நாவல்
அஸீஸ் பே சம்பவம்
அய்ஃபர் டுன்ஷ்
தமிழில் சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம்
95 பக்கங்கள்
நூலின் கணம், பக்கங்களின் எண்ணிக்கையைக் காண்கையில் வாசகன் தீர்மானித்துவிடும் வாசிப்பு காலஅளவு கணிப்புகளை புறந்தள்ளிவிடும் நுட்பமான படைப்புகளில் இந்நூலும் ஒன்று.
//அந்த ஆழமான கண்களின் காதலில் அவன் விழாமல் இருந்திருந்தால்//
நினைப்பிற்கும், நிதர்சனங்களுக்குமான முரண்கள் அஸீஸ் பே - மரியம் காதலில் விரவியிருக்கின்றன.
பழைய காதலை அதன் நினைவுகளின் வெம்மையை ஆண் ஒருவன் பிரயத்தனமின்றி தனது மனைவியிடம் தெரிவிக்க முடிகிறது. பெண்ணிற்கு அது போன்றதொரு சமவாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
மரியம் மீதான அஸீஸ் பேயின் ஈர்ப்பினை அறிந்து கொண்டுவிடும் அவனது தந்தை, மனைவிக்கு ஆறுதல் கூறி, தனது பழைய காதலின் நினைவுகளை மீட்டெடுத்து அவரது மனைவியின் மனதை உடைக்கிறார்.
உண்மையில் தம் பிள்ளைகளின் பதின்வயது காதல்களை பெற்றோர் அறிந்தே இருக்கின்றனர் அது குறித்த பிரக்ஞைகள் பிள்ளைகளுக்கு இருப்பதில்லை.
பெண்களின் மன வலிமை அசாத்தியமானது. ஓரிரு நாட்களில் குடும்பத்துடன் பெய்ரூட்டிற்கு இடம்பெற இருப்பதாக தெரிவிக்கும் மரியம், கிளம்பிச் செல்கையில் மிக இயல்பாக இருக்கிறாள்.
அஸீஸ் பே கணிக்கும் நாடகீயமான நிகழ்வுகள் ஏதும் அங்கு இடம் பெறவில்லை.
உணர்வுகளைத் தூண்டும் கடிதங்களை அங்கிருந்து எழுதியனுப்பும் அவள், காதலனை காண நேரிடும்போது ஆச்சரியம் அடைகிறாள்.
குறுகிய காலத்தில் அவனை விலக்கி விடவும் அவளால் முடிகிறது. டோரோஸின் நட்பு அஸீஸிற்கு ஆறுதல் அளிக்கிறது.
//அவனுக்குள் ஏதோ பிடுங்கப்பட்டதுபோல வலித்தது.//
மரியம் பிரிவின்போது அல்ல, டோரோஸை விட்டு நீங்கும்போதுதான் நாவலில் மேற்கண்ட வரி இடம்பெறுகிறது.
காதலி மரியமின் குணாதிசயங்களுக்கு நேர்மாறாக இருக்கிறாள் அஸீஸின் மனைவி வுஸ்லாத். ஏமாற்றமான வாழ்வை மரணத்துடன் முடித்துக் கொள்கிறாள்.
கலைஞனின் வீழ்ச்சியாகவோ, ரசிப்புகளின் முரண்களாகவோ எண்ணிடத்தகுந்த ஸேகி மதுவிடுதி சம்பவம் அஸீஸ் பேயை துயருக்குள்ளாக்குகிறது.
காதல் என்னும் இயல்பான உணர்வின் தூண்டுதலால் அஸீஸ் பே அடையும் துயரம் அளவிட முடியாதவை.
அத்தியாயங்களற்ற, நெடுங்கதையாக அமைந்திருக்கும் இக்குறுநாவல் தமிழில் எளிமையாக வாசித்திடும் வகையில் கவிஞர் சுகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment