கதைகள்
கடைசியாக ஒரு முறை
அரவிந்தன்
காலச்சுவடு பதிப்பகம்
118 பக்கங்கள்
100 ரூபாய்
இலக்கிய இதழ்கள் பலவற்றில் வெளியான அரவிந்தனின் ஏழு கதைகளின் தொகுப்பு நூல் இது.
சுயமதிப்பும், வெட்கமும் சற்றும் இல்லாது அதிகாரப் பீடத்திற்கு மண்டியிட்டு மகிழும் கூட்டத்தினரைப் பற்றிய கதை 'மயான நகரம்'.
ராணியின் கண்ணசைவில் அவளுக்கு மகிழ்வளிக்கும் வகையில் அனைத்தும் நடைபெறுகின்றன. சுய சிந்தனையற்ற அக்கூட்டம் நீடித்து அழவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் கைகளைத் தட்டவும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது.
தொகுப்பின் இரண்டாவது மற்றும் இறுதியில் அமையும் கதைகளை அடுத்தடுத்து வாசித்தேன். ஒரே நபரை வியந்தோதும் இரட்டைக் கதைகள் இவை.
ராமமூர்த்தியைப் போன்ற வழிகாட்டிகள் எல்லோரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் குறிப்பாக பதின் வயதுகளில் இருக்கவே செய்கிறார்கள்.
தாம் வலியுறுத்திய விழுமியங்களைத் தாமே உடைத்து விடும் அந்நபர்கள், தன்னை பொய் கூறாதே என்று வலியுறுத்தும் அப்பா, அம்மாவிடம் ஏன் இப்படி பொய்யுரைக்கிறார் என்று வியக்கும் குழந்தையை நினைவுபடுத்துகிறார்கள்.
கடலும், மலையும், வனமும் வியப்பின் உச்சங்களாக மனிதனுக்குத் தோன்றி அவனது அகந்தையை ஒன்றுமில்லாததாக ஆக்கி விடுகின்றன. கதையில் இடம்பெறும் மலைகளைப் பற்றிய குறிப்புகள் சிறப்பானவை. மனைவியின் மரணம், வாழ்வின் ஏற்ற, இறக்கங்கள் மலையின் ஆகிருதியுடன் முன்வைக்கப்படுகின்றன.
ஒருவேளை மரணித்து விட்டால் என்ற யூகத்தில் செல்லும் 'கடைசியாக ஒரு முறை' கதை, சாம்பசிவனின் சிந்தனை வேகங்களை நடந்திடக்கூடிய சாத்தியக் கூறுகளை வலுவாக முன்வைக்கின்றன.
இமயத்தின் முன்னுரை இந்நூலின் சிறப்புகளில் ஒன்று. ஆழ்ந்து வாசித்த, தேர்ந்த வாசகன் மட்டுமே தனது அனுபவத்தை இவ்வாறு எழுதிவிட இயலும்.
முதல் காதலை யாரால் மறந்துவிட இயலும்? தடுமாற்றங்கள், தவிர்ப்புகள், தயக்கங்கள் நிறைந்துவிட்ட அற்புதமான காலகட்டம் அல்லவா அது. எதையோ நினைத்து, எதையோ செய்வது போன்று இருப்பினும் அக்காலத்தின் சின்னஞ்சிறு பசுமை மறக்க இயலாததாக அமைந்து விடுகிறது.
குடிக்கும் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் அவலமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உலகமயமாக்கல் சின்னஞ்சிறு கிராமங்களைக்கூட விட்டு வைக்கவில்லை.
அதீதமான தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்மறைப் பக்கங்களை சொல்லுகிறது 'தனியாக ஒரு வீடு' கதை.
மிகுந்த மன நிறைவுடன் வாசித்து நிறைவு செய்த நூல் இது.
Comments
Post a Comment