நாவல்
துலக்கம்
ஒரு பிழையின் மறு விசாரணை
யெஸ் பாலபாரதி
மயில் புக்ஸ்
120 பக்கங்கள்
120 ரூபாய்
தமிழ்ச் சமூகத்தில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் நடமாடுகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்களிடம் அன்பு நிறைந்திருக்கிறது.
ஆணோ, பெண்ணோ சிறப்புக் குழந்தைகளை பெற்றவர்களை சமூகம் பரிதாபமாகத்தான் பார்க்கிறது. அப்பார்வைகளில் ஏளனமும் நிறைந்துள்ளதை மறுக்க இயலாது.
இப்படியான புரிதலற்ற மனிதர்கள் நிறைந்துள்ள சமூகத்தில், ஆட்டிச நிலையாளன் ஒருவன் தொலைந்து போகையில், அவனும் அவனைப் பெற்றவர்களும் அனுபவிக்க நேர்ந்திடும் கொடுமைகளை விறுவிறுப்பாக, மிகையின்றி சொல்கிறது இந்நாவல்.
தம்பதியினரிடம் துவக்கத்தில் தோன்றும் 'நமக்கு மட்டும் ஏன் இப்படியொரு நிலை?' 'யார் இதற்குக் காரணம்?' போன்ற குழப்பங்களுக்கு முடிவாக நிலையை ஏற்றுக் கொள்ளுதல், என்பது தீர்வாக அமைகிறது.
பொறுமையும், விடாமுயற்சியும், சகிப்புத்தன்மையும் சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு மிகுதியாகத் தேவைப்படுவது போன்று, மனித நேயமும், கருணையும் பொதுச் சமூகத்திற்கு தேவைப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளியில் ஆட்டிச நிலையாளனான சிறுவனை சக மாணவர்கள் கிண்டல் செய்து துன்புறுத்த, அவனது தந்தை வருந்தி அழுதுவிட்டு பள்ளியை விட்டு அச்சிறுவனை அழைத்துச் சென்றார். அடுத்த சில நாட்களுக்குப் பிறகு அச்சிறுவன் அவனது வீட்டிற்கு அருகில் இருந்த ஏரியில் மூழ்கி இறந்து போனது பெரும் சோகம்.
நாவலில் அஸ்வின் காணாமல் போவதும், பெற்றவர்கள் கலங்கித் தவிப்பதும், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மனிதாபிமானத்துடன் உதவுவதும் எதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அக்குழந்தை காவல் துறையினரிடம் மாட்டிக் கொண்டு உதைபட்டு கதறுவதை வாசிப்பது கடினமாக இருந்தது. நெஞ்சில் ஈரம் வற்றிப்போன மனிதர்களாகத்தான் பெரும்பாலான நபர்கள் இங்கு நடமாடி வருகின்றனர். ஆட்டிச நிலையாளர்கள் காணாமல் போவது குறித்த தகவல்கள் மிகுந்த கவலை அளிக்கின்றன.
சிறப்புக் குழந்தைகளை பரிதாபத்துடன் பார்க்க வேண்டியதெல்லாம் இல்லை, சமூகத்தில் அவர்தம் இடங்களை உறுதி செய்வதும், அரவணைப்பதுவுமே நாகரிக சமூகத்தின் கடமை.
ஆட்டிசம் உள்ளிட்ட சிறப்புக் குழந்தைகளின் நிலை குறித்த புரிதல்களை இந்நாவல் ஏற்படுத்திவிடுகிறது. அஸ்வின் பெற்றோருடன் இணைந்து விடுவது நமக்கும் பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது.
சிறப்புக் குழந்தையை முறையாக கவனித்துக் கொள்ளும் பொருட்டு (அல்லது இரண்டாம் குழந்தையும் சிறப்புக் குழந்தையாகவே பிறந்துவிடுமோ என்ற அச்சத்தாலோ) இரண்டாம் குழந்தையை தவிர்த்து விடும் கல்யாண்-கமலா தம்பதியினர், அக்குழந்தையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பினை வீட்டு வேலையாளிடம் அளித்தமைக்காக பெரிதும் கலங்குகின்றனர்.
கமலா தனது வேலையை விட்டு விடுவதும், அஸ்வினை பாதுகாக்க உறுதி கொள்வதும் மகிழ்ச்சியான விஷயம்.
சிறப்புக் குழந்தைகளை முழுமையாக இயலாவிட்டாலும் ,தேவையான அளவுக்காவது பெற்றோரும், உறவினர்களும் புரிந்து கொண்டாலே போதும், மாற்றங்கள் இங்கு தானாகவே நிகழ்ந்துவிடும்.
நினைவுகள் மட்டுமே மிஞ்சியிருக்கப்போகும் இம்மனித வாழ்வில் சிறப்புக் குழந்தைகளை அன்பாக நடத்துவதும், அரவணைப்பதுவுமே மனிதாபிமான செயல்களாக இருக்க முடியும்.
இரண்டாம் பதிப்பு கண்டிருக்கும் இந்நாவல் பெரும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment