கல்வி
நூலின் பெயர் : தெருக்களே பள்ளிக்கூடம்
ஆசிரியர்: ராகுல் அல்வரிஸ் தமிழில் :சுஷில் குமார்
வெளியீடு : தன்னறம் நூல்வெளி/ குக்கூ காட்டுப்பள்ளி
'சாளரம் வழியாக வானம் நோக்கும் வகுப்பறை குழந்தை தானாய் திரும்பும் வரை காத்திருக்கும் கனவு ஆசிரியருக்கு' மேற்கண்ட வரிகளைக் கொண்டு இந்நூலினை அர்ப்பணிக்கிறார் ராகுல் அல்வரிஸ்.
Free from school என்ற தலைப்பில் 16 வயது சிறுவன் எழுதிய நூல் இது.
தனது உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்தபின், உள்ளுணர்வின் வழிகாட்டலில், பள்ளிப் படிப்பில் ஓராண்டு இடைவெளி விட்டு சுய கற்றலில் ஈடுபட்டிருக்கிறார் இந்நூலாசிரியர்.
அவரது பெற்றோரின் முழு ஒத்துழைப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. நன்கு திட்டமிடப்பட்ட, மிக கவனமாக தேர்வு செய்யப்பட்ட, ஆச்சரியமூட்டும் பயணம் இது.
கோவாவில் இருந்து புனேவிற்கு முதல் கட்டமாக பயணிக்கிறார். பாம்பு பூங்காவில் சில நாட்கள் தங்கி பாம்புகளின் வளர்ச்சி, விஷத்தன்மை, விஷ முறிவு மருந்து தயாரிக்கும் முறைவரை அரிய தகவல்களை முழுமையாக கற்றுணர்கிறார்.
ஊர்வனவற்றின் மீதான ராகுலின் தனியாத ஆர்வம் மண்புழுக்கள், முதலைகள் வரை நீள்கிறது.
மண்புழுக்கள் குறித்த அறிவைப் பெற சென்னைக்கு பயணிக்கிறார் அவர். 'குப்பையை தங்கமாக மாற்றுதல்' என்றவாறு மண்புழு வளர்ப்பு குறித்த களப்பணி குறிப்புகள் எழுதிச் செல்கிறார்.
மாமல்லபுரத்தில் உள்ள முதலைப் பண்ணைக்கு செல்வதற்கு முன்பாக சென்னையில் சிலந்திகள் வளர்ப்பில் ஈடுபடும் டாக்டர் விஜயலட்சுமி வழிகாட்டலில், கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு உயிரியல் ஆயுதமாக சிலந்திகளை பயன்படுத்துதலைக் கண்டு வியக்கிறார்.
அம்மையத்தில் தங்கியிருந்த சில நாட்களின் அனுபவங்களையும் நுட்பமாக பதிவு செய்து விடுகிறார்.
ஓராண்டு அனுபவங்களை நிறைவு செய்துவிட்டு கல்லூரியில் சேர தயாராகும்போது பெல்காமில் நடக்கவிருந்த சுற்றுச்சூழல் தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்.
பெங்களூர் பள்ளிகளில் அவரது அனுபவங்களை உரையாற்றி மாணவர்களை ஊக்கமூட்டுகிறார்.
கல்லூரி படிப்புக்குப்பின் ராகுல் பல புத்தகங்கள் எழுதும் தனித்துவம் கொண்ட எழுத்தாளராக, இயற்கை ஆர்வலராக உருவெடுத்து விடுகிறார்.
மாணவர்கள் நான்கு சுவர்களுக்குள் ஆசிரியர்களிடம் மட்டுமே கற்றுக் கொள்வதில்லை. அவர்தம் கற்றலில் ஆசிரியர்களின் பங்களிப்பு அளவிட முடியாததெல்லாம் இல்லை என்பதை உணர்த்திவிட்ட நூல் இது.
Comments
Post a Comment