நாவல்

 மலை மேல் நெருப்பு 

அனிதா தேசாய் 

தமிழில் அசோகமித்திரன் சாகித்ய அகாடமி வெளியீடு 

154 பக்கங்கள்

 170 ரூபாய் 



மனிதரின் ஆளுமைகள் சிறு குழுக்களில் பெரிதாக வெளிப்பட்டு விடுகின்றன. பலவீன மனதுடையவர்களின் தற்காப்பு நடத்தைகள்கூட அங்கு எடுபடுவதில்லை.


 தனிமை, மனித வாழ்வின் மற்றொரு பரிமாணம். அன்பையும், அங்கீகாரத்தையும் தேடியலையும் மனம்தான் தவிர்க்க முடியாத வண்ணம் தனிமையையும் நாடுகிறது. இது ஒரு அழகிய நகை முரண்.


 நந்தா கவுல் கரிக்னானோவில் தனிமையில் வசிக்கிறார். பழைய நினைவுகளும், ஏக்கங்களும் சிந்தனையில் ஊசலாடுகின்றன.


 வெறும் நான்கு கதாபாத்திரங்களுடன் 200 பக்கங்களுக்கும் குறைவாக எழுதப்பட்டுள்ள இந்நாவல், கட்டமைப்பு நேர்த்தியுடன் தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்திவிடுகிறது.


'நான்தான் என் கடமைகளை நிறைவு செய்து விட்டேனே, என்னை ஏன் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்கிறீர்கள்?' என்ற வரி, வயது முதிர்ந்தவளின் ஆரம்பகால கடின உழைப்புகளையும், முதிர்ந்த காலத்து அமைதி தேடலையும் வெளிப்படுத்துகிறது.


 தனது கொள்ளுப்பேத்தி ராக்காவின் வருகை நந்தா கவுலுக்கு எவ்வித பெரிய மகிழ்ச்சியையும் அளிக்காதது போன்றே ராக்காவிற்கும் அதே வண்ணம் அமைந்துவிடுகிறது.


 சமையல்காரன் ராம்லால் நந்தா கவுலுக்கு விசுவாசமாகவும், ராக்காவிடம் வாஞ்சையுடனும் நடந்து கொள்கிறான். எத்தகைய பெருவாழ்வும் இறுதித் தருணங்களில் வெறும் நினைவுகளாக மட்டுமே மிஞ்சி விடுவதை எடுத்துரைக்கிறார் அனிதா தேசாய்.


 ஈலா தாஸின் வருகை கரிக்னானோவில் வசிக்கும் மூவரிடமும் எவ்விதத் தாக்கமும் ஏற்படுத்தி விடுவதில்லை. எளிய மனிதர்கள் தமது சாமானிய வாழ்வு குறித்த எவ்வித தன்னிரக்கமும் இன்றி வாழ்தல் ஆசீர்வதிக்கப்பட்ட குணமாகும்.


 ஈலா தாஸ் தனது துயர்களை வெளிக்காட்டாமல் நடந்து கொள்கிறாள். மிகைப்படுத்திய அவளது பேச்சுக்கள் நந்தா கவுலுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.


 தனது தோழியின் மீதான அவளது அபிமானம் நாவலில் வெளிப்படுகிறது. உபசரிப்புகள் மிகவும் எளிமையாக நிகழ்வது போன்று உரையாடும் நேர அளவும் குறுகியதாக அமைந்துவிடுகிறது.


 பதில்களை எதிர்பாராமல் திரும்பிச் செல்லும் ஈலா தாஸ், வழியிலேயே  கொல்லப்பட்டு விடுவதும் காவல் நிலைய அழைப்பைத் தொடர்ந்து உடலை அடையாளம் காணும் பொருட்டு நந்தா கவுல் விரைவதும் நாவலின் இறுதிப் பகுதிகளாக அமைகின்றன.


 மலைப்பகுதி குறித்த குறித்து ராக்காவிற்கு சமையல்காரன் ராம் லால் விளக்கும் இடங்கள் சிறப்பு. அசோகமித்திரன் மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவரது படைப்பு மொழி நுழையாத வண்ணம் மூல நூலாசிரியரின் பார்வையே படைப்பில் மேலோங்கியுள்ளது.


 சாகித்ய அகாடமியின் நூல்கள் இந்திய இலக்கியங்களை மூல மொழிகளில் இருந்து பிற மொழிகளுக்கு கடத்திவிடும் பணியை சிறப்பாக செய்து விடுகின்றன.


 மனித வாழ்வின் தவிர்க்கவியலா பகுதிகளில் ஒன்றாக தனிமை நீடிப்பதை எளிமையாக எடுத்துக்காட்டிடும் அனிதா தேசாய், நாவலை மிக அழகாக மொழிபெயர்த்த அசோகமித்திரன், வெளியிட்டிருக்கும் சாகித்திய அகாடமி தமிழ் வாசகர்களின் நன்றிக்குரியவர்கள்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்