கட்டுரைகள்

கலை இலக்கிய சங்கதிகள் விட்டல் ராவ் 
ஜெய்ரிகி பதிப்பகம்
204 பக்கங்கள்


 வாசிப்பு, ஆளுமைகள், நூல் விமர்சனங்கள், ஓவியம் குறித்த 39 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

விட்டல் ராவின் தீர்க்கமான, சமரசமற்ற கருத்துக்கள் வாசிப்பில் புதிய திறப்புகளை சாத்தியப்படுத்த வல்லவை.

எண்பதுகளில் தொடங்கி தினமணி நாளிதழ்களையும், 90களில் இந்தியா டுடே இதழ்களையும் தொடர்ச்சியாக வீட்டில் வாசித்திருக்கிறோம். சகோதர சண்டைகள்கூட நடந்திருக்கின்றன. 

ஒருவர் வாசித்து முடிக்கும்வரை மற்றவர் கண்களில் அகப்படாமல் இருக்க இதழ்களை ஒளித்து வைத்த நிகழ்வுகளும் உண்டு.

காலவோட்டத்தில் தீவிரமாக வாசித்தவர் லௌகீகங்களில் உந்தப்பட்டு அந்நியப்படுதலும், மிதமான வாசிப்பு ஆர்வம் கொண்டவர் வாசிப்பின் மாயச் சுழலில் சிக்கிக் கொள்வதும் நடந்து விடுகிறது.

உண்மையில் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்டுவிடும் வாசிப்பழக்கமே நாளடைவில் வளர்ந்த மனிதனை ஆற்றுப்படுத்தி வாழ்வின் எதிர்பாராமைகளையும், வலி தரும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அளிக்கிறது.

க.நா.சு,  ந.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன் போன்ற தமிழ் இலக்கிய பேராளுமைகளை மிக அழகாக நினைவுகூரும் வகையிலான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

'நடைபாதை' என்ற அற்புதமான நாவலை படைத்த இதயனை நினைக்கையில் யாரை நொந்து கொள்வது என்று விளங்கவில்லை. 

உண்மையில் விட்டல் ராவ்கூட தனது மேதமைக்கு தகுதியான இலக்கிய அந்தஸ்தை தமிழில் பெற்றுள்ளாரா என்பதே ஐயத்திற்குரியது.

தினமணி கதிரிலும், சுடரிலும் அவரது கட்டுரைகளை சிறுவயதிலேயே புரிந்தும், புரியாததுமாக வாசித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது.

 மா.அரங்கநாதனின் 'முத்துக்கறுப்பன்' கதைகளுக்கு நானும் ரசிகன் தான். நற்றிணையில் அவரது படைப்புகள் முழுத் தொகுப்பாக வெளியானபோது உடனடியாக வாங்கி வாசித்து மகிழ்ந்தேன்.

 வெறும் வாசகனாக மாபெரும் படைப்பாளிகளை அணுகும்போது ஏற்படும் புரிதல்களை, இயல்பிலேயே கலை மேதமை கொண்ட விட்டல் ராவ் போன்ற ஆளுமைகள் தமது எழுத்துக்களின் மூலம் ஏற்படுத்திவிடும் வெளிச்சங்கள், உறுதிப்படுத்தி நமது ரசனை குறித்த நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தித் தருகின்றன.

 மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி அவர்களின் முன்னுரை இந்நூலின் சிறப்புகளில் ஒன்று.

 பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூலை மிக அழகான முறையில் பதிப்பித்திருக்கும் ஜெய்ரிகி பதிப்பகத்திற்கு மனமார்ந்த பாராட்டுகளும், நல்வாழ்த்துக்களும்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

நாவல்