வாழ்க்கை வரலாறு

எம் எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு

டிஜேஎஸ் ஜார்ஜ்

தமிழில் ச.சுப்பாராவ்

பாரதி புத்தகாலயம்

256 பக்கங்கள்



 தொண்ணூறுகளின் மத்தியில் பட்டப்படிப்பு முடித்த கையோடு சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் குடிநீர் வழங்கல் நிறுவனம் ஒன்றில் சில மாதங்கள் பணியாற்றினேன்.


மாலை 6 மணிக்கு மேல் களைப்படைந்து அலுவலகத்தில் இருந்து கிளம்பிச் செல்கையில் பெண்கள் குழுவாக கர்நாடக சங்கீதம் இசைப்பது காதுகளில் விழும்.


திரையிசையைத் தாண்டி பாரம்பரிய சங்கீதம் குறித்து ஏதும் அறியாத போதும், காதுகளை இனிமையால் நிறைத்த கீதங்கள் அவை.


 இந்நூலினை வாசித்தபோது இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இசையரசி எம் எஸ் சுப்புலட்சுமி, தனது வாழ்வின் இறுதி நாட்களில் கோட்டூர்புரத்தில்தான் வசித்து இருந்தார் என்பதை அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். காற்றினில் வந்த கீதம் அவருடையதாகவும் இருந்திருக்கலாம்.


 மானுட குரலுக்கு சாத்தியமே இல்லாதது போல தோன்றுவதை சாத்தியமாக்கும் வித்தையான 'கமகம்', எம்எஸ்ஸிற்கு இயல்பாகவே வாய்க்கப் பெற்று இருக்கிறது.


 மணிக்கணக்கில் நீண்ட சங்கீத கச்சேரிகளை அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் சிறுசிறு கூறுகளாகப் பகுத்து, கால அளவை கணிசமாகக் குறைத்து, இசை அன்பர்களின் ஈர்ப்புக்கு சற்றே வழி செய்திருக்கிறார்.


 ராகத்தை முதல் கட்டத்திலும், தாளக்கட்டு இல்லாத தானம், தாளத்தோடு சேர்ந்த பல்லவி, 'துக்கடா' எனப்படும் லேசான கீர்த்தனைகளைத் தொடர்ந்து, மங்களம் எனப்படும் இறுதிப் பகுதியை அடைந்து கச்சேரிகளை நிறைவு செய்திருக்கிறார்.


 9 வயது சிறுமி மதுரையில் சைக்கிள் கடை ஒன்றின் துவக்க விழாவில் மேடை அச்சம் சிறிதுமின்றி கச்சேரி நடத்துகிறார்.


 கச்சேரியின் முடிவில் பெரிதும் பாராட்டி கொண்டாடப்பட்ட அச்சிறுமி மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. அந்த சைக்கிள் கடை பின்னாட்களில் ஆலமரமாக விரிந்து நிலைபெற்றுவிட்ட டிவிஎஸ் நிறுவனம்.


 தேவதாசி சமூகத்தில் பிறந்து, இயல்பான இசை மேதமையை கொண்டிருந்து, திரையுலகில் சில காலம் கோலோச்சி, காதல் வயப்பட்டு, பிறந்த வீட்டிலிருந்து நீங்கி, தீர்க்கமான நிர்வாகி சதாசிவத்தின் கரங்களுக்குள் தன்னை பாதுகாப்பாக ஒப்புவித்து, இசைச் சிகரங்களை அடைந்து, தமிழ் பிராமணப் பெண் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து மறைந்திருக்கிறார் எம்எஸ்.


 மனைவி ஆகாமலேயே கணவராக ஒரு நபரை ஏற்றுக்கொண்டுவிடும் தேவதாசி மரபும், முறையாக திருமணம் செய்து கொண்ட மனைவியைத் தொடர்ந்து தேவதாசி பெண்ணை இணையாக தேர்வு செய்து கொண்டுவிடும் சமூகச் சூழலில், துயருக்கும், எள்ளலுக்கும் அச்சமூக பெண்களுக்கு குறைவு இருந்திருக்க முடியாது.


 தாய்வழி சமூக மரபில் பிறந்த சுப்புலட்சுமியும், சமரசமற்ற தொழில் நேர்த்தி மிகுந்த சதாசிவமும், குணாதிசயங்களைப் பொறுத்த அளவில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த போதும், 60 ஆண்டுகள் திருமண வாழ்வு அமைந்து இருக்கிறது அவ்விணையருக்கு.


 எம் எஸ்ஸின் பணிவும், சதாசிவத்தின் செய்நேர்த்தியும், தேச எல்லைகளைத் தாண்டி உலக அளவில் அவரது இசையை கொண்டு சென்றிருக்கிறது.


 கணவரின் கட்டுப்பாட்டில் முழுமையாக நீடித்து தனது இசையை பெரும் அமைதியுடன் விஸ்தீரணம் செய்திருக்கிறார் எம்எஸ்.


 ஐந்தாவது திரைப்படமான மீராவில் ஏற்பட்டுவிட்ட பக்தி அடையாளத்துடன் திரையுலகை விட்டு நீங்கியதிலிருந்து, 30 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்திருந்த கல்கி கார்டனைவிட்டு மறுபேச்சின்றி வெளியேறியதும், ஆங்கிலப் பாடல் பாடும் யோசனையை கணவர் கூற, உடன்பாடு அற்ற நிலையில், ராஜாஜி எழுதிய அப்பாடலை பாடி விமர்சனங்களுக்கு ஆளானது வரை கணவரின் பேச்சுக்கு பெரிதும் மதிப்பளித்து இருக்கிறார் அவர்.


 அமெரிக்க நாட்டின் அடுக்ககம் ஒன்றில் எம்எஸ் பாடிக் கொண்டிருக்கிறார். அருகாமையில் வீட்டு வேலைகள் நடைபெறும் இரைச்சல்கள் கேட்கிறது. அதையும் மீறி பாடல் தொடர, ஒரு கட்டத்தில் அருகாமை இரைச்சல் நின்றுவிடுகிறது. இசை அரசியின் வாசலுக்கு வந்த நபர்கள், 'இந்த இசை ஒன்றுமே புரியவில்லை, ஆனால் மனதை தொடுகிறது' நாங்களும் வந்து கேட்கலாமா? என வினவுகின்றனர். சுப்புலட்சுமி அம்மாவின் மேதமைக்கு எளிய சான்று இது.


 அறிஞர்கள் சபையாயினும், எளியவர்கள் நிறைந்த சபையாயினும் தனது இசையை பாரபட்சமின்றி அளித்திருப்பது அவரது மேதமையின் மற்றுமொரு அடையாளம். திரையிசையில் ராஜாவிடம் மட்டுமே இக்குணத்தினைக் காணலாம்.


 பெரும் கனவுடன் கட்டமைத்த கல்கி கார்டன்ஸ் இடத்தை தொழிலாளர் பிரச்சினைகளின் போது வந்த விலைக்கு விற்று, இரட்டிப்பு தொகைகளை வழங்கிய சதாசிவம், உயர் பதவிகளில் பலகாலம் இருந்தபோதும் சொந்தமாக வீடுகூட இல்லாமல் இருந்த ராஜாஜி, இருவரின் நேர்மையும், தூய்மையும் நம்ப முடியாதவை.


 95 வயதில் மனைவியின் கரத்தைப் பிடித்த நிலையில் அமைதியாக மரணித்திருக்கிறார் சதாசிவம். பெரும் அரசியல் வீழ்ச்சிக்குப் பிறகு கல்கி கார்டன்ஸில் ஒரு மூலையில் குடில் ஒன்றில் வாழ்வினை நிறைவு செய்திருக்கிறார் ராஜாஜி.


 சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இவ்வளவு மக்கள் வறுமையின் பிடியில் இருப்பது ஒன்றே தன்னை மிகவும் பாதிப்பதாக கூறிய எம் எஸ், மனிதநேயமிக்க கலைஞராக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


 இசையரசியின் வாழ்வினை எழுத்தில் கொண்டு வந்திருக்கும் டி ஜே எஸ் ஜார்ஜ், சிரத்தையுடன் தமிழாக்கம் செய்திருக்கும் ச.சுப்பாராவ், வெளியிட்டிருக்கும் பாரதி புத்தகாலயம் அனைவரும் பெரும் நன்றிக்குரியவர்கள்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

நடைவழி நினைவுகள் II

கதைகள்