வரலாறு

இந்தியாவின் சுருக்கமான வரலாறு

ஜான் ஜுபர்ஸிக்கி

தமிழில் அரவிந்தன்

காலச்சுவடு பதிப்பகம்

296 பக்கங்கள்

விலை ரூபாய் 190



 துணைக்கண்டத்தின் 5000 ஆண்டு கால நெடிய வரலாற்றை 300 பக்கங்களுக்குள் மிகவும் சுருக்கமாக தொகுத்து அளித்திருக்கிறார் ஜான் ஜூபர்ஸிக்கி. வரலாற்றை வாசித்தல் மிகவும் மகிழ்வு தரக்கூடியது. மேம்பட்ட எழுத்தில் இந்திய வரலாற்றை வாசித்தது பெருமகிழ்வு அளித்தது.


 200 ஆண்டுகால  காலணிய ஆட்சி குறித்து பள்ளி பாடப் புத்தகங்களில் வாசித்தது என்றபோதும், ஆர்வமிகுதியில் தேர்வு நோக்கிலன்றி வரலாற்று நூல்களை வைத்திருந்தபோது நண்பர்களின் ஏளனத்திற்கு ஆளாகியது நினைவுக்கு வருகிறது.


 இந்நூல் ஐயாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று இந்திய வரலாற்றை ஜோடனையின்றி விளக்கிச் செல்கிறது. ஈர மண்ணில் எழுதி வைத்த குறிப்புகள் வரலாற்று ஆவணங்களாக மாறியது வியப்பை ஏற்படுத்திவிடுகின்றன. பாரபட்சமற்ற சமூகமாக, நகர அமைப்பில் வாழ்ந்த மக்களைக் குறித்து அறிகையில் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன.


 ஆப்பிரிக்காவுக்கு அடுத்து துணைக் கண்டமே மனிதர்கள் நெடு நாட்களாக வசித்த பகுதி என்பதை அறிகையில் நமது பாரம்பரியம் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது. சிறுவயதில் பள்ளிப் பாடங்களில் அசோகர், கனிஷ்கர், சந்திரகுப்தர், ஹர்ஷர் குறித்து படித்ததெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டன. 


மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' நூலில் 12 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்களின் வரலாறு விரிவாகத் தரப்பட்டிருக்கும். வண்ணமயமான மன்னர்கள் குறித்து அறிந்து கொண்டது அப்போதுதான். அந்த நூல் இன்றுவரை பல ஆயிரம் பிரதிகள் விற்றுக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. 


தென்னிந்திய வரலாற்றையும் குறிப்பிட்ட அளவுக்கு பதிவு செய்திருக்கிறது இந்நூல். தஞ்சைப் பெரிய கோயில் அதிகார மையமாகவும், வங்கியைப் போன்றும் செயல்பட்டுள்ளதை பதிவு செய்திருக்கிறது. காஞ்சியைத் தலைநகராக கொண்டு தென்னிந்தியாவை ஆண்ட பல்லவர்கள் வணிக சாம்ராஜ்யமாக தமது அரசை நடத்தி இருக்கின்றனர்.


இன்று காஞ்சி நகரின் வீதிகளும், கோயில்களும் பழைமையை, பாரம்பரியத்தை எடுத்துக்காட்டிடும் பணியை அமைதியாக செய்து கொண்டிருக்கின்றன.


 'கோயில்களில் இருந்த அபரிமிதமான செல்வமே வட இந்திய இந்து அரசர்களின் இலக்காக அவற்றை ஆக்கின' என்ற குறிப்பு நூலில் இடம் பெறுகிறது.


 முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் கோயில்களைக் கொள்ளையடித்து தமது இருப்பிடங்களுக்கு கொண்டு செல்வதை இலக்காக வைத்திருந்திருக்கின்றனர்.சோமநாதர் கோயிலின் மிகப் பிரம்மாண்டமான சிவலிங்கம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு மசூதிகளின் படிக்கற்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.


முப்புறமும் கடலால் சூழப்பட்ட சோமநாதர் கோயில் பதினோராம் நூற்றாண்டில் துருக்கி மன்னரான கஜினி முகம்மதுவினால் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமின் வருகை துணைக்கண்டத்தில் சாத்தியமாகி இருக்கிறது.


 வீரத்திற்கு குறைவில்லாத போதும் பண்டைய இந்திய அரசர்கள், அந்நியர்களிடம் பரிதாபமாக பலமுறை தோற்று இருக்கின்றனர். ராஜபுத்திர மன்னன் பிரித்விராஜனை கோரி முகம்மது வீழ்த்தியதைத் தொடர்ந்து டெல்லியில் சுல்தானகம் உருவாகி இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக கோரி மன்னனுக்கு உதவியவர் பிரித்விராஜனின் மாமனார் ஜெயச்சந்திரன். 


பலவீனமான அரசியல் கட்டமைப்பு, மன்னர்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி அந்நியர்களின் நுழைவை இலகுவாக்கி உள்ளது. குதுப்மினார் இந்து, சமணக் கோயில்களின் தூண்கள், கற்கள் முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டதாக நூலில் குறிப்பு இடம்பெறுகிறது.  இல்துமிஷின் மகள் ரஸ்யா பேகம், முதல் மற்றும் ஒரே பெண் சுல்தானாக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ரஸ்யாவுக்குப் பிறகு மன்னரான பால்பன் இல்த்துமிஷால் அடிமையாக வாங்கப்பட்டவர் என்பது மற்றொரு சுவாரஸ்யம்.


 பால்பனைத் தொடர்ந்து கில்ஜி, துக்ளக், லோடி வம்சத்தினர் தொடர்ச்சியாக துணைக் கண்டத்தை ஆண்டிருக்கின்றனர், முகலாயர்களின் வருகைக்கு முன்புவரை. 


வெறும் நான்கு ஆண்டுகளே இந்தியாவை ஆண்ட பாபர், மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியதும்,மகன் ஹுமாயூனின் மீது வைத்த அளவற்ற பாசத்தால் உயிர் துறந்ததும், சகோதரர்களின் தொடர்ச்சியான தொந்தரவுகளாலும், ஷெர்ஷாவின் வீரத்தாலும் ஆட்சியை இழந்த ஹுமாயூன்,  14 ஆண்டுகளுக்குப் பிறகு இழந்த ஆட்சியை மீட்டதும் பெரும் வியப்புகள்.


முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பின்பு காலணி ஆட்சியாளர்களிடம் அகப்பட்ட இந்தியாவைப் பற்றியும் சுதந்திரப் போராட்டம் துவங்கி இன்றைய அரசியல்  சூழல்கள்வரை அழகாக விளக்கிச் செல்கிறது இந்நூல்.


 வரலாற்று நூலை இலக்கியத் தரத்தில் எழுதிய ஜான் ஜூபர்ஸிக்கி, தமிழாக்கம் செய்த அரவிந்தன், விலையடக்கப் பதிப்பில் வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகம் ஆகியோரின் பணிகள் மிகவும் சிறப்பானவை.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்