கதைகள்
வங்கச் சிறுகதைகள் மின்னூல்
தொகுப்பு அருண்குமார் மகோபாத்தியாய்
தமிழில் சு கிருஷ்ணமூர்த்தி
வங்க எழுத்தாளர்களின் 21 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். மலையாள, கன்னட இலக்கிய உலகங்களைப் போன்று வங்க இலக்கியமும் செழுமைமிக்கதுதான் என்பதை உணர்த்தும் நூலாகவும் இது அமைந்துவிட்டது.
சில வருடங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் காட்சியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஸ்டாலில் மிகமிக குறைவான விலையில் இந்நூல் கிடைத்தது. பிறகு வேறொரு தருணத்தில் கிண்டிலில் இந்நூலை விலையின்றி தரவிறக்கம் செய்தேன்.
கிண்டிலில் வாசித்துக் கொண்டிருக்கையில் அச்சு நூலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கதைகளின் வரிசை மட்டுமே மாறி இருந்ததை கவனித்தேன்.
21 கதைகளும் மிகமிக சிறப்பான வாசிப்பு அனுபவம் அளித்தவை. மனிதநேயம், பகடி, வாதை போன்ற இலக்கியத்தின் மையச் சரடுகளுக்கு பொருந்திவிட்ட அதீதமான கதைகள் இவை.
மனநலம் குன்றியவனை குறிப்பிட்டதொரு தருணத்தில் குடும்பத்தினர் இழிவாகக் குறிப்பிட, விளைவு நம்ப முடியாததாய் அமைந்து மனதை வாட்டுகிறது.
விடைத்தாள் திருத்துபவருக்கு உயர்கல்வி பயிலும் மாணவன் ஒருவன் தேர்வு விடைத்தாளில் எழுதிடும் நீண்ட கடிதம் அவனது வாதைகளை மிகையின்றி பேசுகிறது.
தனது கனவு நூலினை பதிப்பிக்கும் நண்பனுக்காக முன்னுரை எழுதுகிறான் ஒருவன். இக்கதை நூலின் மற்றுமொரு சிறப்பான கதை.
குழந்தை வேண்டி பிரார்த்திக்கும் தம்பதிக்கு அவர்தம் வேண்டுதல் பலிக்கிறது. பிறந்த குழந்தை 18 நாட்களிலேயே இறந்துவிட, அவர்களை சூழ்ந்துவிடும் பெரும் சோகம் 'சரிவு' கதையில் இடம்பெறுகிறது.
'தன் உடம்பின் அழகின்மையிலேயே ஒரு அர்த்தத்தை கண்டாள் அவள்' 'சரிவு' கதையில் இடம்பெறும் வரி மேற்கண்டது.
வெவ்வேறு கதைக் களன்கள் என்றபோதும் எல்லா கதைகளையும் பொதுமைப்படுத்தும் ஏதோவொரு அம்சம் இழையோடுவதை இந்நூலினை வாசிக்கையில் உணர முடிகிறது.
Comments
Post a Comment