நாவல்
நீர்வழிப் படூஉம்
தேவிபாரதி
நற்றிணை பதிப்பகம்
200 பக்கங்கள்
சம்பவிக்கும் மரணம், ஆழ்மன இடுக்குகளில் விரவியிருக்கும் நிகழ்வுகளை மீட்டெடுக்கிறது.
தோழமை, சுற்றங்களுடனான முரண்படும் தருணங்கள், விரும்பத்தகாத சொற்களை அள்ளி இறைத்து, இடைவெளிகளை நீட்டித்து, வருந்தி ஆற்றாமையுடன் நினைவுகூரும் சாத்தியங்களை கலை நேர்த்தியுடன் எழுதிச் செல்கிறார் தேவிபாரதி.
அன்புமேலிட பெரும் வாஞ்சையுடன் தோழமைகளிடம் இயங்குபவர் என்ற போதிலும், மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி அவர்களின் பின்னட்டைக் குறிப்பினை மிகையாகக் கருதவே இடமளிக்காத படைப்பு இது.
வெள்ளந்தியாக வாழ்ந்த காருமாமாவின் மரணத்துடன் துவங்குகிறது நாவல். உரிய மரியாதையுடன் காட்டுக்கு எடுத்துச் செல்லப்படுமா அவரது உடல்? என்று தவித்த நிலையில், மகனின் வருகையில் துவங்கி தேர் பவனியுடன் நிறைவடைகிறது தகனம்.
சிதிலங்களைக் காணநேர்கையில் மனித மனங்களின் துடிப்புகள் எவ்வாறானதாக அமையும்? மனப்பறவையின் அசாத்தியமான வேகம் அளவிடக்கூடியதா என்ன?
மனைவியின் விலகலால் அவமானத்துடன் உடைந்துபோகும் காருமாமா,உடன் பிறந்தவர்கள் மீதும், அவர்தம் பிள்ளைகள் மீதும் தூய அன்பினை அளவின்றி செலுத்துகிறார்.
நற்செயல்கள் எவ்வளவு காலம் கடந்தும் நல்விளைவுகளையே ஏற்படுத்துகின்றன.மனித மனங்கள் சற்றும் எதிர்பாராத தருணங்களில் நிகழ்ந்துவிடக்கூடியவை அவை.
தன்னுடல் வேதனையைக்கூட பொருட்படுத்தாத சௌந்திரா பெரியம்மா,காருமாமாவை உக்கிரமாக சபிக்கிறார்.அவரது மனைவியுடனான விலகலை பெரும் மகிழ்வுடன் கொண்டாடுகிறாள்.
எளிய மனிதர்கள் கொள்ளும் நேசமும், முரண்களும் தேவிபாரதி என்ற அபூர்வ கலைஞனின் கரங்களில், வட்டார மொழியில் காவியமாக உருக்கொள்கிறது.
வாழ்வின் உன்னதங்களெல்லாம் விலையின்றியோ,மலிவாகவோ கிடைக்கவே செய்கின்றன என்று எங்கோ வாசித்த நினைவு, குடிநாவிதராக காருமாமா பண்ணையக்காரர்களுக்கு உழைத்ததை வாசிக்க நேர்ந்தபோது தோன்றியது.
ராசம்மா அத்தையை பெருந்தன்மையுடன் மன்னிக்கும் அவர், ஆவலுடன் மனைவி, குழந்தைகளைத் தேடியலைகிறார்.
நாவலின் துவக்கப் புள்ளியாகவும், மையச் சரடாகவும் அந்த எளிய மனிதனின் வாழ்வும், மரணமும் அமைந்துவிடுகிறது.
தேவிபாரதி என்ற பெருங்கலைஞனின் எழுத்துக்கள் தமிழ் இலக்கியத்தின் பிறிதொரு நல்லூழ்.
Comments
Post a Comment