கவிதைகள்
இருளும் ஒளியும்
பிருந்தா சாரதி
படைப்புப் பதிப்பகம்
120 பக்கங்கள்
ஒன்றை உயர்த்துவதும், பிறிதொன்றை தாழ்த்துவதுமே மனித அறிவின் மேம்போக்கான நிலை.
கருப்பு நிறம் அழுக்கின், துக்கத்தின் குறியீடுகளாகவும், வெண்மை நிறம் தூய்மையின், சமாதானத்தின் குறியீடுகளாகவும் கருதப்படுவது எண்ணத்தக்கவை.
அவ்வகையில் வாழ்வின் தொடக்கமும், முடிவுமான இருள், வெறுப்பு மேலோங்க ஒதுக்கப்படுகிறது.
ஒளியே நம்பிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் நீடிக்கிறது.
இக்கவிதைத் தொகுப்பில் பிருந்தா சாரதி இருளையும், ஒளியையும் அவற்றின் நேர்மறையான கூறுகளினூடாகச் சென்று வியந்தோதுகிறார்.
'பிறப்பா இறப்பா தீக்குச்சியின் உரசல்'
ஒளியின் பிறப்பாகவும், தீக்குச்சியின் இறப்பாகவும் இக்கவிதை காட்சிப் படிமமாக மாறுகிறது.
வாசிக்கப்படும் கவிதைகளில் இடம்பெற்றுள்ள சொற்கள் ஒவ்வொன்றும் தமக்குரிய காட்சிகளை விரித்துக் கொண்டே செல்கின்றன.
'மலர்கள்
தாவர விளக்குகள்
விழிகள்
மாமிச விளக்குகள்'
'தீபத்தை அணைத்துவிட்டு விளக்கைத் திருடுகிறான்.... இருள்கிறது அவன் பாதை'
மேற்கண்ட கவிதைகளில் ஒளியையும், இருளையும் மிக அழகாக பதிவு செய்கிறார் கவிஞர்.
கலங்கமின்மையைக் கொண்டிருப்பது ஒளி மட்டுமல்ல, இருளும்தான் என்று எண்ணவைத்து விடுவதும், உணர்த்திவிடுவதுமே இங்கு கவிஞரின் பெருவெற்றி எனலாம்.
ஒளியைப் போற்றும் அவர், இருளைத் தூற்றுவதில்லை.
இவ்வுலகில் எந்த ஒரு கூறும் தூற்றுதலுக்கு மட்டுமேயானதல்ல என்பதைக் குறிப்பால் உணர்த்திச் செல்கின்றன இத்தொகுப்பின் கவிதைகள் அனைத்தும்.
இறுதியாக ஒரு கவிதை
'என் தனிமையின் இருளில்
உன் நினைவுகள்
நட்சத்திரங்கள்'
நன்றியும், அன்பும் பிருந்தா சாரதி!
Comments
Post a Comment