நாவல்
நட்சத்திரவாசிகள்
கார்த்திக் பாலசுப்பிரமணியன் காலச்சுவடு பதிப்பகம்
262 பக்கங்கள்
பத்து வருடங்களுக்கு முன்னர் இரா.முருகனின் 'மூன்று விரல்' நாவல் நூலகத்தில் இருந்து பெற்றுக் கொண்டு வந்து வாசித்தேன். ஐடி துறையினரை மையப்படுத்தி எழுதப்பட்ட அந்நூலை வாசித்து முடித்தபோது அத்துறை சார்ந்த புரிதல் ஓரளவுக்கு ஏற்பட்டது.
அந்நாவல் ஒரேயொரு பணியாளரின் வாழ்வையும், பணிகளையும் பெரும்பாலும் மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. கார்த்திக் பாலசுப்பிரமணியனின் நட்சத்திரவாசிகளின் களம் மிகவும் விசாலமானது.
எளிய விவரணைகளில் உள்ளது போன்று தோன்றினாலும், தேர்ந்த சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். துறைசார்ந்த வழக்குச் சொற்களுக்கு அவர் அளித்திருக்கும் விளக்கங்கள், பயன்படுத்தப்பட்ட விதம் மிகவும் அருமை.
அலுவலக உள்குத்து வேலைகள், பணி நெருக்கடி அளிக்கும் மன அழுத்தங்கள், அவற்றை மீறிய நட்புகள், வலியுடன் கூடிய பிரிதல்கள், கார்த்திக்கின் சொற்களில் வாசகனை அவனது துவக்ககால பணி அனுபவங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியவை.
நுட்பமான வர்ணனைகளும், சூழலின் நுண்ணிய அவதானிப்புகளும் அவரது எழுத்துக்களில் நிறைந்திருக்கின்றன.
பொதுவாக தனியார் துறைகளில் பணி நிலையற்ற தன்மை இருப்பினும், ஐடி துறைகளில் உள்ளது போன்ற சூழல்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பவை.
மரத்தில் விரவிச் சென்றிருக்கும் ஆணிவேரின் ஆழமும், வலிவும் எப்படியிருந்த போதிலும், உடனடியாக தீர்மானிக்கப்பட்ட மரம், வலிய முயன்று பிடுங்கி எறியப்படும் சாத்தியங்கள் இங்கு அதிகம்.
'மத்திய வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவனை கூசி போகச் செய்யும் ஆடம்பரம்', 'மனது வெந்து புழுங்கியது உட்புழுக்கம் வேர்வையாய்க் கொட்டித் தீர்த்தது'.
வாழ்த்துகள்! கார்த்திக்!
காலில் கயிறு ஒன்றை கட்டிவிட்டு, ஓடியாட வரையறுக்ககப்பட்டதொரு வெளியை வழங்கி, செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து, தேவைப்பட்ட நொடியில் கயிற்றை இழுத்து, கட்டினை விடுவித்து கருணையின்றி தூக்கி எறிகின்றனர்.
சாஜுவிடம் அதிகாரத்துடன் நிறுவனத்தின் பக்கம் நின்று கறாராக உரையாடும் வேணு, ஸ்டீபனின் முன்பு கையறு நிலையுடன் தலைகவிழ்ந்து நிற்கிறார்.
இல்லாத மீட்டிங்கை காரணமாகக் கூறி சாஜூவிடம் இருந்து நழுவிச் செல்கிறான் நித்திலன்.
அடிப்படை ஊழியர்களின் பார்வையிலிருந்தும் நாவல் சில அத்தியாயங்களில் பயணிக்கிறது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பேருந்து மட்டுமே செல்லும் அகல சாலையாக இருந்த தாம்பரம்-வேளச்சேரி பகுதியின் சமீபத்திய அசுர வளர்ச்சி ஐடி துறையை சார்ந்த அமைந்துள்ளது நாவல் வாசிப்பில் தெளிவாகிறது.
அவ்வகையில் என்னை கல்லூரி காலங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டது இந்நூல்.
தனியார் மருத்துவமனையொன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு மனநல மருத்துவ பகுதியில் ஒரு நபரைக் கண்டேன். வெளிறிப்போன அவரது முகம் அளவற்ற சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்டது போன்று இருந்தது. அவர் ஐடியில் பணியாற்றி மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர் என்று அறிந்தேன்.
சொந்தஊர் சிறுவன் ஒருவன் பொறியியல் படிப்பு முடித்தபின், ஐடி துறையில் நுழைந்து ஒரு சில வருடங்களிலேயே குடும்பக் கடன்களை வெற்றிகரமாக அடைத்து, சகோதரிக்கு திருமணம் செய்துவைத்து, சொந்த வீட்டையும் கட்டி முடித்தான்.
நாவல் வாசிப்பு மீட்டெடுத்து தந்த நினைவுகள் மேற்கண்டவை.
கார்த்திக் கூறுவது போன்று எங்கு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இங்கு எவருக்கும் புரிவதில்லை. ஐடி பணி அனுபவம் நிச்சயம் மலர்ப்பாதையன்று. ஐடி ஊழியர் களின் சிறுவயது உடல் உபாதைகள் பரிதாபத்துக்குரியவை.
துடிப்பாக பணியாற்றும் பார்கவி, நியாயமான எதிர்பார்ப்புகள் மறுக்கப்பட்டு வேணுவிடம் நகைப்புக்கு ஆளாகி, மனச் சமநிலை இழந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் அறைகள் வாங்கிச் செல்கிறாள்.
தனக்குரிய நிலைக்காக போராடும் நித்திலன், பணியில் வெற்றிபெறும் நிலைக்கு சென்றாலும், மீராவிடம் வாழ்வில் தோல்வி அடைகிறான்.
நாவலின் மிகச் சிறப்பான பகுதியென்று 39வது அத்தியாயத்தை சொல்லிவிடலாம். நாவல் வெளியாகிய தருணத்தில் இப்பகுதியை காலச்சுவடு இதழில் வாசித்திருந்தேன்.
அரசுத் துறைக்கு வருவதற்கு முன்னர் தனியார் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 500 ரூபாய் ஊதிய உயர்வுக்கு கூட இரந்து கொண்டிருந்த இழி நிலைகளை நினைவு படுத்தி விட்ட அத்தியாயமும் இது.
'வார்த்தைகளே வாழ்க்கையை நிர்ணயித்து விடுகின்றன. சில சமயங்களில் பேசிய வார்த்தைகளும், பல சமயங்களில் பேசாமல் விட்ட வார்த்தைகளும்'.
மிகவும் சரி கார்த்திக்!
சார்ந்த துறை குறித்த அனுபவங்களை மிக அழகாக இலக்கியம் ஆக்கிவிட்டீர்கள்! மனமார்ந்த வாழ்த்துகள்!!
Comments
Post a Comment