கட்டுரைகள்
காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை
அருந்ததி ராய்
தமிழில் மணி வேலுப்பிள்ளை
காலச்சுவடு பதிப்பகம்
119 பக்கங்கள்
விலை ரூபாய் 140
தனது தனித்த அறச்சீற்றங்களுக்காகவும், துணிச்சலான செயல்பாடுகளுக்காகவும் அறிவு தளத்தில் பரவலாக அறியப்பட்ட அருந்ததி ராயின் காஷ்மீர் குறித்த, நாடாளுமன்ற தாக்குதல் குறித்த ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
இச்சிறு நூலை விரைவாக வாசித்துவிட இயலவில்லை. தேய்ந்துபோன, தட்டையான, பொது மனநிலையை, கூர்மையாக கேள்விக்குள்ளாக்கும் கருத்துகள் நிறைந்தவை இக்கட்டுரைகள்.
கடந்த நூற்றாண்டின் தீர்க்கவே இயலாத பிரச்சனையாக நீடித்த காஷ்மீர் விவகாரம், 21ம் நூற்றாண்டிலும் அவ்வாறே நீடித்த வண்ணம் உள்ளது. மதவாதிகளுக்கு தேசப்பற்று மற்றும் எதிர் தரப்பினரின் மீது வெஞ்சினம் ஏற்படுத்தவும் இவ்விவகாரம் பயன்பட்டு விடுவது தெளிவு.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எவ்வித பின்புலமும் அற்ற சாமானியர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுகையில் எவ்வித கொடுமைகளை எல்லாம் அனுபவிக்க நேரிடுகிறது என்பதை ஒவ்வொரு கட்டுரையும் தீர்க்கமாக பேசி விடுகிறது.
சித்திரவதை முகாம்கள், விசாரிக்கப்படும் முறைகள் குறித்து வாசித்து அறிகையில் நமது பாதுகாப்பு அமைப்புகளின் மீது வருத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
இப்படி ஒரு பிரச்சனையை தேசம் எதிர்கொள்ளாத நிலை இருந்திருப்பின் எத்தகைய வளர்ச்சியை தேசம் எட்டி இருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
முகமது அப்சல் குரு அவசரம் அவசரமாக தூக்கிலிடப்பட்டதன் மர்மம் சாமானியருக்கு எங்கே தெரிந்து விடப் போகிறது, பல ரகசியங்கள் இங்கு பார்வைக்கு வராதபோது 'கூட்டு மனசாட்சி' போன்ற சொல்லாடல்கள் நமக்கு தேவைப்படவே செய்கின்றன.
Comments
Post a Comment