நாவல்
சர்மாவின் உயில்
க நா சு
மின்னூல்
268 பக்கங்கள்
புனைவு முற்றிலும் கற்பனையில் முகிழ்ந்த வையாகவோ அல்லது முழுவதும் சுய அனுபவமாகவோ இருப்பதில்லை.
க.நா.சு தனது வாழ்வனுபவங்களில் எழுத்து வலிமையைச் சேர்த்து சர்மாவின் உயிலை எழுதி இருக்கிறார்.
எழுத்தை வாழ்வாக கொள்ள விழையும் சிவராமன் வெற்றி அடைவதாகவும் கதையை நகர்த்தியமை வாசகனுக்கு பெரும் ஆறுதல் அளிக்கிறது.
இளவயது, சிறுவயதுகளில் இணையரை இழந்துவிடும் பெண்கள் தம் குலத்திற்கு வழிகாட்டும் விளக்காக மாறிவிடுகின்றனர்.
பவானி மற்றொரு சானுப்பாட்டியாக ஆகாமல் நேர்ந்தது நிம்மதி அளிக்கிறது.
பொருளீட்டலின் வேகத்தால் செலுத்தப்பட்டு, வாழ்வின் மென்சுவைகளை தொலைத்தவர்கள், குறிப்பிட்டதொரு காலகட்டத்தில் வெற்றி அளிக்கும் ஆசுவாசத்தால் பணத்தின் மீதான அலட்சியத்தை கைக்கொண்டு அதன் பலனாக சறுக்கலையும் சந்திக்கின்றனர்.
கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் வாழ்வு உணர்த்துவது மேற்கண்ட வரிகளைத்தான்.
தட்டையான, மேலோட்டமான சிந்தனை கொண்ட நாராயணசாமி ஐயரும், ராஜமும் சிவராமனின் சவால் தரும் இலட்சிய வாழ்வினை ஏற்றுக்கொள்ளாதவர்களாகிவிடுகின்றனர்.
அவ்வகையில் உயிலின் மையத் தகவலை அறிந்து கொள்ள அவர்கள் உணர்வுபூர்வமாக விரும்புகின்றனர்.
வாழ்வை இழந்தவர்களின் மடைமாற்றாகவே பெண்கல்வி புனைவுகளில் இடம்பெற்றிருப்பதாக தோன்றுகிறது.
'ஒரு கலைஞனுக்கு ஏற்ற ரசிகர்கள் அகப்பட்டுவிட்டால் அவன் தன் கலையின் கோடிகளை எட்டிப்பிடித்து காட்டாமல் விட்டு விடுவானா?'
கருத்துக்களின், பின்னூட்டங்களின் தவிர்க்க முடியாத தேவைகளை வலியுறுத்தும் வரிகள் மேற்கண்டவை.
வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் உடன் இருப்பவர்களின் அவமரணங்களைக் காண நேரிடுபவர்களின் மனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு விடுகிறது.
சவால் விடும் தருணங்கள் அவை.
மனித வாழ்வில் அறியாமையும் கவசமாக ஆகிவிடும் சாத்தியங்களை கநாசுவின் எழுத்துக்களை வாசித்து உணர முடிகிறது.
இயற்கையில் யாருடைய விடைபெறல்களும் ஏற்படுத்திவிடும் தாக்கங்கள், ஆரம்பத்தில் மிக அதிகமாகவும், பின்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் மாறிவிடுகிறது.
'இலக்கிய ஆசிரியர்களின் கனவுகளுக்கும், மற்றவர்களுடைய கனவுகளுக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் உண்டு. இலக்கியாசிரியர்களுடைய கனவுகளில் ஒரு சில என்றாவது ஒரு நாள் பலித்தேவிடும். பலிக்கா விட்டாலும் கூட இலக்கிய ஆசிரியனுடைய கனவுகளில் ஓரளவு உண்மை இருந்தே தீரும். இந்த ஓரளவு உண்மையே போதுமானது, இலக்கியாசிரியனுக்கு பரவசம் ஊட்ட.
எழுத்துக் கலைஞன் சிவராமனை வெற்றியாளனாக காட்டிவிடும் கநாசுவின் உள்ளக் கிடக்கையை அறியச் செய்யும் வரிகள் மேற்கண்டவை.
ஒரே காலகட்டத்தில் ஒரு ஆணுக்கு இரு இணையர் போன்ற பழமைவாதம் இருப்பினும், 'சர்மாவின் உயில்' செவ்வியல் தன்மை கொண்ட புதினம் என்ற தகுதியை அடைய அது ஒரு தடையாக அமைந்து விடவில்லை.
Comments
Post a Comment