நாவல்



பஞ்சும் பசியும்

தொ.மு.சி ரகுநாதன்

மின்நூல்

345 பக்கங்கள்



எட்டாம் வகுப்பு வரை இயங்கும் அரசு உதவிபெறும் சிறுபான்மை தனியார் பள்ளியில் இருந்து ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்ட என்னை சென்னைக்கு அழைத்து சென்று படிக்க வைப்பதாக பொய்யுரைத்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்தார்கள்.


புதிய பள்ளி, புதிய சூழ்நிலை, அக்காலத்தில் தேர்ச்சியின்மை நடைமுறையில் இருந்ததால் ஒவ்வொரு வகுப்பிலும் கால்பங்கு மாணவர்கள் வயதில் இரண்டு மூன்று வருடங்கள் மூத்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம் உதை வாங்காமல் தப்பிப்பது பெரும் சவால்.


 மதிய உணவு இடைவேளையில் அவர்களிடம் இருந்து தப்பிக்க புதிதாக பள்ளியில் சேர்ந்தவர்கள் அருகாமை வீட்டு தின்னைகளுக்குச் சென்று உணவுகளை பகிர்ந்து உண்போம்.


 அது நெசவாளர்கள் நிறைந்துள்ள பகுதி. இன்முகத்துடன் பிள்ளைகளை உபசரித்து மகிழ்வார்கள் அம்மக்கள். ஒருநாள் மதியம் கூட்டு, பொரியல் ஏதுமின்றி தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களை அந்த வீட்டம்மாள் வீட்டிற்குள் அழைத்து ஊறுகாய் அளித்து உபசரித்தார்.


 வாஞ்சையுடன் மற்றொரு ஆண்குரலும் எங்களை விசாரித்தது. தரையிலிருந்து சதுர வடிவில் 3 அடி ஆழத்திற்கு குழி அமைக்கப்பட்டிருந்தது. குழியின் மேற்பகுதியில் கச்சிதமாக பொருத்தப்பட்டிருந்த தறியை அப்போதுதான் அவ்வளவு நெருக்கத்தில் கண்டேன்.


 வெறும் கோவணம் மட்டுமே அணிந்திருந்த அந்த நபர், உடலெங்கும் வியர்வை பொங்க, தீவிரமாக நெய்து கொண்டிருந்தார். கைகள், கால்கள், கண்கள், கட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்குடன் முறையாக இயங்கிக்கொண்டிருந்தன.


 சாப்பிட்டு முடிக்க அரைமணிநேரம் ஆனது. இன்று வரை அந்த மனிதரை மறக்க இயலவில்லை. பள்ளியில் தச்சுக்கல்வி பாடவேளையில் தறிகளின்மீது பெரும் மோகம் ஏற்பட அந்நிகழ்வே ஏதுவாகியது.


 இந்நாவலை வாசிக்கையில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.


 உணவை உற்பத்தி செய்யும் விவசாயியைப் போன்று மானத்தைக் காக்க ஆடைகளை நெய்யும் நெசவாளர்களும் போற்றுதலுக்கு உரியவர்களே என்ற நிதர்சனத்தை உறுதியுடன் தெரிவிக்கிறது இந்நாவல்.


 உழைப்பு, சுரண்டல், பஞ்சம், போராட்டம், சங்கம், விழிப்புணர்வு என்று சொற்களால் தோரணங்களை சீராக அமைத்துள்ளார் தொ.மு.சி ரகுநாதன்.


 நெசவாளர்களின் உழைப்பையும், தியாகத்தையும் விளக்கும் தவிர்க்கவியலாத புனைவு இந்நாவல்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்