடன், கலைவாணருடன் சவால் விட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
இத்தனை சிறப்புகளை உடைய சின்ன அண்ணாமலையை இத்தனை நாட்களாக தெரிந்து வைத்துக் கொள்ளாமல் போனது 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' வகையிலான வியப்புதான்.
Comments
Post a Comment