கதைகள்

சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

அம்பை

காலச்சுவடு பதிப்பகம்

167 பக்கங்கள் 




அம்பையின் 13 கதைகளின் தொகுப்பு நூல் இது. மகள் மீதான தந்தையின் வாஞ்சையும், தந்தை மீதான மகளின் தீராத ஈர்ப்பும் குறித்த கதையுடன் துவங்குகிறது நூல்.


 உயிர்ப்பின் தருணங்களில் நிகழ்ந்துவிடும் புறக்கணிப்புகளும், சலிப்புகளும் திரும்பிவர சாத்தியமற்ற நிலைக்கு சென்றுவிட்டதும், வலியாக, ஏக்கமாக, நினைவுகளாக, தொடரும் வாழ்வில் நிலைத்து விடுகின்றன.


 நகரங்கள் குறித்து எத்தனை கோணங்களில் குறைகளை அடுக்கினாலும் சாதி பேதம் வெளிப்படையாகத் தெரியாத, வாழ்வாதாரத்தை உறுதி செய்யக்கூடிய தளங்களாக பெருநகரங்கள்தான் விளங்குகின்றன.


'சாம்பல் மேல் எழும் நகரம்' மும்பையின் நம்ப முடியாத மீட்சியைப் பேசுகிறது.


 வெறுமை சூழும் வாழ்வில், பற்றிக்கொள்ள ஏதும் இல்லாத நிலையில் வீழ்தல் தேர்வாக அமைந்து விடுதல் துயர் நிறைந்தது.


 அம்பையின் எழுத்துகளில் பெண்மையின் தீராத துயர்கள்,சலிப்பு மேலிடும் வாழ்வு இவை மட்டும் பதிவு செய்யப்படுவதில்லை.


 பெண்மைக்கேயுரிய வற்றாத ஈரமும், உன்னதத் தருணங்களும், அன்பினை செலுத்தி அடக்குமுறைகளுக்குள் திணித்துவிடும் போலிகளை எளிதாக அடையாளம் கண்டு ஒதுங்கிச் செல்லும் சாதுரியமும் நிறைந்தவை அவரது எழுத்துக்கள்.


 ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் தாயாரின் உடன் இருந்து வாழ்வை பகிர்ந்து கொள்ளும் விருப்பமற்ற பிள்ளைகள் அவரது மறுமணம் குறித்துப் பேசுகின்றனர்.


 60 வயதை நெருங்கும் அப்பெண் முதல் காதலை மறக்க இயலாமல் தீர்க்கமான முடிவெடுக்கிறாள்.


 சீக்கியர்கள் மீதான 1984 கலவரங்கள் பின்னணியில் எழுதப்பட்ட கதை, இரு பெண்களின் அழகியல் மிகுந்த நட்பைப் பேசுகிறது.


 விளக்கவியலா பிரபஞ்சத்தின் புதிர்களை அணுகிச் செல்லும் சிங்கத்தின் வால், படைப்பாளிகள் அறிவியல் கண்ணோட்டத்துடன், பெரும்பாலும் எவற்றைப் பற்றியும் குறைந்தபட்ச புரிதல்களுடனும், தமது அறிவுசார் எல்லைகளை கட்டமைப்பதன் மூலம் வாசகனுக்கு பொதுவெளியில் கடத்திவிடும் வல்லமை கொண்டு விடுபவையாக அவர்களது படைப்புகள் விளங்கி விடுவதை எடுத்துக்காட்டுகிறது.


 இரு பரிமாண, முப்பரிமாண வாழ்வு மற்றும் உயிரினங்கள் குறித்து மட்டுமே ஓரளவுக்கு அறிந்துள்ள மனித இனம், பதினோறாம் பரிமாண உயிர்கள் குறித்து அறிகையில் பெரும் வியப்பும், உழன்று கொண்டிருக்கும் வாழ்வு குறித்த ஏமாற்றமும் அடைவது உறுதி.


'அவன் அசலான எங்கும் செல்லாத மனிதன் 

எங்கும் இல்லாத உலகில் அமர்ந்து கொண்டு 

எங்கும் இல்லாத யாருக்காகவும் இல்லாத திட்டங்கள் போடுபவன்'

அகமுகர்களின் உள்ளொடுங்கிய இருப்பை பதிவு செய்யும் ஜான் லெனனின் வரிகள் சிறப்பானவை.


'இரண்டு வெற்று நாற்காலிகள்' கதையில் மேற்கண்ட வரிகள் இடம்பெறுகின்றன.


உணர்வுப்பூர்வமாக நம்முடன் ஒண்றிவிட்டவர்களின் பிரிவை மனம் எப்போதும் ஏற்பதில்லை. வெடித்துக் கிளம்பும் ஏமாற்றமும், அழுகையும், மனச்சோர்வை அளித்தாலும், வண்ணமயமான நினைவுகள் இருப்பை நியாயம் செய்வதாக அமைகின்றன.


 தனிமை, காதல், சோகம், பகடி,அறிவியல்,பெண்ணியம், விழுமியங்கள் உள்ளிட்ட கூறுகளை மையச் சரடுகளாக்கி அம்பை எழுதிச் செல்லும் கதைகள் வாசகனுக்கு புதிய வெளிச்சங்களை சாத்தியப்படுத்துபவை.


 இலக்கிய வாசிப்பு மனதிற்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் அளிப்பதாக இருத்தல் வேண்டும் என்று சமீபத்தில் எங்கோ வாசித்ததாக நினைவு.


 அம்பையின் எழுத்துகள் வாசகனுக்கு அளித்திடும் தரிசனங்களும் அது போன்றவைதான். 


சில கதைகளை இருமுறைக்கு மேல் வாசித்தபோதே அறிந்து கொள்ள முடிகிறது.


 இன்னும் சற்று காலத்திற்கு அம்பையின் கதைகளுடன் பயணிக்க முடிவெடுத்துள்ளேன்.


மித வேகத்தில், எளிய நடையுடன் செல்லும் அவரது புனைவுகள் அளித்துவிடும் ஆசுவாசங்கள் தற்போது மிகவும் எனக்குத் தேவையாய் உள்ளன.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

நடைவழி நினைவுகள் II

கதைகள்