கட்டுரைகள்
பணமதிப்பழிப்பு
நாடும் நடப்பும்
ம மு அரங்கசுவாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
56 பக்கங்கள்
விலை ரூபாய் 15
"அவலை நினைத்து உரலை இடித்த கதை"
இச்சிறுநூல் நவம்பர் 8 2016 அன்று இந்தியப் பிரதமர் அறிவித்த ரூபாய் 500,ரூபாய் 1000 நோட்டுகள் மதிப்பழிப்பு செய்யப்பட்ட செய்தியையும், அதன் தொடர் நிகழ்வுகளான மக்களின் துயர்கள் ஆகியவை குறித்து மட்டும் விளக்கவில்லை.
காகிதப் பண வரலாறு என்ற அத்தியாயத்தில் துவங்கும் நூல், பண்டமாற்று, காகிதப்பணம், சீனாவின் காகிதப்பணம், டெல்லி சுல்தான்களின் நாணய சீர்திருத்தம், காலனி இந்தியாவில் வெளியிடப்பட்டு புழக்கத்திலிருந்த நோட்டுகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களையும் பதிவு செய்கிறது.
சுதந்திர இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் செயல்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை, அவற்றுள் முன்னாள் பிரதமர் இந்திராவின் ஆட்சியில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் தகவல்களையும் மிகச்சுருக்கமாக இந்நூல் அளிக்கிறது.
பணமதிப்பழிப்பு என்ற இரண்டாவது அத்தியாயத்தில் பணமதிப்பழிப்பு செய்த உலக நாடுகளின் பட்டியலும் நடைபெற்ற ஆண்டுகளும் இடம்பெறுகின்றன.
கணக்கில் வராத பணத்தை 'அசுத்தப் பணம்' என்று குறிப்பிடுதல் மிகவும் பொருத்தம். தானாக முன்வந்து அசுத்தப் பணத்தை தெரிவித்து 30 சதவீத வரி செலுத்தி, 70 சதவீதப் பணத்தை வெள்ளையாக்கிக் கொண்ட நிகழ்வுகள் 90களின் மத்தியில் நிகழ்ந்தவை.
அதன் மூலம் பல கோடிகள் அரசு வருவாய் ஈட்டியபோதும், அசுத்தப் பணத்தின் பிரம்மிப்பூட்டும் ஆகிருதி சாமானியர்களை பெரிதும் அச்சம் கொள்ள வைத்தது.
நவம்பர் 8 2016 அன்று இரவு பிரதமர் ஊடகங்களில் பணமதிப்பழிப்பு குறித்து ஆற்றிய உரை நூலில் முழுவதுமாக இடம்பெறுகிறது. அப்போது புழக்கத்தில் இருந்த 85 சதவீத ரூபாய் நோட்டுகள் 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலானவை.
எவ்வித முன்னேற்பாடும் இன்றி அதிரடியாக அவை மதிப்பழிப்பு செய்யப்பட்டமையால் ஏற்பட்ட அவதிகளை, 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை, சிறு தொழில் வணிகர்கள் அழிந்ததை, அத்தனைக்குப் பிறகும் அசுத்தப் பணம் மீண்டு எழுந்ததை இந்நூல் உறுதியாக விவரிக்கிறது.
Comments
Post a Comment