கதைகள்

 கி.ராஜநாராயணன் கதைகள்

 அன்னம் வெளியீடு

 575 பக்கங்கள்



 வானம் பார்த்த கரிசல் பூமியின் வெக்கையை, உழைக்கும் பெண்களை, சலிக்காமல் போராடும் அம்மண்ணின் சம்சாரிகளை கி.ராவின் எழுத்துக்கள் மிகையின்றி கொண்டாடி மகிழ்கின்றன.


 எளிய மனிதர்களின் நீடித்த வறுமை, வானம் பொய்த்துவிட்ட காலங்களில் வரி செலுத்த இயலாமை, இவற்றுடன் குழந்தைகள் விளையாட்டு நியதிகளையும் கதையில் நுழைத்து, ஒன்றுமில்லாத எளிய மக்களிடம் அரசின் கருணையற்ற அணுகுமுறையை 'கதவு' விரிக்கிறது.


 குடும்பத்தின் ஒரு நபராகவே பாவிக்கப்படும் மாடு இறந்து போவது பெரும் துக்க நிகழ்வாகி விடுகிறது ஒரு வீட்டில்.


 புழுக்கமான பேருந்தில் குழந்தையொன்றின் வருகை இறுக்கங்களை தளர்த்தி விடுகிறது 'மின்னல்' கதையில்.


 பள்ளியை ஜெயிலுடன் ஒப்பிடுகிறார் கி.ரா. உண்மையில் கற்பித்தலின் கட்டுப்பெட்டித்தனமான நடைமுறைகளுடன் பொருந்திப் போக முடியாத குழந்தைகளுக்கு அப்பள்ளி சிறையாகத்தான் அறியப்படுகிறது.


'சாவு' கதையில் எதிர்பாரா மரணங்கள் மிஞ்சி இருப்பவர்களின் வாழ்வைப் புரட்டி போடுவதை விவரிக்கிறார்.


 அரசுகளின் கவர்ச்சிகரமான திட்டங்கள் சாமானியர்களை படுகுழியில் தள்ளிவிடுவதை 'மாயமான்' கதையை வாசிக்கும் போது உணர முடியும்.


உல்லாசமான வாழ்வாக இல்லாவிடினும், நிறைவாகவே வாழ்ந்து வந்த சம்சாரி, உடமைகளை இழந்து பஞ்சம் பிழைக்க குடும்பத்துடன் ரயில் ஏறச் செய்து விடுகிறது அரசின் திட்டம்.


  கிடைக்காதவைகளின் மீதான ஏக்கம் பிரயத்தனப்பட்டு அவற்றை அடைந்தபின் வெறுமை சூழ்வதுடன், சலிப்பாகவே மாறி விடுவதை 'பலாப்பழம்' கதையில் அறியலாம்.


 செங்கொடி ஏந்திப் போராடிய தோழர் ரங்கசாமியின் வரலாற்றைப் பேசுகையில் கி. ராவின் முற்போக்கான இடதுசாரி சிந்தனை வெளிப்படுகிறது.


 வானில் கற்பனைக்கு அப்பாற்பட்ட கோலங்களை அமைத்துச் செல்லும் மேகக் கூட்டங்கள் பற்றிய வர்ணனை, பஞ்சம் பிழைக்க கரிசல் பூமிக்காரர்கள் தஞ்சை மாவட்டத்தை நோக்கி செல்வதை விவரிக்கும் கதைகள், நெடும் பயணங்களில் நம்பவே முடியாத ராமய்யங்கார் போன்ற ஈரம் மிகுந்த மனிதர்களின் ஆறுதல் மிகுந்த மனிதாபிமான செயல்கள், 60 வயதைக் கடந்துவிட்ட தாத்தைய நாயக்கர் அறிமுகமே இல்லாத பெண்ணின் மானத்தைக் காக்கும் பொருட்டு 'ஜடாயு' போன்று போராடி வீழ்தல் உள்ளிட்ட கதைகள் வாசகர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை.


என்பதுகளின் பிற்பகுதியில் தொலைக்காட்சியில் 'நாற்காலி' என்ற நாடகத்தை பார்த்த ஞாபகம்.


 வீட்டுக்கு வந்த மேஜிஸ்திரேட் முக்காலியில் சரியாக அமர இயலாமல் விழுந்து விடுகிறார். சங்கடப்படும் வீட்டார் நாற்காலி செய்ய முடிவெடுக்கின்றனர்.


 துவக்கத்தில் நாற்காலியில் அமர அவ்வீட்டினர் தமக்குள் போட்டி போடுகின்றனர். சில நாட்கள் கழித்து ஊரில் விழும் சாவுகளின் போதெல்லாம் பிணத்தை அமர்த்தி வைக்க அந்நாற்காலி இரவலாக பெற்றுச் செல்லப்படுகிறது.


 இப்போதெல்லாம் அவ்வீட்டில் நாற்காலியை யாரும் பொருட்படுத்துவதில்லை. கி. ராவின் அங்கத எழுத்து இக்கதையில் வெளிப்படுகிறது.


 திருமணம் மறுக்கப்பட்ட பேச இயலாதவன் கோரமான ஒரு முடிவெடுக்கிறான் 'ஜீவன்' கதையில்.


 பள்ளிக்கூடத்தின் கசப்பு அனுபவம் வெளிப்படுகிறது 'ஒரு சிறிய தவறு' கதையில்.


 உழைக்கும் வர்க்கத்தை சமூகம் நடத்தும் விதம் 'கறிவேப்பிலைகள்' கதையில்.


 தன்னிரக்கத்தில் துவங்கி சுயமதிப்பு குறித்த பிரக்ஞையுடன் முடிவடையும் 'வேட்டி' கதை மிகவும் சிறப்பு.


பெரும்பாலான கதைகளில் நாயக்கமார்கள் இடம்பெறுகிறார்கள். கரிசல் மண்ணில் தான் கண்ட மனிதர்களை, அனுபவப்பட்ட சம்பவங்களை, நேர்மறையான அணுகுமுறையுடன், சுயபச்சாதாபமற்ற சொற்களின் துணைக் கொண்டு எழுதி செல்கிறார் கி.ரா.


 நூலில் இடம்பெறும் வட்டாரச் சொற்களின் எளிய பொருளை அறிய  'க்ரியா' தமிழ் அகராதியை 10 முறைக்கு மேல் பயன்படுத்த நேரிட்டது.


 கிடைக்கு தலைமையேற்கும் கீதாரி பற்றிய குறிப்புகள், பாங்கு அமைப்பு, கிடையை மறித்தல், துப்பு துலக்குதல் என்றவாறு நகரும் கதை, சிறு பெண்களைக் கொண்டு இருதார மணம் செய்விக்கும் சாதிய அணுகுமுறையுடன் நிறைவடைகிறது. தொகுப்பின் மிக நீண்ட கதை இது.


 முதல் இரவு என்ற பெயரில் பரிச்சயமற்ற ஒரு ஜோடியை ஒரே அறையில் அடைத்தலை அநாகரிகமான நிகழ்வு என கண்டிக்கிறார் ஒரு கதையில்.


 நாட்டார் தெய்வ வழிபாடு, பகுத்தறிவு சிந்தனை, பெரும்பகை கொண்டபோதும் ஆபத்தில் உதவும் மனிதநேயம், சிறுதானிய வகைகள் குறித்த குறிப்புகள், மழையைக் கொண்டாடி மகிழும் கரிசல் பூமிக்காரர்கள் போன்ற தகவல்கள் கதைகளில் இடம்பெறுகின்றன.


காமம் வடிகையில் எழும் ஏக்கம், உழைப்பை வடிகாலாகக் கொள்கிறது 'காலம் கடந்து' கதையில்.


 புத்தகப் பிரியர் வேங்கடத்தின் முடிவு நமக்குப் பிறகான நமது சேகரிப்பில் உள்ள நூல்களின் கதியைக் குறித்து சிந்திக்க வைக்கிறது. மற்றொரு கதையில் வரும் நபர் பணத்தைப் பார்த்தபோதுதான் பலம் வந்ததாக உணர்கிறார்.


 ஐந்து பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அப்பாவுக்கு பிடித்ததாக ஒரு பெண், அம்மாவுக்கு பிடித்ததாக ஒரு பெண், மற்ற மூவரும் புறக்கணிக்கப்படுகிறார்கள். தற்செயலாக நிகழும் சம்பவத்தில் தவறு செய்யாத குழந்தை தண்டிக்கப்படுகிறது.


 மூதாட்டியை வழியில் நிறுத்தி இறக்குவதைத் தவிர்க்க பேருந்தில் ஏற்ற மறுக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், அரைஊமைச் சிறுவனை யார் அடித்தது என்றே அறிய விடாமல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்குவதும், அவனது அழுகையும், நம்மையும் கவலையுறச் செய்து விடுகிறது.


 ஜில்லா கலெக்டருக்கே பெண் தர மறுத்தவரின் பேரன், சம்சாரியானதால் பெண் கிடைக்காமல் தவிக்கிறான் 'கொத்தை பருத்தி' கதையில்.


தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கரிசல் மண்ணின் சிறுவர் சிறுமியர் கொத்தடிமைகளாக நடத்தப்படுதல், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை, கிராம மக்களிடம் சுகாதார அதிகாரி படும்பாடு போன்றவை கி.ராவின் உணர்வுபூர்வமான மற்றும் அங்கதமான எளிய சொற்களில் விவரிக்கப்படுகின்றன.


 குடிநீர்ப் பஞ்சம், கடலைப் பார்த்து வியத்தல், பேய் பயம், எதையும் வீண் செய்து விடாத மனநிலை, பருத்திக்காடு, சுட்ட கறி, சுரண்டல், பண வேட்டை, அதிகாரத்தின் தயவு தாட்சண்யமற்ற நிலை கரிசல் மண்ணின் வாசத்துடன் கதைகளாகி விடுகின்றன.


 81 கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கதைகள் வாழ்வு குறித்த நேர்மறையான சிந்தனைகளுக்கு இட்டுச் செல்பவை.


 சிறுவயதில் மிகக் குறுகிய காலம் பழகிய காலவோட்டத்தில் மறந்தே போன நட்பைக்கூட நினைவு படுத்திவிட்டது கி.ராவின் 'ஊர்க்காலி' கதை.


 கரிசல்காட்டின் சம்சாரி, கீதாரி, கி.ரா, தனது மண்ணை, ரத்தமும் சதையுமான மனிதர்களை, தனது படைப்புக்களில் கலை நேர்த்தியுடன் சிருஷ்டிக்கிறார்.


 பெரும் கலைஞனாக கி.ராவும், காலத்தால் அழியாத படைப்புகளாக அவரது கதைகளும் உருக்கொண்டு விடுகின்றன.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்