நாவல்
மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்
விக்தோர் ஹ்யூகோ
தமிழில் குமரன் வளவன்
க்ரியா பதிப்பகம்
112 பக்கங்கள்
'மனிதர்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்திப் போடப்பட்ட மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள்தான்'
மரண தண்டனைக்கும், வறுமைக்கும் எதிரான தனது சமுதாயச் சிந்தனைகளால் இன்றுவரை நினைவு கூரப்படும் விக்தோர் ஹ்யூகோவின் புகழ் பெற்ற குறுநாவலின் தமிழாக்க நூல் இது.
அவன் தனது குற்றத்தை மறுக்கவில்லை, அது திட்டமிட்டதல்ல என்பதே அவனது வாதம். மரணதண்டனை உறுதி செய்யப்பட்டு வண்டியில் கொண்டு செல்லப்படும்போது இளம்பெண் ஒருத்தி உற்சாகமாக கொண்டாடி கொண்டு ஓடி வருகிறாள்.
கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் மரண தண்டனைக் கைதியை ஆவலுடன் காண்பதும், உற்சாக குரல் எழுப்புவதும் அவரவர் மன வக்கிரங்களை வெளிப்படுத்துகின்றன.
கடுங்காவல் தண்டனையைக் காட்டிலும், மரணமே மேல் என்றும் எண்ணுகிறான் அவன். தனியறை ஒன்றிலிருந்து கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உடைகள் மாற்றப்பட்டும், சங்கிலிகள் இடப்படும், உண்பதற்கு தகுதியற்ற ரொட்டிகள் வழங்கப்பட்டும் அழைத்துச் செல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறான்.
'தப்பிவிடக்கூடிய சிறையல்ல சவப்பெட்டி', 'சவக்குழியின் உள்ளிருந்து திறக்க முடியாது'
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நான்கு நபர்களின் சிந்தனைகள் அவனிடம் வந்து செல்கின்றன. தலை துண்டிக்கப்படுவதற்கு முன்பு மொட்டை அடிக்கப் படுகிறது.
'அவர்களின் சிரிப்பு என்னை அழச்செய்தது' என்று கடுங்காவல் தண்டனை கைதிகளைக் காண்கையில் எண்ணுகிறான் அவன்.
பிசேத்ர் சிறைச்சாலையில் மரணத்தைப் பற்றிய தீவிர அச்சத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறான் அவன். தன்னை கருணையின்றி தண்டிக்கும் இச்சட்டம், அதே வேளையில் தனது தாய், மனைவி, மகளையும் தண்டிப்பதாகவும் எண்ணுகிறான்.
தண்டனை நிறைவேற்றப்படும் சதுக்கத்தில் வேடிக்கை பார்க்க பெரும் கூட்டம் அலைமோதுகிறது. பாதிரியாரின் ஆற்றுப்படுத்தல் எவ்வகையிலும் அவனுக்கு ஆறுதலாக அமையவில்லை.
'மகிழ்ச்சியளிக்கிறது என்பதற்காக யாரும் கெட்டவனாக இருப்பதில்லை' என்று கருதும் அவன், அழைத்துச் செல்லப்படும் வண்டியை உருளும் சிறை என வர்ணிக்கிறான்.
இறந்தபின் ஆவியாக வந்து தனக்கு சூதாட்டத்தில் உதவுமாறு கோரும் காவலனைக் கண்டு நகைக்கிறான். மகளுடனான அவனது சந்திப்பு அவனது துக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
'மரண தண்டனையை நிறைவேற்றுபவர்கள் மென்மையானவர்கள்' என்றும் 'அபிமான மன்னர்களுக்குக்கூட கிடைக்காத கைத்தட்டல்கள்' தனக்கு கிடைத்ததாகவும் எண்ணி வருந்துகிறான்.
நாவலின் இறுதிப் பக்கங்களை நெருங்குகையில் கைகளில் ஏற்படும் நடுக்கங்களை அறிய முடிகிறது.
கியோத்தின் என்று குறிப்பிடப்படும் அவ்வியந்திரம், வரலாற்றுப் பாடங்களில் கண்ட கில்லட்டின் என்று அறிகையில் பெரும் அச்சம் ஏற்படுகிறது.
தண்டனை நிறைவேற்றலின் கடைசி தருணத்திலும் மன்னிப்பையே வேண்டி அவன் நிற்கிறான்.
99 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 58 நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நூலின் பின்னுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகளின் முடிவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 15 சதவீத நபர்கள் குற்றமற்றவர்கள் என்பதை அறியும்போது வருத்தம் ஏற்படுகிறது.
விக்தோர் ஹ்யூகோவின் சமுதாய சிந்தனைகள், சமுதாய மாற்றங்களாக உருவெடுத்து இருப்பதையும், 150 ஆண்டுகள் கழித்து பிரான்சில் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதையும் நூலின் இறுதிப் பக்கங்கள் தெரிவிக்கின்றன.
அச்சமூட்டும் அவனது இறுதித் தருணங்களை விக்தோர் ஹியூகோ மிக அழகாகப் புனைவிலும், குமரன் வளவன் மொழிபெயர்ப்பிலும் கொண்டு வந்துள்ளனர். க்ரியாவின் மற்றுமொரு அழகியல் மிகுந்த படைப்பு இது.

Comments
Post a Comment