கதைகள்
புத்த மணியோசை
கன்னடச் சிறுகதைகள்
தொகுப்பும் மொழியாக்கமும்
கே நல்லதம்பி
எதிர் வெளியீடு
136 பக்கங்கள்
விலை ரூபாய் 180
வெவ்வேறு சிறுகதையாசிரியர்களின் 10 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அனைவரும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் என்பதே இத்தொகுப்பின் ஒற்றையான பொதுப்பண்பு.
மற்றபடி வெவ்வேறு சூழல்கள், தனித்த கதை மாந்தர்களைக் கொண்டுள்ள கதைகள் இவை.
இரவுப் பயணத்தில், தனித்த சூழலில், ஆண் மட்டும்தான் தாபத்தை வெளிப்படுத்த தகுதியானவனா என்ற கேள்வியை முன்வைக்கிறது 'பயணம்'.
இணைதலுக்குப் பின்பு ஆண் சிலந்தியை கொன்று விழுங்கும் பெண் சிலந்தி 'பிளாக் விடோ'வை பெரும் ஆர்வத்துடன் ரசித்து உற்று நோக்கும் கோகிலா, அவளது வாழ்வின் பெரும் சோகத்தை அறிந்து தனது வாழ்வுடன் பொருத்திப் பார்க்கும் மற்றொரு பெண் 'பதி' என்றவாறு பெண் மையக் கதைகள் இத்தொகுப்பில் அமைகின்றன.
மாய யதார்த்த வாதத்தில் அமையும் 'நான் கொன்ற பெண்', அறத்தை மீட்டெடுக்க முயலும் 'புத்த மணியோசை', சமூக ஊடகங்களின் தாக்கம், அபாயங்களைக் குறித்து மிகச்சிறிய அளவில் புனையப்பட்டிருக்கும் 'டைப்பிஸ்ட் நிராகரித்த கதை' அனைத்தும் நல்ல வாசிப்பனுபவத்தை அளித்தன.
மெய்நிகர் உலகம் எத்தனையோ ஆசுவாசங்களை அளித்தாலும் சிறியதொரு தருணத்தில் நிஜ உலகம் வெளிப்பூச்சின்றி அப்பட்டமாக வெளிப்படுகையில், ஏமாற்றமும் வருத்தமும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன.
சாத்தியக் கூறுகளை கற்பனையான தளங்களில் அடுக்கி புனையப்பட்டிருக்கும் 'எ ஸ்மால் வேர்ல்ட்' கதை, இத்தொகுப்பின் மற்றொரு சிறப்பு.
10 சிறுகதைகளைக் கொண்ட இச்சிறு நூல் வாசகனை நிச்சயம் ஏமாற்றம் அடையச் செய்யாது.
Comments
Post a Comment