கட்டுரைகள்
தெய்வம் என்பதோர்...
தொ பரமசிவன்
காலச்சுவடு பதிப்பகம்
111 பக்கங்கள்
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் விஸ்வகர்மா எனப்படும் கம்மாளர் சமூகத்தினரின் பொறுப்பிலேயே முதலில் இருந்ததெனவும், பிற்காலத்திலேயே சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார் தொ.ப
விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் பாவாடை என்ற உடை தமிழ் பெண்டிருக்கு அறிமுகம் ஆனது என்பது மற்றுமொரு தகவல்.
வணிகன் ஒருவன் தனது முதல் மனைவி நீலியை தந்திரமாக கொன்றுவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான்.
கொல்லப்பட்ட நீலி பேய் உருக்கொண்டு தன் கணவனைப் பழிதீர்க்க திட்டமிடுகிறாள். பெண்ணுரு கொண்டு குழந்தையுடன் கண்ணீர் பெருக்கெடுக்க அங்கிருக்கும் வேளாளர்களிடம் முறையிடுகிறாள்.
வேளாளர்கள் வணிகனிடம் அப்பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறு தீர்ப்பளிக்க, அழுதவாறே மறுக்கும் அவன், அவள் பேயென்றும் தன்னை அவள் கொன்று விடுவாளென்றும் புலம்புகிறான்.
நீலி அவ்வாறு அவனை கொன்று விட்டால் தாம் அனைவரும் அக்னியில் இறங்கி உயிர் துறப்பதாக உறுதி அளிக்கின்றனர் அவர்கள்.
அன்றைய இரவு நீலி வணிகனைக் கொன்று விட மறுதினம் வாக்களித்தவாறு 70 வேளாளர்களும் அக்னிக் குழியில் இறங்கி உயிர் துறக்கிறார்கள்.
நீலிக்கண்ணீர் என்ற சொல்லாடலின் பின்புலமான கதை இது. பெண்ணின் கண்ணீர், எந்த மனதையும் அசைத்து விடுகிறது.
சக்களத்தி என்ற சொல் சகக்களத்தியாகவும், சுமங்கலி, வாழ்வரசியாகவும், கேப்மாரி, காப்பு மாற்றியாகவும் அறியப்படும் போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.
அம்மை கண்டு இறந்தபெண், மாரியம்மனாக திருநிலைப்படுத்தல், பெருஞ் சமயநெறி எளிய மக்களிடம் இருந்து விலகுதல், இறப்பினை முன்னிறுத்தி அறம் சொல்லும் சமண மத நடைமுறைகள், கி.பி ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் ஆயிரம் சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டமை என நூலெங்கும் தகவல்களை இறைத்திருக்கிறார் தொ.பரமசிவன்.
ஜீவகாருண்யத்தை வள்ளலார் உயிர் இரக்க ஒழுக்கமாக நிறுவியமை, மாணிக்கவாசகரின் குறுந்தேசியவாதம், பாரதியின் கண்ணன் பாட்டு குறித்த கட்டுரை, பெரியாழ்வாரின் மகள் ஆண்டாளின் திருப்பாவை பற்றிய குறிப்புகள், இந்நூலில் பிற சிறப்புகள்.
'மேல்சாதி தெய்வங்களின் அருள் வரம்புக்கு விலக்களிக்கப்பட்ட மக்கள், அவற்றின் அதிகார வரம்புக்கு மட்டும் உட்படுத்தப்பட்டனர்' மிகவும் சிந்திக்க வைத்த வரி மேற்கண்டது.
கலக மரபின் பேராளுமையாக பெரியாரைக் குறிப்பிடும் தொ. பரமசிவன், இச்சிறு நூலை அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இணைத்து விடுகிறார்.
Comments
Post a Comment