கதைகள்



அந்திராகம்

இஷிகுரோ-குந்தர் கிராஸ்-மார்க்கேஸ்

தமிழில் ஜி.குப்புசாமி

வம்சி பதிப்பகம்

152 பக்கங்கள்



 ஒரு படைப்பாளியின் இரு நூல்களை அடுத்தடுத்து தொடர்ச்சியாக வாசிப்பது இல்லை என்ற முடிவினை மாற்றி அமைத்துவிட்ட நூல் இது.


 அட்டைப்படத்தின் அழகிய வடிவமைப்பும், மொழிபெயர்ப்பாளரின் பெயருமே விதிவிலக்கிற்கு போதுமானதாக அமைந்துவிட்டன.


ருசிகர்-திரைச்சித்திரம்


 இஷிகுரோவின் எழுத்துகள் வாசிக்கையில் காட்சிகளாக விரிந்து கொண்டிருந்தன.


 'சாதாரணமாக கிடைப்பது அனைத்தையும் சுவைத்து விட்டால் வாழ்க்கை வெறுத்து விடுகிறது' செவ்வியல் தன்மை கொண்ட இவ்வரியை வாசித்துவிட்டு மனம் சமநிலை இழப்பதை மறுக்க இயலவில்லை.


 மான்லியின் மேட்டிமைத்தனத்தை, டேவிட்டின் எளிமை பரிகாசத்திற்கு உள்ளாக்குகிறது.


 கிடைக்கப் பெறாதவைகளின் பரிச்சயமற்ற புதிர்த்தன்மைகள், உணர்ந்திராத சுவாரசியங்களுக்கு இட்டுச்சென்று மனித மனங்களை அலைக்கழிப்பதை எடுத்துக்காட்டும் நேர்த்தியான திரைச்சித்திரத்தின் எழுத்துவடிவம் 'ருசிகர்'.


 'போரில் என் பங்கு'-ஓர் ஒப்புதல் வாக்குமூலம்


 நாஜி இராணுவத்துடனான தனது பால்ய கால அனுபவங்களை நேர்மையுடன் குந்தர் கிராஸ் விவரித்துள்ளார்.


 வெளிப்படையான வாக்குமூலங்களுக்காகவே விமர்சிக்கப்படும் மரபு நீடித்து இருப்பதும் இதற்கு தடையாக அமையவில்லை.


 'பிழையாத்தன்மை' இவ்வார்த்தைக்காகவே மொழிபெயர்ப்பாளருக்கு அன்பான வணக்கங்கள்.


 'முடிவை நெருங்கும் போது விதி அதிகாரத்தின் படிவரிசைகளை கலைத்து விடுகிறது' மற்றுமொரு செவ்வியல் தன்மை பெற்ற வரி.


 மரணத்திற்கான சாத்தியக் கூறுகளை அதிர்ஷ்டவசமாக தாண்டிச் சென்றிருக்கிறார் குந்தர் கிராஸ்.


 நடந்துவிட்ட கொடும் நிகழ்வுகளுக்கு அவர் வருந்துவதை தெளிவாக வாசகனுக்கு உணர்த்திவிடும் வாக்குமூலம் இது.


 'அந்திராகம்'-மார்க்கேஸ்


 பரஸ்பர ஈர்ப்பில் துவங்கினாலும் அடுத்தடுத்த நகர்வுகள்,மன உறுதி, சூழ்நிலை போன்ற பல கூறுகளைக் கொண்டே காதலின் வெற்றி அமைகிறது.


 மார்க்கேஸின் பெற்றோருக்கு அழகியல் தன்மை கொண்ட துள்ளலான காதல் வாய்க்கப் பெற்றிருக்கிறது.


 ஆங்காங்கே மறைந்திருக்கும் எழுத்துப்பிழைகளில் பதிப்பகத்தினர் கவனம் செலுத்தியிருக்கலாம்.


 மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!


 தங்களது அசாத்தியமான உழைப்பில் விளைந்த உலக இலக்கிய மொழிபெயர்ப்புகளை தங்களது கணினியின் வன்தகடு மட்டுமே ஏகபோகமாக வாசித்து மகிழ்ந்து கொண்டு இருப்பதை எங்களால் இனிமேலும் அனுமதிக்க இயலாது.


 தங்களது தாய்வீட்டின் மூலமாக ஆண்டுக்கு ஒன்றிரண்டு நூல்களாவது இதுபோன்று வெளியிடுங்கள். நன்றி!

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்