நாவல்
பெருமகிழ்வின் பேரவை அருந்ததி ராய்
தமிழில் ஜி குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம்
447 பக்கங்கள்
ராஹேலின் எழுத்துக்களை, எஸ்த்தாவின் மொழியில் வாசித்து மகிழ மாதக்கணக்கில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
மேற்கண்ட வரிகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் 'சின்ன விஷயங்களின் கடவுள்' நாவலை வாசித்திருக்கவேண்டும்.
வியத்தகு நடுநிலையும், அறச்சீற்றமும் மிகுந்த அருந்ததிராயின் எழுத்துக்கள் வருங்காலங்களின் நம்பத்தகுந்த பெரும் ஆவணமாக நீடிக்கப் போவது உறுதி.
'நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதற்காகவே நீங்கள் கொல்லப்படலாம்' காஷ்மீர் மக்களின் துயரை, சவால்களை இந்த ஒரு வரியே எடுத்துக்காட்டுகிறது.
'ஆறுதலற்றவர்களுக்கு' என்ற சமர்ப்பணத்துடன் துவங்கும் நாவல், ஏற்படுத்தும் அதிர்வுகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது.
நாவலில் இடம்பெறும் வசைச் சொற்கள் வியப்பளிப்பினும், திருநங்கையரின் ஆற்றாமையை, மரத்துப் போய்விட்ட அவர்களின் உணர்வுகளை சற்று அவதானிக்க முடிகிறது.
கைவிடப்பட்ட கல்லறைப் பகுதியில் குடியேறும் 'அஞ்சும்', திருநங்கையரின் உலகை மகிழ்வுடன் வாழும் சாத்தியக்கூறுகளை நம்பிக்கையுடன் முன்வைக்கிறாள்.
இறுக்கமான சமூகக் கட்டமைப்பின் கருணையற்ற அவலங்கள் புறக்கணிப்பின் துயர்கள் அருந்ததி ராயின் புனைவில் அழகியலுடன் மிளிர்கிறது.
பழைய டெல்லியில் அஞ்சுமுடன் பயணிக்கும் நாவல், காஷ்மீருக்குச் செல்கிறது. உடனடியாக வேகமெடுக்கும் வாசிப்பு அதிர்வுகளை வாசகனுக்கு ஏற்படுத்திச் செல்கிறது.
சவ ஊர்வலத்தில் ஏற்படும் பெரும் சத்தம் ஒன்று பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கையை உண்டாக்கி, துப்பாக்கிச்சூடு நடைபெற்று 17 உயிர்கள் பலியாகின்றன.
17+1 என்று குறிப்பிடப்படும் புனைவு, நுட்பமான உணர்த்தலாகவே அறியப்படும்.
இறந்துவிட்ட மனிதனின் மீது (சவத்தின் மீது) பாய்ந்த குண்டுகள் அவனை மீண்டும் கொல்வதாக எழுதிச் செல்கிறார் ராய்.
கூண்டில் அடைக்கப்பட்ட முயல், லல்லா, உண்ணாவிரத முதியவர், அகர்வால் ஆகியன துணிச்சலான சொற்பிரயோகங்கள்.
சமகால வேதனை அளிக்கும் சகிப்பின்மைகளின் பகடியாகவும் இவை அமைகின்றன.
ஜனநாயக நாட்டில் ஒரு எழுத்தாளுமையின் நேர்மையான, வீரியமான புனைவை துணிச்சலென்று பதிவு செய்வதுகூட அவசியம்தானா என்று தோன்றுகிறது.
சகிப்பின்மையின் வீச்சு அந்த அளவிற்கு நீடித்திருப்பது ஏமாற்றமடையச் செய்கிறது.
'சின்ன விஷயங்களின் கடவுள்' நாவலைப் போன்றே நினைவோடை உத்திகளாகவும், முன்பின் பதிவுகளாகவும் இந்நாவல் அமைந்திருக்கிறது. இது ஒன்று மட்டுமே இரு நாவல்களுக்கும் இடையே உள்ள ஒத்தகூறு.
சாதிகளை விமர்சித்தலைப் போன்று ஒரே மதத்தின் உட்பிரிவுகளை குறிப்பிடுதல், வரலாற்றுக் குறிப்புகளை நாவலில் இணைத்திருப்பதுவும் வாசிப்பை இலகுவாக்குகிறது.
வெறுப்பவர்களை வணங்குவதாகவும், பிரியமானவர்கள் மீதான அன்பை வெளிக்காட்டாமல் வாழ்வதாகவும் கூறும் காஷ்மீரிகளின் உணர்வுகளை வாசகன் அறிய இயலுகிறது.
ஜந்தர்மந்தரின் உண்ணாவிரத நிகழ்வுகள் பகடியாக நாவலில் இடம் பெறுகிறது.
திருநங்கையரை இன்னல் என்ற வார்த்தைக்கு பொருள் தரும் அளவிலேயே கடவுள் படைத்திருக்கிறார் என்று கூறும் போதும் பணம் கேட்கையில் அவர்களின் அத்துமீறலையும் பதிவு செய்யத்தவறவில்லை ராய்.
இரு மாதங்களாக வாசிப்பில் ஏற்பட்டிருந்த தொய்வினை நீக்கி மீண்டும் மனதிற்கு பிடித்தமான வாசிப்பு சுழலுக்குள் செலுத்திவிட்டது இந்நாவல்.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் சிந்தனையாளர்களின் எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றது.
ஊடகவியலாளரை எதிர்கொண்ட ராய், தனது வாதங்களை அமைதியாக முன்வைத்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்கள் கழித்து 'who the fuck?' என்று பெரும் கோபத்துடன் அவர் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. வாதங்களின் போது அவரது இயல்பான அழகான ஆங்கில விவரணைகள் பெரிதும் கவர்ந்தவை.
பாட்டிலில் அடைக்கப்பட்ட ஆறு, நுகர்வு யுகத்தின் அபத்தங்கள், ஊடகங்களின் அறமற்ற செய்திகள், கனிம வளங்களை சுரண்டும் நோக்கில் பழங்குடியினரை வாழ்விடங்களில் இருந்து விரட்டியடித்தல் ஆழ்ந்த சொற்களுடன் நாவலில் வலுவாக புனையப்பட்டுள்ளது.
அஞ்சும், சுயப்பச்சாதாபம் தளர்வுறச்செய்வது என்கிறாள். வலிய முயன்று தனது சவால்களை எதிர் கொள்கிறாள்.
தொண்ணூறுகளின் மத்தியில் இந்தியா டுடேவில், கேரளத்தில் நாட்டியம் பயின்ற நார்வே இளைஞர் ஒருவர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, கருணையின்றி கொல்லப்பட்ட சம்பவத்தை கட்டுரையாக வாசித்திருக்கிறேன்.
தலை துண்டிக்கப்பட்ட அந்நபரின் பெயர் மறந்துவிட்டது. நன்கு பொட்டலம் செய்யப்பட்ட அவரது பிரேதத்தின் மடியில் அவரது தலை கண்கள் தளர்ந்து மூடிய நிலையிலும், பற்களால் நாக்கினை கடித்த நிலையிலும் வைக்கப்பட்டிருந்தது. நாவலில் இச்சம்பவம் பதிவாகி இருக்கிறது.
'ஒவ்வொரு முறை அவன் உண்மையைச் சொல்லும் போதும் அவர்கள் அவனை மேலும் பலமாக அடித்தார்கள்', 'விசாரணையின்போது ஏரி நீரில் தூக்கி எறியப்பட்ட பூனைக்குட்டி' அம்ரிக் சிங்கின் மன வக்கிரங்களை எடுத்துக் காட்டிய வரிகள் மேற்கண்டவை.
சென்ற ஆண்டில் முகநூலில் காணொளி ஒன்று பகிரப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தனது பணியினை நேர்த்தியாக இறுதி செய்து கொண்டிருந்த தருணம் அது.
கைகள் மட்டுமின்றி அவரது முகமும் பெரும் அதிர்வுடன் காணப்பட்டது. நாவலின் இறுதி வரிகளை எழுதி முடித்தவர், முழுமையின் நிறைவில் லயித்தமை மறக்க முடியாத காட்சி.
அம்மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி அவர்கள் தானென்றும், அந்நாவல் 'பெருமகிழ்வின் பேரவை' என்றும் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
பெருமகிழ்வின் பேரவை- சமகால சகிப்பின்மைகளைக் கண்டு ஆற்றாமையுடன் வருந்தும் தேர்ந்த வாசகர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய புனைவு.
Comments
Post a Comment