கட்டுரைகள்




உலகம் சுற்றும் தமிழன்

ஏகே செட்டியார்

மின்நூல்

234 பக்கங்கள்


 முடங்கிக் கிடக்கும் இந்நாட்களில் பயண நூல்களை வாசிப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. அதிலும் பயண இலக்கியத்தின் முன்னோடியாக அறியப்படும் ஏ.கே செட்டியாரை வாசிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது.


 ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்ததாக அறியப்படும் நீரோ மன்னனின் செயலுடன் இப்போதைய வாசிப்புகளை ஒப்பிட முடியவில்லை.


 ஏனெனில் வாசிப்பு ஒன்று மட்டுமே பெரும் நம்பிக்கை அளிக்கிறது.


10 பிறவிகளில் துடிப்பாக வாழ்ந்து அறிந்துகொண்டிருக்க முடிந்த அனுபவங்களை ஒரே பிறவியில் ஏகே செட்டியாரால் சாதிக்க முடிந்திருக்கிறது.


கப்பல் பயணங்கள் குறித்த அவரது கட்டுரை நான்கு வரிகளில் நம்மை கடலுக்கு அழைத்துச் சென்று விடுபவை.


 ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் அவர் எழுதிச் செல்லும் குறிப்புகள் நுண்ணிய அவதானிப்பினால்தான் சாத்தியமாகி இருக்க இயலும்.


 சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஏகே செட்டியாரின் படைப்புகள் (இரண்டு தொகுதிகள்) முழுத் தொகுப்பு நூல்களை கடந்த 4 ஆண்டுகளாக கையில் எடுத்து பார்த்துவிட்டு இயலாமையுடன் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.


 கிண்டிலில் கிடைத்த மின்நூல்கள் அந்த ஏக்கத்தை ஓரளவு போக்கியுள்ளன.


 ஒரு சில நாட்களே ஒவ்வொரு நாடுகளிலும் தங்கியிருந்தவர்  நுட்பமாக தனது பார்வைகளை இலக்கியமாக்குகிறார்.


 உணவகங்களில் அன்பளிப்பு அளித்ததில் இருந்து, குட்டி விமானத்தில் பயணிப்பது வரை அனைத்து நிகழ்வுகளையும் சுவை குன்றாமல் அவரால் எழுத முடிந்திருக்கிறது.


 நூறாண்டுகளுக்கு முந்தைய புகைப்படக்கலை கற்றல்கள், பயணங்கள் தரும் சவால்கள் சமகால வாழ்வின் போதாமைகளை உணர்த்துகின்றன.


 வேகமான ரயில் பயணம், மெதுவான கப்பல் பயணம், துணிச்சலான விமானப்பயணம் அனைத்தையும் சாத்தியமாக்கி இருக்கிறார் அவர்.


 கப்பல்களில் இடம்பெறும் நூலகங்கள் குறித்த அவரது வரிகள் தரும் இன்பமும் ஆறுதலும் அளவிட முடியாதவை.


 சாகச மனநிலையுடன் தான் பெற்றவைகளை பொதுவெளியில் இலக்கியமாக்கி பெரும் பணியாற்றிய ஏ.கே செட்டியாரின் எழுத்துக்கள் எப்போதும் கொண்டாட்டத்துடன் வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்