நாவல்
1984
ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில் க.நா.சு
மின்நூல்
288 பக்கங்கள்
அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிகையில் அல்லது ஒற்றை சித்தாந்தம் பரவலாக வலியுறுத்தப்படுகையில் விளைவுகள் எவ்வாறெல்லாம் அமையும்? பொய்கள் அனைத்தும் மெய்யென வலியுறுத்தப்படுவதுடன் நிற்பதில்லை.
நடமாடிக் கொண்டிருப்பவர்கள் காணாமல் போகிறார்கள். வெகு சுலபமாக மறைக்கப்பட்டும் விடுகிறார்கள். 'டெலி ஸ்கிரீன்' அச்சுறுத்தும் வகையில் மக்களைத் தொடர்ச்சியாக கண்காணிக்கிறது.
ரஷ்யாவில் ஆயிரக்கணக்கானோர் கூடிய நிகழ்வு ஒன்றில் அப்போதைய ஆட்சித் தலைவரின் உரையை தொடர்ந்து, பெரும் கரவொலி எழும்பியது. 10 விநாடிகள், 20 விநாடிகள், ஒரு நிமிடம் என்று கரவொலி தொடர்ந்து நீண்டுகொண்டே இருந்ததாம்.
யார் முதலில் கரவொலியை நிறுத்துகிறார் என்பதை கண்காணிப்பதாக அங்கு இருப்பவர்கள் அனைவரும் சந்தேகித்ததால் ஒருவரும் கரவொலியை குறைத்துக் கொள்ளவும், நிறுத்திவிடவும் தயாராக இல்லாத நிலை அது.
அதே ஆட்சியாளரின் மரணத்தருவாயில் அவரது உதவியாளர் முழு வெறுப்புடன் அவரது முகத்தில் காறி உமிழ்ந்ததாகவும், எதேச்சையாக விழித்துக்கொண்ட தலைவரின் கோபத்திற்கு அஞ்சி அவரது கரங்களை முத்தமிட்டு, பயத்தில் நடுங்கியதாகவும் எங்கோ வாசித்த நினைவு.
ஓசியேனியாவில் 'சிந்தனை போலீஸ்' தீவிரமாக மக்களை கண்காணிக்கிறது. 'முத்தண்ணா உங்களை கண்காணிக்கிறார்' என்ற வாசகம் மக்களை அச்சுறுத்துகிறது.
ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை கொண்டிருப்பதுகூட 'சிந்தனைக் குற்றம்' என்று கருதப்படுகிறது.
நாட்குறிப்பு எழுதுவது கூட தவறு என கருதப்படுகையில் வின்ஸ்டன் என்ற நபர் அங்காடி ஒன்றில் நாட்குறிப்பேடு ஒன்றை வாங்கி, 'முத்தண்ணா ஒழிக' என்று எழுதுகிறான்.
வெகு இயல்பாக புனைவில் வர்ணிக்கப்படும் அவனது தோற்றப்பொலிவு, விசாரணையின்போது சிதைக்கப்படுகிறது. 'வெறுப்பு வாரம்' நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.
ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு தனிநபர் மற்றும் சகோதரப்படை என்ற ஒரு அமைப்பு முன்னிறுத்தப்படுகிறது.
இரண்டும் இரண்டும் சேர்ந்து ஐந்து என்று கூறுவதுகூட விசுவாசத்தின் அறிகுறியாக கட்டமைக்கப்படுகிறது.
எந்த ஒரு தண்டனையையும் ஏற்று கொள்கிறோம், எல்லாவற்றிற்கும் சம்மதம் கூறுகிறோம், 101ஆம் அறையில் மட்டும் அடைந்து விடாதீர்கள்! என்று விசாரணைக் கைதிகள் கதறுகிறார்கள்.
101ம் அறையில் எலிகள் இரண்டு, வலையில் அகப்பட்ட மனித முகங்களை வேட்டையாடுகின்றன. சகிக்க முடியாத கொடூரம் கட்டவிழ்க்கப்படுகிறது.
//போர்க்களத்திலும் சரி, சித்திரவதைக் கூடத்திலும் சரி, சரீரம்தான் முதன்மை பெறுகிறது. கொள்கைகளோ, இலட்சியங்களோ முக்கியத்துவம் பெறுவதில்லை. உலகம் முழுவதுமே உடல்தான் வியாபித்து இருப்பதுபோல் ஆகிவிடுகிறது//.
ஆம்! உடல்தான் மனிதனின் பெரும் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. வெகுமதி மற்றும் தண்டனைகளை பெறும் வகையிலும் அவ்வுடலே நீள்கிறது.
விசாரணையின் பல கட்டங்களில் உறுதியாக பதிலளிக்கும் வின்ஸ்டன் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்குப் பிறகு வலியுறுத்தப்படும் சித்தாந்தத்திற்கு ஒத்துப்போகிறதுடன், அவரது சகாவான ஜூலியாவையும் காட்டிக் கொடுக்கிறான்.
விடுதலைக்குப் பிறகு இருவரும் சந்திக்கையில் பரஸ்பர துரோகங்களின் வீச்சை அவர்களால் தாங்க இயலாமல் போய்விடுகிறது.
சுதந்திரம், ஜனநாயகம் போன்ற கருத்துக்களை வலியுறுத்துவது மட்டுமின்றி, நாவலை வாசித்து முடிக்கையில் சொல்ல முடியாத ஆசுவாசமொன்று ஏற்பட்டு விடுகிறது.
அன்பும், விசுவாசமும் இயல்பாக அமையப் பெற்றால் அல்லவா அதற்கு பெருமை? போலியான அன்பினாலும், பொய்களாலும் என்ன பெருமை கிட்டி விடப்போகிறது?
Comments
Post a Comment