நாவல்
மிதவை
நாஞ்சில்நாடன்
நற்றிணை பதிப்பகம்
144 பக்கங்கள்
புத்தக வாசிப்பு என்பது ஒரு பிறவிக்குள் பல பிறவிகளுக்கான அனுபவங்களை அளிக்க வல்லது என்று முன்பொரு முறை இலக்கிய நண்பர் ஒருவர் கூறினார். அதே கூற்றை இன்னும் சில தருணங்களில் வாசித்திருக்கிறேன்.
இந்நாவலை வாசித்த நாட்களில் 27 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்ட உணர்வு ஏற்பட்டது.
எந்த நூலினை வாசிக்கும்போதும் கதையின் நாயகனுடன் தன்னைப் பொருத்திக் கொள்வது வாசகனின் இயல்புதான். அதிலும் அவன் விழுமியங்கள் நிறைந்தவனாக, அப்பாவியாக இருக்கையில் அவ்வுணர்வு சற்று கூடுதலாகவே அமைந்துவிடுகிறது.
நாஞ்சில் நாடன் சண்முகத்தை அப்படியொன்றும் ஒழுக்கசீலனாக செயற்கைத்தனத்துடன் படைத்துவிடவில்லை.
எளிய மனிதனாக, கேட்க நினைப்பவற்றையும் தயக்கத்துடன் விலக்கிச் செல்பவனாக, இயல்பான உணர்வெழுச்சிகளுக்கு உட்பட்டவனாக,நண்பர்களுக்கு சிறிதளவு உதவுபவனாக, அவசியம் நேர்கையில் உதவிகளைக் கேட்டுப் பெறுபவனாக அறம் மிகுந்தவனாக, பணியாற்றும் இடத்திற்கு விசுவாசம் நிறைந்தவனாக இவ்வாறெல்லாம் தான் சண்முகம் வாழ்கிறான்.
60களின் போதும், பட்டதாரி ஒருவன் வேலையின்றி அலைந்திருப்பதை வாசிக்கையில் வியப்புதான் ஏற்படுகிறது.
90களின் மத்தியில் நான் முதன்முதலாக பணியாற்றிய தனியார் நிறுவனம் ஒன்றில் அறிமுகமான நபரை ஆச்சார்யா நினைவுபடுத்தி விட்டார்.
தனியார் துறைகளில் இதுபோன்ற நபர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கவே செய்வார்கள் எனினும், அச்சு அசலாக அந்த நபர் ஆச்சார்யாவுடன் ஒத்துப்போனது நம்ப முடியாததாக இருந்தது.
நாவலில் ஆச்சார்யா சண்முகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணி நிரந்தரத்தை தடுக்கிறான் என்றால், எனக்கு அறிமுகமான அந்த நபர் வேலையை விட்டே என்னைத் துரத்தி விட்டார்.
பணியில் உண்மையாக இருப்பதெல்லாம் இங்கு ஒரு பொருட்டே இல்லை. தி.ஜாவின் 'கொட்டுமேளம்' போன்று நம்மை உரிய தருணங்களில் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் திறன்கள் அவசியமாகிறது.
பம்பாயின் நெருக்கடி நிறைந்த, சலிப்பான, வாதைமிகுந்த, சராசரி எளிய மனிதனின் வாழ்வை விவரிக்கும் இச்சிறு நாவல், நிறைவான வாசிப்பு அனுபவம் அளித்தது.
Comments
Post a Comment