கதைகள்




ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு 2

மின்நூல்

253 பக்கங்கள்


 ஜெயகாந்தனின் 10 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.


 30 வயதைக் கடந்தவன் திருமண ஏக்கம் கொண்டு அச்சாபீஸில் கடுமையாக உழைத்து வருகிறான்.


 அச்சடிக்கப்படும் திருமண பத்திரிகைகள் அவனுள் கிளர்த்தும் ஏக்கம், துல்லியமான வார்த்தைகளில் வெளிப்பட்டு இக்கதைக்கு செவ்வியல் தன்மையை அளித்து விடுகிறது.


 தொடர்ச்சியான, ஓய்வற்ற அவனது அசாத்திய உழைப்பு, உடல் உபாதைக்கு இட்டுச் செல்ல,


 இனி அவனுக்கு ஒரு போதும் திருமண ஏக்கம் ஏற்படப் போவதில்லை என்ற வகையில் கதை நிறைவுபெறுகிறது.


 எப்போதோ நடைபெற்ற தவறு- அது நியாயமற்றது எனினும்- மனவெழுச்சியின் ஊடான பகிர்வின் போது மன்னிக்க இயலாத செயலாக கருதப்பட்டுவிடுகிறது.


 கிடைத்துவிடும் தண்டனையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி கையறு நிலைக்கு இட்டுச் சென்றுவிடுகிறது.


 கால ஓட்டத்தில் மென்மையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், மறுக்கப்படும் தருணங்களில் புதிய வார்ப்புகளுக்கான சாதக சூழல்கள் நிகழாமல் போய் விடுகிறது.


 நிகழ்வுகளை முதிர்ச்சியுடன் அணுகும் பக்குவங்கள் இன்மை இக்கதையில் வெளிப்படுகிறது.


 எண்பதுகளில் தொலைக்காட்சித் தொடராக கண்டு வியந்த கதை 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி'  'ஹெரான்' ராமசாமி வெட்டியானாக நடித்திருப்பார்.


 இடுகாட்டில் சிறுவயது பிரேதங்கள் புதைக்கப் படுகையில் சூழலை மறந்து பாடியபடியே தனது வேலைகளில் ஈடுபட்டு பெரும் அதிருப்திக்கு ஆளாகும் வெட்டியான், நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பின் தனக்கு கிடைத்த பிள்ளை சிறுவயதில் மரணித்துவிட, புலம்பித் தவிக்கிறான்.


பிறரது இழப்புகளும், துன்பங்களும் நமக்கு வெறும் தகவல்களாகவே மிஞ்சிவிடும் நிலை இது.


'அக்னி பிரவேசம்' கதையையும் காட்சி ஊடகங்களில் கண்ட நினைவு வருகிறது.


 அச்சிறு பெண்ணின் தாயார் அடையும் பதற்றம், இதேபோன்ற தருணங்களில் பிறர் வீட்டுப் பெண்களை கருணையின்றி தான் பேசியமை அத்தாயை பரிதவிக்கச் செய்கிறது.


 மனக்கலக்கங்களை வலிய முயன்று அகற்றி தனது மகளுக்கும் நம்பிக்கை அளிக்கிறாள் அவள்.


சிறியதும், பெரியதுமான இப்பத்து கதைகளுள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் சொல்லாடல்கள் மிகுதியாக இடம் பெறுவதைக் காணலாம்.


 அதற்கு ஜெயகாந்தன் கதையிலேயே பதில் தந்து விடுகிறார்.


'எனக்குத் தெரிந்ததைத்தானே நான் எழுத முடியும்?'

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்