வாழ்க்கை
என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும் என் ராமகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம்
207 பக்கங்கள்
180 ரூபாய்
தோழர் சங்கரய்யாவின் நம்பவே முடியாத, வியப்பளிக்கும் நீண்ட பொதுவாழ்வை, தியாகங்களை அவரது பன்முக ஆளுமையை எடுத்தியம்பும் நூல் இது.
102வது வயதில் மறைந்த தியாகத் தலைவரை 52 அத்தியாயங்களில் விளக்க முயலும் நூல். தேர்வு எழுதி பட்டம் பெற வேண்டிய நிலையில் 15 நாட்களுக்கு முன்பாக சிறைக்குச் செல்கிறார். 18 மாத சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு திரும்புகையில் படிப்புக்கு முடிவு ஏற்படுகிறது.
சிறையில் பத்து நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பின்பு 'தாய்' நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் சங்கரய்யா ஆங்கிலேய அதிகாரிகளுக்கு ஆச்சரியம் அளிக்கிறார்.
பதின் வயதுகளிலேயே மார்க்சிய சித்தாந்தம் தோழரை ஈர்க்கிறது. உலக மக்களின் மேம்பட்ட வாழ்விற்கு மார்க்ஸியமே வழி என்று முடிவு செய்கிறார்.
மிக இளம் வயதிலேயே உயர் பொறுப்புகள் தேடி வருகின்றன. தனது தீவிர சோர்வறியாத செயல்பாடுகளால் வழங்கப்பட்ட பதவிகளுக்கு நியாயம் செய்கிறார் தோழர்.
'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்'
மேற்கண்ட பாரதியின் வரியை தோழர் சங்கரய்யா அளவிற்கு எவராவது தமது வாழ்வில் பின்பற்றி இருப்பார்களா என்பது ஐயத்திற்குரியது.
விருப்பு, வெறுப்பற்ற மக்கள் நலச் செயல்பாடுகளால் எல்லா காலங்களிலும் ஆட்சியாளர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கவும் செய்திருக்கிறார்.
பட்ஜெட் உரை அச்சிட்ட பிறகு தோழரின் ஆலோசனையை ஏற்று இரண்டு வரிகள் கூடுதலாக டைப் செய்யப்பட்டு ஒட்டப்படுகின்றன. தீண்டாமை ஒழிப்பு மாநாடு அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழக அரசால் சிறப்பாக நடத்தப்படுகிறது.
தனது வாழ்வில் சாதி, மதத்தை தாண்டி கலப்பு மணம் செய்தவர், தனது குடும்பத்தினரையும் அத்தகைய சீர்திருத்த மணம் செய்து கொள்ள ஊக்குவிக்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைவதற்கு பெரும் காரணமாக இருந்ததுடன், அதுபோன்ற சங்கம் அழிவிற்கு அப்பாற்பட்டது, தனது செயல்பாடுகளால் நீடிக்க வல்லது என்றும் குறிப்பிடுகிறார்.
சங்க இலக்கியங்களில் தேர்ந்த வாசிப்பு ஒருவருக்கு அவசியம் என்று வாதிடுகிறார். தற்போதைய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசனுக்கு அவர் அளித்திருக்கும் நேர்காணல் இந்நூலின் மற்றுமொரு சிறப்பு.
சவால்மிகுந்த மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமான எட்டு ஆண்டுகள் சிறை வாழ்க்கை தோழர் சங்கரய்யாவை புடம் போட்ட தங்கமாக மாற்றியிருக்கிறது.
விவசாயிகள் சங்கத் தலைவராக அவரது செயல்பாடுகளும் கட்சி அமைப்புகளின் மீதான அவரது விசுவாசமும் மெச்சத்தகுந்தவை.
'தகைசால் தமிழர்' விருதை தமிழக அரசு வழங்கியபோது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர்,விருதுடன் வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் தொகையை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
1995ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.
எளிமையும், அர்ப்பணிப்பும் கொள்கையில் தளராத உறுதியும், ஏழை எளிய மக்களின் மீதான நீடித்த கரிசனமும் கொண்டு, உழைக்கும் மக்களின் தோழனாய் பல்லாண்டுகள் வாழ்ந்து மறைந்த தோழர் சங்கரய்யாவின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
செவ்வணக்கம் தோழர்!
Comments
Post a Comment